சபரிமலை மண்டல பூஜையில் தினமும் 80,000 பேருக்கு மட்டுமே அனுமதி: ஐயப்பா சேவா சமாஜம் கடும் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

திண்டுக்கல்: சபரிமலையில் கார்த்திகை மாதம் தினமும் 80,000 பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளதை ஏற்க முடியாது என சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சமாஜத்தின் தேசிய பொதுச்செயலாளர் ராஜன் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சபரிமலை திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் கார்த்திகை மாத நடைதிறப்பின்போது நாள்தோறும் முன்பதிவு செய்த 80,000 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது. இதை வன்மை யாகக் கண்டிக்கிறோம். கார்த்திகை மாதத்தில் 1.50 கோடி பக்தர்கள் தரிசனம் செய்யக்கூடிய நிலையில் இதைக் கட்டுப்படுத்தும் வகையில் 60 நாட்களில் 48 லட்சம் பேர் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்குத்தான் தேவஸ்தானம் உள்ளது. பக்தர்களைக் கட்டுப்படுத்துவது என்பது தேவஸ்தானத்தின் வேலை கிடையாது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும். பக்தர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும். சபரி மலைக்கு வரும் பக்தர்கள் பம்பையில் இருந்து சந்நிதானம் வரை எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி நடந்து செல்ல அனுமதிக்க வேண்டும். சந்நிதானத்தைச் சுற்றி திருப்பதியில் இருப்பதுபோல் 200 செட்டுகள் அமைத்து அங்கு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, மின்விசிறி போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

தினமும் 80,000 பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி என்ற கட்டுப்பாடு இல்லாமல் பக்தர்கள் வருகைக்கு ஏற்ப தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக தேவஸ்தானத்திடம் மனு கொடுக் கப்பட்டுள்ளது. தேவஸ்தானம் வருமானத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பது குறித்து தேவஸ்தானம், காவல் துறை, கேரள மாநில அரசு கண்டுகொள்வது கிடையாது.

ராஜன்

சபரிமலையை கேரள அரசு கையகப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசியுள்ளோம். அதேபோல், தமிழக முதல்வர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்துப் பேச உள்ளோம். நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு அரசுப் பேருந்தில் 4 மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. தேவஸ் தானம் இலவசமாக நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE