சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேற்று நேரிட்ட பயங்கர வெடிவிபத்தில் 6 பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 14 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியைச் சேர்ந்த சரவணன்(55), செங்கமலப்பட்டி அருகே பட்டாசு ஆலையை நடத்திவருகிறார். இங்குள்ள 20-க்கும் மேற்பட்ட அறைகளில், 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றினர். இந்த ஆலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து நேரிட்டது. இதில், 7 அறைகள் தரைமட்டமாகின. மேலும், 7 அறைகள் சேதமடைந்தன.
தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர், தீயைஅணைத்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் 6 பெண்கள் உட்பட 9 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 14 பேர் மீட்கப்பட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து அங்கு வந்தமத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி ஜனா, மதுரைசரக டிஐஜி ரம்யா பாரதி, விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, தனி வட்டாட்சியர் திருப்பதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
உயிரிழந்தோர் விவரம்: விபத்தில் மத்தியசேனை சந்திரசேகர் மகன் ரமேஷ் (31), சந்திவீரன் மனைவி வீரலட்சுமி (48), வி.சொக்கலிங்கபுரம் குருசாமி மகன் காளீஸ்வரன் (47), சிவகாசிரிசர்வ் லைன் மாயாண்டி மனைவிஆவுடையம்மாள் (75), மச்சக்காளை மனைவி முத்து (52), சக்திவேல் மனைவி வசந்தி (38), இந்திராநகர் கணேசன் மனைவி பேச்சியம்மாள் (எ) ஜெயலட்சுமி (22), கோபுரம் காலனி சக்திவேல் மனைவி லட்சுமி(43), விஜயகுமார்(30) ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களில் ஆவுடையம்மாள், முத்து, பேச்சியம்மாள் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும் ஒரு உடல் மீட்பு: இதற்கிடையில் நேற்று இரவு மத்திய சேனையைச் சேர்ந்த கீதாரி மகன் அழகர்சாமி(35) என்பவரது உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்தது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா கூறும்போது, விதிகளை மீறி ஒப்பந்ததாரர் மூலம் பட்டாசு ஆலை செயல்பட்டுள்ளது, முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் சரவணன் மற்றும் மேலாளர் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்ய,மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
அமைச்சர் ஆறுதல்: வெடி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ெஜயசீலன் ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "பட்டாசு ஆலைகளில் விதிகளை மீறுவது தொடர்பாக, வரும் ஜூன்4-ம் தேதிக்குப் பிறகு அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
அனுமதி பெற்று நிவாரணம்: விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: சிவகாசி விபத்தில் விலை மதிப்பற்றஉயிர்கள் பலியாகி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. திமுக ஆட்சியில் பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாதது, அரசின் மெத்தனப்போக்கை காட்டுகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளசெய்தி அறிந்து வேதனையடைந்தேன். காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைப்பதை தமிழக அரசு உறுதிசெய்வதுடன், அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இதேபோல, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழககாங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவிதினகரன், வி.கே.சசிகலா, முன்னாள் எம்.பி. சரத்குமார் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இன்று பிரேதப் பரிசோதனை: இதற்கிடையே, விபத்தில் உயிர்இழந்தோரின் குடும்பத்தினருக்கு உரிமையாளர் சார்பில் ரூ.10 லட்சம், இறுதிச் சடங்கு செலவுக்கு ரூ.50 ஆயிரம் உடனடியாக வழங்கினால் மட்டுமே உடல்களைப் பெறுவோம் என பட்டாசு தொழிலாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். அவர்களிடம் ஆர்டிஓ விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். உயிரிழந்தோர் உடல்கள் இன்று (மே 10) பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago