மாம்பலம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகளை ஜூலைக்குள் முடிக்க திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம்’ என்ற திட்டத்தின் கீழ், தெற்குரயில்வேயில் 116 நிலையங்கள் மேம்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளன.

அந்த வகையில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் சென்னை கடற்கரை, பூங்கா, பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு ஆகியரயில் நிலையங்களில் மேம்பாட்டுபணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, மாம்பலம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தற்போது சீரான வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மாம்பலம் ரயில் நிலையத்தில் ரூ.14.70 கோடி மதிப்பில் மறுமேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு வசதியாக, மேற்கு மாம்பலம் பக்கத்தில் புதிய டிக்கெட் பதிவு அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. அனைத்துநடைமேடைகளிலும் தரைத்தளம் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.

ரயில் நிலையத்தின் நடைமேடைகளில் பழைய மேற்கூரைகளை அகற்றி, புதிய மேற்கூரைகள் அமைக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் விதமாக, நிலையத்தில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மேற்கு மாம்பலம் பகுதியில் டுவீலர் பார்க்கிங் வசதி மேம்படுத்தப்படும். இதுதவிர, பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

நிலையத்தில் மின்தூக்கி அமைக்க கட்டுமானப்பணி முடிந்துள்ளது. புதிய ரயில் டிக்கெட்பதிவு அலுவலகம், நடைமேடையில் சிக்னல் பணி ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை வரும் ஜூலைக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE