சென்னை: “சவுக்கு சங்கர் விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் உடனடியாக தலையிட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். திமுக அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்பவர்களை கைது செய்வதும், அவர்கள் நடத்தப்படும் விதமும் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை திமுக அரசு கடைபிடிப்பதாகவே தோன்றுகிறது” என்று இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த மூன்றாண்டு திராவிட மாடல் ஆட்சியில் ஆளும் கட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தார்கள் என திமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் ஏராளமானவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வழக்கு போட்டுள்ளது காவல்துறை. சிலரை வெளிமாநிலங்களுக்கு சென்று கூட பயங்கரவாதிகளைப் போல கைது செய்து வந்தது. இதுபோன்ற வழக்குகளுக்கு கைது தேவையற்ற நடவடிக்கை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அதனால் சாதி,மத மோதலை தூண்டியதாக, பெண்களை அவதூறாக பேசியதாக, போதை பொருள் வைத்து இருந்ததாக புதிது புதிதாக உடனே ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளை பதிவு செய்கிறது காவல்துறை.
சமீபத்தில் சவுக்கு சங்கர் என்ற ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தொடர்ச்சியாக திமுக அரசின் ஊழல்களையும், நிர்வாக சீர்கேட்டையும் விமர்சித்து வந்தார் என்பதை ஊடகங்களில் வெளியான அவரின் பல நேர்காணல்கள் மூலம் அறியலாம். மேலும் காவல்துறையில் உள்ள சில அதிகாரிகள் பற்றி ஆட்சேபகரமான கருத்துக்களை தெரிவித்ததால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை கூறியுள்ளது. ஆனால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு அழைத்து சென்றபோது காவல்துறை வாகனமும் வேறு ஒரு வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த விபத்தில் காவல்துறை வாகனம் மோதிய கார் கடுமையான சேதமடைந்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
சம்பவத்தின் சிசிடிவி கேமரா காட்சியில், திட்டமிட்டு வேண்டும் என்றே விபத்து ஏற்படுத்தி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த முயற்சித்ததாக கருத இடம் இருக்கிறது. அவ்வளவு மோசமாக சேதமான காரில் பயணித்தவர்கள் யார்? நடந்த விபத்தில் அவர்களுக்கு என்ன ஆனது போன்ற விவரங்கள் எந்த ஊடகங்களிலும் வெளியாகவில்லை. அரசும், காவல் துறையும் அதுகுறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆகவே இந்த விபத்து திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதா? அல்லது தற்செயலானதா? என்ற சந்தேகம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. மேலும் விபத்து தகவல்கள் திட்டமிட்டு மறைக்கபடுவதாக தோன்றுகிறது.
» “நான் மிடில் கிளாஸ் குடும்பத்தில் வளர்ந்தவன்” - கேட்ஜெட் குறித்து சிலாகித்த சுந்தர் பிச்சை
» ஊழல், முதல்வர் நாற்காலி, இந்தி... - வசந்தபாலனின் ‘தலைமை செயலகம்’ சீரிஸ் ட்ரெய்லர் எப்படி?
சவுக்கு சங்கர் என்பவர் அவதூறான கருத்துக்களை பொதுவெளியில் பேசியிருந்தால் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதில் யாருக்கும் எவ்வித ஆட்சேபனையும் இருக்கப் போவதில்லை. ஆனால் திமுக அரசு அவரை கைது செய்த விதமும் கொண்டு சென்றபோது நடந்த விபத்தும் புது வகையான என்கவுன்டர் நிகழ்வா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவே அரசும் காவல் துறையும் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டியது கடமையாகும். எனவே சவுக்கு சங்கர் கைதும் அவர் நடத்தப்பட்ட விதமும் திமுக அரசு மற்றும் காவல்துறையின் அராஜகத்துக்கும் மனித உரிமை மீறலுக்கும் எடுத்துக்காட்டாகும்.
திமுக அரசின் குறைகளை விமர்சிப்பவர்களை கைது செய்து சிறையில் அடைத்து அரசுக்கு எதிரான விமர்சன குரல்வளையை நசுக்கும் அராஜக போக்கை தொடர்ந்து திமுக அரசு செய்து வருகிறது. அதற்கு திமுக அரசு நடத்திய ஏராளமான கைது சம்பவங்களே சாட்சி. சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்ற போதும் வேறு ஒரு வழக்கில் மதுரை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்ற போதும் திமுக கட்சியினர் குறிப்பாக திமுக மகளிர் அணியினர் நீதிமன்ற வாயிலில் துடைப்பம் மற்றும் செருப்பு வீசுவது போன்ற அநாகரிகமாக கோஷமிடுவது போன்ற செயல்கள் அரங்கேறியுள்ளது. இந்தச் செயல் கண்டனத்துக்குரியது மட்டுமல்ல நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.
நீதிபதிகள் இதுபோன்ற அநாகரிக செயலை நடத்தியவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்திட கேட்டு கொள்கிறோம். இதனை அனுமதித்தால் பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது போல அநாகரிகமான செயல்கள் மீண்டும் அரங்கேறும் துணிச்சல் ஆளும் கட்சிக்கு வரலாம். காவல்துறை அதிகாரிகளை, பெண் காவலர்களை விமர்சித்ததால் காவல்துறை வெகுண்டெழுந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. அதேசமயம் திமுகவின் மகளிர் அணி தலைவி கனிமொழி கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த இருவர் பெண் காவலரிடம் அத்துமீறி அநாகரிகமாக நடந்து கொண்டனர். செய்தி வெளியே வந்தவுடன் கண்துடைப்பு நாடகத்தை கட்டப் பஞ்சாயத்து போல நடத்தியதை மக்கள் மறந்து இருக்க மாட்டார்கள்.
அதேபோல ஆம்பூர் கலவரத்தில் கலவரக்காரர்கள் பெண் போலீஸாரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார்கள். பல காவலர்கள் கொடுங்காயம் அடைந்தார்கள். ஆனால் அதற்காக தமிழக காவல்துறை வெகுண்டெழவில்லை, மாறாக கலவரக்காரர்கள் மீது கண்துடைப்பு வழக்கு போடபட்டு உடனடியாக ஜாமீனில் வெளிவந்து விட்டார்கள். அந்த வகையில் இந்த கைதுக்கு காவல் துறையின் அறச்சீற்றம் காரணமல்ல என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும். திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு காவல்துறையினர் துணை போயுள்ளனர். கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் காவல்துறையினரின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானதாகவும் சிறையில் வைத்தே தாக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் மத பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் ஆகியோர் தமிழக சிறைச்சாலையில் அனைத்து வசதிகளுடன் சொகுசாக இருப்பது செய்திகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் பெண் காவல்துறை அதிகாரிகளிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என்பதும் உண்மை இல்லை. சமீபகாலமாக பல உயர் அதிகாரிகள் வழக்கை சந்தித்ததும் தண்டனை பெற்றதும் நிதர்சனமான உண்மை. எனவே காவல்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகளின் இச்செயல் அநாகரிகமாகனது மட்டுமல்ல தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை என்பதாகவும் ஐயம் எழுகிறது.
மாநிலம் முழுவதும் தினம்தோறும் ஏராளமான குற்ற சம்பவங்கள் குறிப்பாக போதையால் ஏற்படும் அத்துமீறல்கள் தொடர்ந்து ஊடகங்களில் வெளியாகி வருகிறது. தமிழகம் போதை கடத்தல் கேந்திரமாக மாறிவிட்டதற்கு அன்றாடம் வெளியாகும் செய்திகளே சான்று. ஆனால் திமுக அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மாறாக போதை கடத்தல் மன்னர்களே திமுக கட்சியினராக இருப்பதை பார்க்கிறோம். மேலும் ஆளும்கட்சி காவல்துறை துணையில்லாமல் இந்த அளவு போதை பொருள் புழக்கம் தலைவிரித்தாட முடியாது. இதனை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும் சுட்டிக் காட்டியுள்ளது.
திமுக அமைச்சர் நேரு ஒரு கூட்டத்தில் பேசும்போது ஒரு காவல் துறை அதிகாரியை குறிப்பிட்டு இவர் எப்பேர்பட்ட குற்றவாளியையும் சட்டத்தின் முன் நல்லவராக காட்ட முடியும், அதே போல ஒரு நல்லவரையும் கொடுமையான குற்றவாளியாக காட்ட முடியும் அந்த வகையில் இந்த அதிகாரி நம்ம ஆள் என்று பேசியுள்ளார். அவரது கூற்றின்படி காவல்துறை அதிகாரிகள் திமுக அரசின் கை பாவையாக செயல்படுகிறார்கள் என்பதும், காவல்துறை திமுகவினரின் கடுமையான நிர்பந்தத்தில் உள்ளது என்பது தெளிவாகிறது.
ஊழல் வழக்கில் கைதான திமுக அமைச்சர்களுக்காக ஓடோடி வந்த மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் இந்த விவகாரத்தில் கள்ள மௌனம் சாதிப்பது திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை எடுத்துக்காட்டுகிறது. எனவே இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் உடனடியாக தலையிட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும்.
திமுக அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்பவர்களை கைது செய்வதும் அவர்கள் நடத்தப்படும் விதமும் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை திமுக அரசு கடைபிடிப்பதாகவே தோன்றுகிறது. திமுக அரசு காவல்துறையை அடக்குமுறை அத்துமீறல் அடியாளாக பயன்படுத்துவதை கைவிட்டு மாநில பாதுகாப்புக்கும் மக்கள் நலனுக்கும் பயன்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
திமுக அரசின் தொடர்ச்சியான மக்கள் விரோத, ஜனநாயக விரோத செயல்பாடுகளை மக்கள் கூடி ஜனநாயக ரீதியாக போராட்டத்தை முன்னெடுத்து தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று இந்து முன்னணி பேரியக்கத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
19 hours ago