சென்னை பெரியார் நகரில் ரூ.110 கோடியில் 6 தளங்களுடன் சிறப்பு மருத்துவமனை: தமிழக அரசு தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ரூ.110 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சிறப்பு மருத்துவமனை கட்டிடம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

சென்னை பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய மூன்று அடுக்கு சிறப்பு மருத்துவமனை கட்டிடம் ரூ.55.07 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு 2023-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், மேலும் கூடுதலாக மூன்று தளங்கள் கட்ட ரூ.54.82 கோடி மதிப்பீட்டுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

தமிழக அரசின் பொதுப்பணித் துறை மூலம் கட்டப்படும் இப்புதிய மருத்துவமனை கட்டிடம் ரூ.110 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும்ஆறு தளங்களுடன், படுக்கைவசதிகளுடன் வடிவமைக்கப்பட் டுள்ளது. இந்த மருத்துவமனை கட்டிடம் மிக விரைவில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

மருத்துவ வசதிகள்: இந்த மருத்துவமனை கட்டிடத்தின் தரை தளத்தில் தீவிர சிகிச்சை பிரிவுகள், நவீன சலவையகம், மத்திய கிருமி நீக்கல் துறை, வாகனம் நிறுத்துமிடம் போன்ற வசதிகள் இடம் பெறுகின்றன. முதல் தளத்தில் பிரசவ வார்டுகள், மறுவாழ்வு வார்டுகள், ரத்த வங்கி, 3 அறுவை சிகிச்சை அரங்கங்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வார்டுகள் போன்ற வசதிகள் அமைக்கப்படுகின்றன.

இரண்டு மற்றும் மூன்றாம் தளத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட வார்டு, மருத்துவ வார்டுகள், தனி அறைகள் மற்றும் முழு உடல் பரிசோதனை பிரிவு, குழந்தைகள் வார்டு, பிரசவ வார்டு, தீவிர மற்றும்அதிதீவிர சிகிச்சை பிரிவுகள்போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படு கின்றன.

நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் தளங்களில் சிறப்பு புறநோயாளிகள் பிரிவு, ஆய்வகம், நீரிழிவு வார்டு, இதயவியல் வார்டுகள், கேத் ஆய்வகம் மற்றும் 4 அறுவை சிகிச்சைஅரங்கங்கள், புற்றுநோய் வார்டு,கூட்டரங்கம் ஆகியன அமைக்கப் படுகின்றன.

மேலும் இக்கட்டிடத்தின் அனைத்து தளங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிடம், பொது கழிப்பிடம், 4 மின்தூக்கிகள், 3 படிகட்டுகள், சாய்வுதளம், கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி, தீயணைப்பு உபகரணங்கள் போன்ற பிற வசதிகளும் அமையக்கூடிய வகையில் இக்கட்டிடப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

கொளத்தூர் தொகுதி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு சிறப்பான மருத்துவ வசதிகளை அளிக்கத்தக்க மருத்துவமனையாக பெரியார் நகர் மருத்துவமனை மேம்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு தமிழக அரசின்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE