நீல்கிரிஸ் டர்பி பந்தயத்தில் வென்ற ராயல் டிஃபெண்டர் குதிரை

By செய்திப்பிரிவு

உதகை: உதகை குதிரை பந்தயத்தின் முக்கியப் போட்டியான நீல்கிரிஸ் டர்பியை `ராயல் டிஃபெண்டர்' குதிரை வென்றது.

ஆண்டுதோறும் கோடை சீசனின்போது நீலகிரி மாவட்டம் உதகையில், மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் குதிரைப் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டு 137-வது குதிரைப் பந்தயம் கடந்த மாதம் 6-ம் தேதி தொடங்கியது. இதற்காக பெங்களூரு, சென்னை,புனே உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500 பந்தயக் குதிரைகள் வரவழைக்கப் பட்டுள்ளன.

இதில், முக்கியப் போட்டியான நீல்கிரிஸ் டர்பி பந்தயம் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு பரிசுத் தொகையாக ரூ.77 லட்சம் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 7 பந்தயங்கள் நடைபெற்றன. இதில் 5-வது பந்தயமாக நீல்கிரிஸ் டர்பி நடந்தது. 1,600 மீட்டர் தொலைவு கொண்ட இந்தப் பந்தயத்தில் 11 குதிரைகள் பங்கேற்றன. இதில், ராயல் டிஃபெண்டர் குதிரை அசாத்தியமாக ஓடி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற குதிரையின் உரிமையாளருக்கு கோப்பை மற்றும் ரூ.38.12 லட்சம், பயிற்சியாளருக்கு ரூ.4.62 லட்சம், ஜாக்கிக்கு ரூ.3.47 லட்சம் வழங்கப்பட்டது.

ராயல் டிஃபெண்டர் குதிரையின் உரிமையாளர் ஏ.சி.முத்தையாவுக்கு, மெட்ராஸ் ரேஸ் கிளப்தலைவர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா, ஹெச்பிஎஸ்எல் நிறுவனத் தலைவர் சுரேஷ் ஆகியோர் கோப்பையை வழங்கினர். பயிற்சியாளர் ஜெ.செபாஸ்டியன், ஜாக்கி சாய்குமாருக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

இரண்டாம் இடம் பிடித்த குதிரைக்கு ரூ.14.62 லட்சம், 3-ம் இடம் பிடித்த குதிரைக்கு ரூ.6.35 லட்சம், 4-ம் இடம் பிடித்த குதிரைக்கு ரூ.3.17 லட்சம் வழங்கப்பட்டது. குதிரை பந்தயத்தை உள்ளூர் மக்கள் மட்டுமன்றி, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் கண்டு ரசித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE