மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும், திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு மெத்தனமாக இருப்பதாக மாற்றுத்திறனாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆதார், வாக்காளர் அட்டைகளுக்கு நடத்துவதுபோல, சிறப்பு முகாம்கள் நடத்தி, கூடுதல் நிதி ஒதுக்கினால் பதிவு அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர்.
நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் பற்றிய புள்ளிவிவரங்களைச் சேகரிக்கவும், அரசின் திட்டங்களை அவர்களுக்கு எளிதில் கொண்டு சேர்க்கும் நோக்கிலும் அவர்களுக்கு பிரத்யேக தேசிய அடையாள அட்டை (யுடிஐடி) வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. மத்திய அரசால் இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளி கள் உரிமை சட்டம் 2016-ல் அறிவிக்கப்பட்ட 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
ஆன்லைனில் விண்ணப்பம்
இந்த அட்டையைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள், மத்திய அரசின் www.swavlambancard.gov.in இணையதளம் வாயிலாக மட்டுமே பெறப்படுகின்றன. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 11.80 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 2 லட்சம் பேர் தேசிய அடையாள அட்டை பெற விண்ணப்பித்துள்ளனர். இதில், 14,500 பேரின் விவரங்கள் மட்டுமே இதுவரை சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கான அடையாள அட்டை உருவாக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை அளவுக்கு, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று மாற்றுத்திறனாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுபற்றி கேட்டபோது, மாநில மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரக அதிகாரி கள் கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம் 2017 ஜனவரி முதல் செயல்படுத்தப்படுகிறது. அறிவித்து ஓராண்டுக்குப் பிறகு, சமீபத்தில்தான் அடையாள அட்டையை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு அறிவித்தது.
நிதி போதவில்லை
அடையாள அட்டை கோரி விண்ணப்பிப்பதற்கான, மத்திய அரசு இணையதளம் அவ்வப்போது முடங்கிவிடுகிறது. இதனால் விவரங்களைப் பதிவேற்றம் செய்வதில் தடங்கல் ஏற்படுகிறது. தவிர, விண்ணப்பதாரர்களின் தகவல்களை உள்ளீடு செய்வதற்காக, 32 மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கும் தலா ஒரு கணினி, பிரின்ட்டரை மட்டும் மத்திய அரசு அளித்துள்ளது. இதற்காக மாவட்டத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியும் அளிக்கப்பட்டுள்ளது. இது போதுமான தாக இல்லை.
மேலும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விவரங்களைப் பெற்று, ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. மாநில அளவில் ஒரே ஒரு ஒருங்கிணைப்பாளரை மட்டுமே மத்திய அரசு நியமித்துள்ளது.
இதுவரை பதிவு செய்த 2 லட்சம் பேரின் விவரங்களும் பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகள், தன்னார்வ அமைப்புகளில் இருந்து சேகரிக்கப்பட்டவைதான். இது தவிர, மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு அருகில் உள்ள கணினி மையங்களுக்கு சென்று இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்காமல், பதிவை அதிகரிப்பதற்காக, ஆதார் விநியோகத்துக்கு இருப்பதுபோல தமிழகத்தின் 385 ஒன்றியங்களிலும் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் மையங்கள் ஏற்படுத்த வேண்டும். அல்லது, பொதுசேவை மையங்கள் (சிஎஸ்இ), அரசு இ-சேவை மையங்களில் அந்த வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தோம். அந்த 2 கோரிக்கைகளையும் ஏற்க மத்திய அரசு மறுத்து விட்டது.
மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால், அதை மருத்து வர் சரிபார்க்க வேண்டும். இதற்கும், மாவட்டத்துக்கு ஒரு மருத்துவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோரின் விவரங்களை ஒருவர் மட்டுமே சரிபார்ப்பது மிகவும் சிரமம். இதனால்தான் அடையாள அட்டை உருவாக்கும் பணி தாமதமாகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
சிறப்பு முகாம்கள் தேவை
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நம்புராஜன் கூறும்போது, ‘‘மாற்றுத் திறனாளிகளுக்கு பல அடையாள அட்டைகளுக்கு பதிலாக, ஒரே அடையாள அட்டை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த உரிய கவனம் அளிக்கப்படவில்லை. தனியார் இணையதள மையங்களில் மாற்றுத்திறனாளிகள் பணம் கொடுத்து பதிவு செய்து வருகின்றனர். எனவே, இத்திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் போதிய நிதி ஒதுக்க வேண்டும். அதோடு, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டைகளுக்கு நடத்துவதுபோல, கிராம, வார்டு அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டால், பதிவு அதிகரிக்கும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago