உலக செவிலியர்கள் தினம் கொண்டாட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: உலக செவிலியர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். போர்க்களத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய வீரர்களுக்கு கைவிளக்கேந்திச் சென்றுமருத்துவம் அளித்த ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான மே 12-ம் தேதி உலக செவிலியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் நேற்று தமிழகம் முழுவதும் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செவிலியர்கள் கேக் வெட்டி செவிலியர் தினத்தை கொண்டாடி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

சென்னையில், ராஜீவ்காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் செவிலியர் தினத்தை கொண்டாடினர். இந்நிலையில் செவிலியர் தினத்தையொட்டிஅரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: செவிலியர் பணி என்பது தொழில் அல்ல. ஊதியத்திற்கு அப்பாற்பட்ட தொண்டு. நோயின் தன்மை அறிந்து, நோயாளிகளைத் தேற்றும் தாய் உள்ளம் கொண்ட செவிலியர்கள் தாய்க்கு நிகரானவர்கள். தற்போது ஆண் செவிலியர்களும் இப்பணியில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட செவிலியர்களுக்கு செவிலியர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: உலகில் தாய்க்கு இணை யாருமில்லை. அத்தகைய தாய் பட்டத்தைப் பெற்றவர்கள் செவிலித்தாய்கள் தான். எந்த வித வெறுப்பும், சலிப்பும் இல்லாமல் மனிதர்களுக்கு சேவை செய்யும் உன்னத பிறவிகள் அவர்கள். அவர்களின் உழைப்பும், தியாகமும் போற்றப்பட வேண்டும். அவர்களை இந்த நாளில் வணங்குவோம். நன்றி செலுத்துவோம்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதில் முக்கியபங்கு வகிக்கும் செவிலியர்களுக்கு சர்வதேச செவிலியர் தின வாழ்த்துக்கள். செவிலியர்களின் கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் மருத்துவத் துறையில் அனைவரின் சேவைகளுக்கும், மனமார்ந்த நன்றி.

பாமக தலைவர் அன்புமணி: உலகில் ஈடு இணையற்ற சேவை என்றால் அது செவிலியர் பணி தான். ஆனால், அதற்கேற்ற ஊதியமும், அங்கீகாரமும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்தக் குறையைபோக்கும் நோக்குடன் தான் நடப்பாண்டுக்கான உலக செவிலியர் நாளை ‘‘நமது செவிலியர்கள், நமதுஎதிர்காலம், கவனிப்பின் பொருளாதார சக்தி” என்ற தலைப்பில் கொண்டாட உலக செவிலியர்கள் கவுன்சில் தீர்மானித்துள்ளது.

அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தான் இதன் நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செவிலியர்கள் அனுபவித்து வரும் குறைகளைக் களைந்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.

டிடிவி தினகரன்: காலிப்பணியிடங்களை நிரப்புதல், பணி நிரந்தரம் செய்தல், மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு என மருத்துவத்துறையில் தொடரும் நீண்டநாள் குறைபாடுகளை களைந்து தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் நம் உயிரை காக்கும் செவிலியர்கள் அனைவரும் மனநிறைவுடன் பணியாற்றுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இதைப்போல் அரசியல் தலைவர்கள் பலர் செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துஉள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE