சவுக்கு சங்கர் உள்ளிட்ட யார் மீதும் பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை: அமைச்சர் ரகுபதி

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை நேற்று திறந்துவைத்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது வரவேற்கத்தக்கது. இண்டியா கூட்டணியின் மீது வெறுப்பை உருவாக்கும் வகையிலான பிரதமரின் பிரச்சாரம், பாஜக தோல்வியை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது. பாஜக கூட்டணிக் கட்சிகளில் தேர்தல் ஆணையமும் ஒன்று.

சவுக்கு சங்கர் காரில் கஞ்சா கைப்பற்றப்பட்டதற்கு உரிய சாட்சிகள் இருக்கின்றன. அவர் உட்பட யார் மீதும் பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை.

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் அரசு சட்டக் கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகள் தொடங்குவது குறித்து பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும். இந்த வெற்றி தமிழக அரசின் 3 ஆண்டுகால சாதனைக்குப் பரிசாக அமையும்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்ற வேண்டும். அப்போதுதான், அதிமுக சரியான எதிர்க்கட்சியாக இருக்கும். அதை விட்டுவிட்டு வேறுவகையான விமர்சனங்களில் ஈடுபடுவது, அவரது பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

அதிமுக செங்கோட்டையன் அல்லது வேலுமணி தலைமைக்கு மாறுமா என்பது மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பின்னரே தெரியும். ஆனால், அந்தக் கட்சியில் பெரிய பிளவு உண்டாவதற்கான வாய்ப்பு உள்ளது. பிளவை ஏற்படுத்தும் பணியை பாஜக செய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE