சென்னை: “பட்டாசு ஆலை விபத்துகளில் இழப்பீடு என்பது ஒரு நிரந்தர தீர்வாக அமையாது. வருடா வருடம் வெடி விபத்து நடக்கிறது குடோன்கள் தீப்பற்றி எரிவதும் தொடர்கதையாகவே உள்ளது. இந்த நவீன உலகத்தில் எண்ணற்ற கண்டுபிடிப்புகள் வந்துவிட்டது அதன் மூலம் பாதுகாப்பான தொழிற்பேட்டையை உருவாக்கி பட்டாசுகளை சேமித்து வைக்கலாம். தொழிலாளர்களின் நலன் மட்டுமே முக்கியம் என்று செயல்பட்டு இனிவரும் காலங்களில் ஒரு நல்ல கட்டமைப்புடன் கூடிய பட்டாசு தொழிற்பேட்டையை அரசே உருவாக்க வேண்டும்”, என்று தமாகா இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பேர் பட்டாசு தயாரிக்கும் போது விபத்துக்களால் மரணம் அடைகின்றனர். பட்டாசு என்பது தீபாவளியின் போது மகிழ்ச்சியை தரக்கூடியது. ஆனால் அந்த மகிழ்ச்சி நிழலில் மரணங்கள் இருப்பது மிகவும் சோகக்கதை. இனியாவது இந்த மரணங்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்குமா? நேற்று சிவகாசியில் பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் 298 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் 45 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இத்தகைய நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர்கதையாகி வருகின்றன.
அனைத்து விபத்துகளிலும், தொழிற்சாலை கட்டிடங்கள் தரையில் இடிந்து விழுகின்றன மற்றும் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் எரிக்கப்படுகின்றன. சம்பவ இடத்திலேயே இறப்பவர்களைத் தவிர, சிலர் பலத்த தீக்காயம் அடைந்து சில நாட்களில் இறந்து விடுகின்றனர். மேலும் சிலர் நீண்ட காலம் உயிர் பிழைப்பதும் அதன் பாதிப்பை அனுபவிப்பதும் சோகத்தின் உச்சம். தமிழகத்தில் மொத்தம் 1,482 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1,085 ஆலைகள் இயங்கி வருகின்றன. 6,639 பட்டாசு விற்பனை நிலையங்கள் உள்ளன. இந்தத் தொழிலில் சுமார் ஏழு லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பட்டாசு ஆலைகள் மனித உழைப்பில் தான் இயங்கி வருகின்றன. இதில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள். கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
பெண்களைப் பொறுத்த வரையில் வருமானம் கிடைத்தால்தான் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்பதால் இதில் வேலை செய்கிறார்கள். பட்டாசு ஆலை முதலாளிகளுக்கு பட்டாசு உற்பத்தியை அதிகப்படுத்த, வேலை செய்யும் தொழிலாளர்களின் வேகத்தை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. மேலும் ஒவ்வொரு தொழிற்சாலையும் எவ்வளவு பட்டாசுகள் தயாரிக்க வேண்டும் என்ற வரம்புகளாவது அரசிடம் உள்ளதா? அதிகமாக உற்பத்தியும் அதற்காக வேகமாக வேலை செய்வதும் முதலாளிகளுக்கு தேவைப்படுகிறது. அவர்களுக்கு லாப வெறி தான் முக்கியமே தவிர தொழிலாளர்களின் வாழ்வு அல்ல. அரசும் முதலாளிகள் பக்கம் நிற்பதால் விபத்துகள் தொடர்கதை ஆகிவிட்டன.
» 10 ஆம் வகுப்பு முடிவுகள்: புதுச்சேரி, காரைக்காலில் 89.14 % தேர்ச்சி - முழு விவரம்
» பர்மிங்காம் பல்கலைக்கழகம் - சென்னை ஐஐடி 2வது இணை முதுகலைப் பட்டப்படிப்பு தொடக்கம்
விருதுநகர், கிருஷ்ணகிரி, அரியலூர் போன்ற மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. வானம் பார்த்த விவசாயம் நிலம் காரணமாக வருமானம் மிகவும் குறைவு. வேறு தொழில்கள் இல்லாததால் அனைவரும் உயிரைப் பணயம் வைத்து இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர். பல இடங்களில் பட்டாசு உரிமம் பெற்றவர்கள் நேரடியாக தாங்களே உற்பத்தி செய்வதில் ஈடுபடுவதில்லை. பட்டாசு ஆலையில் உள்ள பல்வேறு அறைகளை பிரித்து சிறிய அளவில் வாடகைக்கு விடுகின்றனர். இது சட்டப்படி குற்றம் என்றாலும், உரிமம் பெற்றவர்களுக்கு இது பற்றி தெரியாது.
சிறிய அறைகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இருப்பதால், ஒரு சிறிய தீப்பொறி கூட பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். அனைத்து தொழிலாளர்களும் தினக்கூலியாக பணிபுரிவதால், அவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கப்படவில்லை. சில இடங்களில் உரிமம் காலாவதியான பிறகும் தொழிற்சாலையை தொடர்ந்து நடத்துவது, குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிக பணியாளர்களை பணியமர்த்துவது, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது என பல காரணங்களால் இதுபோன்ற விபத்துகள் நடக்கின்றன. விதி மீறல்களுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுத்து அப்பாவி உயிர்கள் பலியாவதை தடுக்க வேண்டும்.
விபத்துகளை தடுக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் எவ்வளவு உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்ற வரம்பு, தொழிலாளர்களின் வேலைகளை உடனிருந்து கவனித்து வழிகாட்டக்கூடிய பாதுகாப்பு குழுக்கள், தொழிலாளர்களின் உரிமைகளை பேசக்கூடிய சங்கங்கள் அமைப்பது போன்றவற்றை அரசு செய்ய வேண்டும். சீனா போன்று நமது நாட்டில் உரிய பாதுகாப்பு வசதி இல்லை. அரசு சிப்காட் போன்ற தொழிற்பேட்டைகளில் போதிய பாதுகாப்பு வசதியுடன் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையை ஏற்படுத்தலாம். ஒரு உயிர் பறிபோய் விட்டால் இழப்பீடு என்பது ஒரு நிரந்தர தீர்வாக அமையாது. வருடா வருடம் வெடி விபத்து நடக்கிறது குடோன்கள் தீப்பற்றி எரிவதும் தொடர்கதையாகவே உள்ளது.
பட்டாசு தொழிலில் இருந்து ஆயிரக்கணக்கான கோடிகள் அரசுக்கு வரி வருவாயாக வருகிறது. இவையெல்லாம் அந்தத் தொழிலாளர்களின் ரத்தம் சிந்தும் உழைப்பால் கிடைத்தது. இந்த நவீன உலகத்தில் எண்ணற்ற கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன. அதன் மூலம் பாதுகாப்பான தொழிற்பேட்டையை உருவாக்கி பட்டாசுகளை சேமித்து வைக்கலாம். தொழிலாளர்களின் நலன் மட்டுமே முக்கியம் என்று செயல்பட்டு இனிவரும் காலங்களில் ஒரு நல்ல கட்டமைப்புடன் கூடிய பட்டாசு தொழிற்பேட்டையை உருவாக்க வேண்டும் என தமாகா இளைஞரணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்”, என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago