சென்னை: “வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு முதன்மைக் காரணம். இந்நிலையில், வடமாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அப்பகுதிகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 91.55% மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் பொதுத்தேர்வில் தோற்ற மாணவர்கள் அதை நினைத்து கவலையடையக் கூடாது. அடுத்த மாதமே துணைத் தேர்வுகள் நடத்தப்படவுள்ள நிலையில், அதில் பங்கேற்று தேர்ச்சியடைந்து மேல்நிலை வகுப்பில் சேர வாழ்த்துகிறேன்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் தான் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.58% தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவிகள் 94.53% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ள போதிலும் மேல்நிலைக் கல்விக்கு செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பது வருத்தமளிக்கிறது. பெண்களை குறைந்தபட்சம் பட்ட மேற்படிப்பு வரையிலாவது படிக்க வைக்க பெற்றோர்கள் முன்வர வேண்டும்.
தேர்ச்சி விகிதங்களில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்திருப்பதும், வடக்கு மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரம் முதன்முறையாக 10-ஆம் இடத்தை பிடித்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், இதை விதிவிலக்காகவே பார்க்க வேண்டியுள்ளது. பெரும்பான்மையான வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களின் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதங்கள் தொடர்ந்து கவலை அளிப்பவையாகவே உள்ளன.
தேர்ச்சி விகிதங்களைப் பொறுத்தவரை இந்த ஆண்டும் வடக்கு மாவட்டங்கள்தான் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன என்பது கவலையும், வருத்தமும் அளிக்கிறது. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் தான் கடைசி இடத்தை பிடித்திருக்கிறது. வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், சென்னை, நாகப்பட்டினம் ஆகிய 10 மாவட்டங்களில் நாகப்பட்டினம் தவிர மீதமுள்ள 9 மாவட்டங்களும் வடக்கு மாவட்டங்கள் ஆகும்.
தேர்ச்சி விகிதங்களில் கடைசி 11 முதல் 15 வரையிலான இடங்களப் பிடித்துள்ள தருமபுரி, மயிலாடுதுறை, நீலகிரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் 3 மாவட்டங்கள் வடதமிழகத்தைச் சேர்ந்தவை. மயிலாடுதுறை காவிரி பாசன மாவட்டம் ஆகும். தேர்ச்சி விகிதங்களில் முதல் 10 இடங்களுக்குள் வழக்கமாக வரக்கூடிய நீலகிரி மாவட்டம் இம்முறை கடைசியிலிருந்து 13-ஆம் இடத்தை பிடித்திருப்பதும் கவலையளிக்கக் கூடிய செய்திதான். அந்த மாவட்டத்தின் வீழ்ச்சி குறித்தும் ஆராயப்பட வேண்டும்.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் கூட கடைசி 15 இடங்களில் 10 வட மாவட்டங்கள் தான் இடம்பெற்றிருந்தன. ஆனால், இம்முறை 12 மாவட்டங்கள் இந்தப் பட்டியலில் வருகின்றன. வட மாவட்டங்களின் கல்வி நிலை மேலும் மேலும் சீரழிந்து வருவதையே இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 35 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த அவல நிலைக்கான காரணம் என்ன என்பதை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும் அறிக்கைகளில் தெளிவாக விளக்கி வருகிறேன்.
வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு முதன்மைக் காரணம். வட மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு இரண்டாவது காரணம் அங்குள்ள மக்களின் சமூக, பொருளாதாரக் காரணிகள் தான். இந்த இரு காரணங்களையும் மாற்ற வேண்டும் என்று தான் பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், சமூக நீதிப் பார்வையும், தொலைநோக்குப் பார்வையும் இல்லாத அரசு அதை செய்யவில்லை.
இனியாவது வட மாவட்டங்கள் மீதான பாராமுகத்தையும், பாகுபாட்டையும் கைவிட்டு, வட மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அப்பகுதிகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago