அன்னையர் தினம்: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: நாடு முழுவதும் இன்று (மே 12) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரபலங்கள், பொதுமக்கள் பலரும் அன்னையர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்: “உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு அம்மா! தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் நாள் வாழ்த்துகள்! ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து அன்னையரைப் போற்றுவோம்!”, என்று தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: “உலகின் ஈடு இணையற்ற உறவு, ஒப்பீடற்ற தியாகத்தின் திருவுருவம், மனிதர்களுக்கு மாதா, பிதா, குருவாக இருந்து வளர்த்தெடுக்கும் தெய்வம், தந்தை தொடங்கி, கணவன், மகன் என பலரின் வெற்றிக்கு பின்னிருக்கும் சக்தி. மனித வாழ்வின் அனைத்துக்கும் ஆதாரமாக திகழ்பவர்கள் அன்னையர்களே. நீங்கள் இன்றி நாங்கள் இல்லை என்ற உண்மை அவர்களுக்கு மட்டுமே பொருந்தும். நம் ஒவ்வொருவரையும் தீராக்கடனாளியாக்கிய அன்னையரை உலக அன்னையர் நாளில் வணங்குவோம்; அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம்” என்று கூறியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: “அம்மா, என்ற சொல்லை உச்சரிக்கும்போது, அதிமுகவுக்கு பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றுத் தந்து, தமிழக மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுதான் நமக்கெல்லாம் வருகிறது. போற்றுதலுக்குரிய அன்னையர் அனைவரும் பூரண நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் நிறை வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, உலகம் முழுவதும் வாழும் அன்னையர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த 'அன்னையர் தின' நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை: “தாயின் அன்பையும் தாய்மையின் பெருமையையும் போற்றும் அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் குடும்பத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் ஓயாமல் உழைத்து, அனைவரையும் இணைக்கும் மையப்புள்ளியாகத் திகழும் தாய்மார்களின் கடின உழைப்பும், தியாகங்களும் போற்றுதலுக்குரியது. நம் ஒவ்வொருவர் வாழ்விலும் தாய்மார்கள் வகிக்கும் முக்கியப் பங்கிற்கு நன்றி செலுத்துவோம். இனிய அன்னையர் தின வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: “உலகில் மெழுகுவர்த்திகளே வெட்கப்படும் அளவுக்கு ஈகங்களைச் செய்பவர்கள் அன்னையர் தான். உயிர் கொடுத்தது மட்டுமின்றி உண்டி கொடுத்தது, ஊக்கம் கொடுத்தது, உயர்வு கொடுத்தது எல்லாமே அன்னையர் தான். தாம் பெற்ற வலிகளையும், வேதனைகளையும் தமது குழந்தைகள் பெறக்கூடாது, தாம் பெறாத பெருமைகளையும், உயர்வுகளையும், சிறப்புகளையும் தமது பிள்ளைகள் பெற வேண்டும் என்ற சிந்தனை அன்னையைத் தவிர எவருக்கும் வராது. எப்படிப் பார்த்தாலும் தியாகத்தின் திருவிளக்கு அவர்கள் தான். உலக அன்னையர் நாளில் அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம். அவர்களை மனதில் குடியமர்த்தி எந்நாளும் வணங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE