சிவகாசி: “உரிமம் யார் பெயரில் உள்ளதோ, அவருக்கு தான் பட்டாசு ஆலை பாதுகாப்பு குறித்த முழு பொறுப்பும் உள்ளது. ஆலையின் அனைத்து நடவடிக்கைகளும் உரிமையாளர் மற்றும் போர்மேனுக்கு தெரிந்திருக்க வேண்டும். குத்தகைக்கு விடப்பட்ட பட்டாசு ஆலையில் விபத்து நடந்தால், உரிமம் யார் பெயரில் உள்ளதோ அவர்தான் பொறுப்பு” என்று ‘பெசோ’ அதிகாரி விளக்கம் அளித்தார்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) சார்பில், தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க (டான்பாமா) மண்டபத்தில், ‘பட்டாசு தொழில் பாதுகாப்பு’ குறித்த விழிப்புணர்வு கூட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. சிவகாசி பெசோ கிளையின் முதன்மை கட்டுப்பாட்டு அலுவலர் (பொ) கந்தசாமி பேசுகையில், “மனித தவறுகளால் மட்டுமே விபத்துக்கள் நடக்கிறது என கடந்து செல்ல முடியாது. ஒரு சில விபத்துகள் மட்டுமே மனித தவறுகளால் நடக்கிறது. பெரும்பாலான விபத்துக்கள் விதிமீறல்களால் நடக்கிறது. ஆண்டுதோறும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்திக் கொண்டே வருகிறோம். ஆனால், விபத்துகள் தொடர்ந்து வருவது வருத்தமான விஷயம்.
பெசோ உரிமம் பெற்ற ஆலைகளில் கடந்த ஓராண்டில் 30 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெடி விபத்தில் 29 உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டின் 5 மாதத்தில் 11 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதில் 25 பேர் உயிரிழந்துள்ளது மிகவும் தீவிரமான விஷயம். இது பட்டாசு தொழிலுக்கு நல்லதல்ல. தொழிலாளர்களை மட்டும் குறை சொல்வதால் பயன் இல்லை. அவர்களுக்கு விதிகள் குறித்த புரிதல் இருக்காது.
உரிமம் யார் பெயரில் உள்ளதோ, அவருக்கு தான் பட்டாசு ஆலை பாதுகாப்பு குறித்த முழு பொறுப்பும் உள்ளது. ஆலையின் அனைத்து நடவடிக்கைகளும் உரிமையாளர் மற்றும் போர்மேனுக்கு தெரிந்து இருக்க வேண்டும். குத்தகைக்கு விடப்பட்ட பட்டாசு ஆலையில் விபத்து நடந்தால், உரிமம் யார் பெயரில் உள்ளதோ அவர் தான் பொறுப்பு. பட்டாசு தொழிலில் லாபத்தை தாண்டி பாதுகாப்பு என்பது முதன்மையாக இருக்க வேண்டும். பட்டாசு தொழிலில் மனிதனால் செய்யக்கூடிய பணிகள்தான் அதிகம். உற்பத்தி செய்யும் இடத்தில் விபத்து நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், விபத்து நடக்கக் கூடாத இடத்தில் விபத்து நடப்பது தீவிரமான விதிமீறல்களால் நிகழ்கிறது.
» மேட்டூரில் பலத்த காற்றுடன் கனமழை: மரம் விழுந்து அரசுப் பேருந்து சேதம்
» வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மே.15 வரை கனமழைக்கு வாய்ப்பு
அதேபோல் இன்று வெடிபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அறையில் விபத்து நடந்துள்ளது. உரிமையாளரின் கவனத்துக்கு வராமல் ஓர் ஆலை இயங்குவது பரிதாபத்திற்குரியது. வெடிபொருட்களை கையாளும் விதிகள் அடங்கிய புத்தகத்தை அனைத்து பட்டாசு ஆலை போர்மென்களுக்கும் கொடுத்து விதிகளை முறையாக பின்பற்ற சொல்ல வேண்டும்.
பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் பெறும் அனைத்து நடவடிக்கைகளும் எளிமையாக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம். பட்டாசு ஆலைகளில் விபத்தை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற்காகவே ஆய்வுகள் நடக்கிறது. ஆய்வுக்கு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆய்வைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். இன்றுடன் விபத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று பேசினார்.
பெசோ வெடிபொருள் ஆராய்ச்சி நிலைய அலுவலர் ஜனா, துணை கட்டுப்பாட்டு அலுவலர் ரவிகுமார் மற்றும் அலுவலர்கள் அப்சல் அகமது, சுமீரன் குமார் ஆகியோர் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பேசினர். இதில் டான்பமா மூத்த தலைவர் ஏ.பி.செல்வராஜன், தலைவர் கணேசன், டிப்மா தலைவர் அசோக், செயலாளர் கண்ணன், டாப்மா செயலாளர் மணிகண்டன் மற்றும் 300 க்கும் அதிகமான பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
‘விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை’ - இந்தக் கூட்டத்துக்குப் பின் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க (டான்பாமா) தலைவர் கணேசன் கூறும்போது, “கடந்த 2008-ம் ஆண்டு பட்டாசு தொழிற்சாலைகளில் ஒரு விபத்து கூட ஏற்படவில்லை. அதேபோல் விதிமுறைகளை பின்பற்றி விபத்து ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பட்டாசு தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் முழு ஆதரவளித்து வருகின்றது.
பட்டாசு வெடி விபத்துகள் ஏற்படும்போது பொதுமக்கள் மத்தியில் பட்டாசு தொழிலுக்கு கலங்கமான பெயர் ஏற்படுகிறது. பட்டாசு இல்லாமல் பண்டிகை கொண்டாட்டமே இல்லை என்ற நிலையில் உற்பத்தியாளர்களும் பாதுகாப்பாக இருப்போம் என உறுதிமொழி எடுத்துள்ளோம். பட்டாசு ஆலைகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, சுய பரிசோதனை செய்து, வரும் காலங்களில் விபத்து இல்லாத நிலைய ஏற்படுத்த வேண்டும். டான்பாமா, டிப்மா, டாப்மா சங்கங்கள் சார்பில் உரிமையாளர்கள் மற்றும் போர்மேன்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் சார்பில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் 3 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 5 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் பட்டாசு தொழிலை நம்பி உள்ளனர். விபத்துகள் இல்லாத வேலைவாய்ப்பை கொடுத்தால்தான் இத்தொழிலுக்கு மரியாதை இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். ஆனாலும் தவிர்க்க முடியாத நேரங்களில் விபத்து ஏற்பட்டு விடுகிறது.
கோடைகாலம் தொடங்கியுள்ளதால் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோளின்படி காலை 6 முதல் 9 மணிக்குள் வெடி மருந்துகள் கலவை மற்றும் மருந்து செலுத்தும் பணிகளை முடித்து விடுகிறோம். அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே இதுகுறித்து சங்க உறுப்பினர்களுக்கு தகவல் அளித்துள்ளோம். சங்கத்தில் உள்ள தொழிற்சாலைகள் சிறிய அளவு கூட விபத்து ஏற்படவில்லை. எதிர்பாராத விபத்து நடந்தாலும், உயிரிழப்பு ஏற்படுவதில்லை. தரமான வேதிப்பொருட்களை மட்டுமே பயன்படுத்துகிறோம். பட்டாசு தொழிலை பாதுகாப்பாக நடத்துவதற்கு அனைத்து சங்கங்களும் முழு ஒத்துழைப்பு வழங்குவோம்.
விதிமீறும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது குண்டாஸ் போடப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளதை வரவேற்கிறோம். பட்டாசு ஆலைகளை குத்தகை மற்றும் உள் குத்தகை விடுவதற்கு அனுமதி கிடையாது. குத்தகைக்கு செயல்படும் ஆலைகளில் விபத்து நடந்தால் பெரிய அளவில் சேதம் ஏற்படுகிறது. ஒரு உயிரிழப்பு கூட நம்மால் ஏற்பட கூடாது என்பதே எங்களது குறிக்கோள். அனைவரும் மகிழ்விக்கவே பட்டாசு உற்பத்தி செய்கிறோம்.
பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை விட அதிக ஊதியமும், அரசு நிர்ணயித்துள்ள போனஸ் தொகை விடங்க நான்கு மடங்கு கூடுதலான போனஸ் தொகையை வழங்கி வருகிறோம். எங்களது லாபத்தில் பெரும் பகுதியை தொழிலாளர்களுக்கு வழங்கி வருகிறோம். தமிழக அரசு சார்பில் போர்மன்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சங்கங்கள் சார்பிலும் போர்மேன்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. கடந்த காலங்களை விட பட்டாசு ஆலைகளில் நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதை முற்றிலும் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம்” என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago