சென்னை: திமுக, அதிமுகவின் 57 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களிடையேயான பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகப்பெரிய அளவில் அதிகரித்திருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அனைவருக்கும் முன்னேற்றம் என்ற மயக்கும் முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த திமுக, அதிமுகவின் 57 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களிடையேயான பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகப்பெரிய அளவில் அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது.
தனிநபர் வருமானத்தில் மாநில சராசரிக்கும் குறைவாக உள்ள 24 மாவட்டங்களில் 16 மாவட்டங்கள் வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்தவை என்பதிலிருந்தே சமச்சீரான வளர்ச்சியை ஏற்படுத்துவதில் அரசு தோல்வியடைந்திருப்பது உறுதியாகியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனரும், சென்னை பொருளாதாரப் பள்ளியின் தலைவருமான முனைவர் சி. அரங்கராஜன், சென்னை பொருளாதாரப் பள்ளியின் இயக்குனர் முனைவர் கே.ஆர். சண்முகம் ஆகியோர் இணைந்து தமிழக பொருளாதாரம் குறித்த 69 பக்க ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
» “திமுக - அதிமுக ஆட்சியில் தடையின்றி தொடரும் கனிமவளக் கொள்ளை” - அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
» 2026-ல் திமுக, அதிமுக இல்லாத ஆட்சி என்பதே எங்களின் பரப்புரை உத்தி: அன்புமணி ராமதாஸ் நேர்காணல்
அதில் 2019&20 ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டின் சராசரி தனிநபர் வருவாயான ரூ.2,36,783 ஐ விட 19 மாவட்டங்களின் தனிநபர் வருமானம் குறைவாக இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. 13 மாவட்டங்கள் மட்டுமே சராசரியை விட அதிக வருமானம் ஈட்டியுள்ளன.
சென்னையை ஒட்டியுள்ள தொழிற்சாலைகள் நிறைந்த திருவள்ளூர் மாவட்டம் தான் ரூ.3,64,337 ஆண்டு வருமானத்துடன் தனிநபர் வருமானத்தில் முதலிடத்தில் உள்ளது. பெரம்பலூர் ரூ.1,07,731 வருமானத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. திருவாரூர் (ரூ.1,25,653), விழுப்புரம் (ரூ.1,30,103), திருவண்ணாமலை (ரூ.1,36,389), சிவகங்கை (ரூ.1,39,737) ஆகியவை கடைசிக்கு முந்தைய 4 இடங்களை பிடித்திருக்கின்றன.
முதல் இடத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் தனி நபர் வருமானம், கடைசி இடத்தில் உள்ள பெரம்பலூர் மாவட்டத்தின் தனிநபர் வருமானத்தை விட 338 விழுக்காடும், திருவாரூர் மாவட்டத்தின் தனிநபர் வருமானத்தை விட 289 விழுக்காடும், விழுப்புரம் மாவட்டத்தை விட 280 விழுக்காடும் அதிகம்.
திருவள்ளூர் மாவட்டத்திற்கும், பெரம்பலூர் மாவட்டத்திற்கும் இடையிலான தொலைவு 250 கி.மீ மட்டும் தான். ஆனால், தனிநபர் வருவாய் இடைவெளி 338%. திருவள்ளூர் மாவட்டத்திற்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் இடையிலான தொலைவு வெறும் 90 கி.மீ தான்.
ஆனால், இரு மாவட்டங்களுக்கும் இடையிலான வருவாய் இடைவெளி 280%. விழுப்புரம் மாவட்டத்திலிருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு 2 மணி நேரத்தில் சென்று விட முடியும். இவ்வளவு நெருக்கமாக உள்ள இரு மாவட்டத்து மக்களின் தனிநபர் வருமான விகிதத்தில் இவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை நியாயப்படுத்த முடியாது.
பெரம்பலூர், திருவாரூர், விழுப்புரம் (கள்ளக்குறிச்சி), திருவண்ணாமலை, சிவகங்கை, நாகப்பட்டினம் (மயிலாடுதுறை), இராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், தேனி, கடலூர், சேலம், திண்டுக்கல், நெல்லை (தென்காசி), தருமபுரி, கரூர், தஞ்சாவூர், மதுரை, வேலூர் (திருப்பத்தூர், இராணிப்பேட்டை) ஆகியவை தான் தனிநபர் வருமானத்தில் சராசரிக்கும் குறைவாக உள்ள 19 மாவட்டங்கள் ஆகும். அவற்றிலிருந்து பிரிக்கப்பட்ட மாவட்டங்களையும் கணக்கில் கொண்டால் இது 24 ஆக அதிகரிக்கும்.
மாநில சராசரியை விட குறைவான தனிநபர் வருமானம் கொண்ட 24 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் வட தமிழகத்தையும், 5 மாவட்டங்கள் காவிரி பாசனப் பகுதியையும் சேர்ந்தவை. அதேபோல், மாநில சராசரிக்கும் அதிக வருமானத்தை ஈட்டும் 14 மாவட்டங்களில் ஒன்று கூட வடமாவட்டம் இல்லை.
முதலிடத்தை பிடித்த திருவள்ளூர், பத்தாவது இடத்தில் உள்ள காஞ்சிபுரம், அதிலிருந்து பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு ஆகியவை வட தமிழகத்தில் இருந்தாலும் அவை சென்னையின் நீட்சியாக பார்க்கப் படுகின்றனவே தவிர, வட மாவட்டங்களாக பார்க்கப்படுவதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. அதேபோல், ஏழாவது இடத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் பெங்களூரின் நீட்சியாகத் திகழ்கிறது.
தனிநபர் வருமானத்தில் முதல் 5 இடங்களை திருவள்ளூர், ஈரோடு, கோவை, நாமக்கல், சென்னை ஆகிய மாவட்டங்கள் பிடித்திருப்பதற்கு காரணம் அங்கு மிக அதிக அளவில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டிருப்பதும், வணிகம் அதிக அளவில் நடைபெறுவதும் தான்.
சராசரியை விட அதிக தனிநபர் வருமானம் கொண்ட அனைத்து மாவட்டங்களுக்குமே தொழில், வணிகம், இயற்கை வளம் போன்ற ஏதோ ஒரு பின்னணி இருக்கும். அத்தகைய பின்னணி எதுவும் இல்லாத மாவட்டங்கள் தான் தனிநபர் வருமானத்தில் மாநில சராசரிக்கும் கீழ் உள்ள இடங்களுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.
தனிநபர் வருமானத்தில் வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்கள் பின்தங்கியிருப்பது இப்போது ஏற்பட்டதல்ல. இந்தியா விடுதலையடைந்து 77 ஆண்டுகள் ஆகியும் இதே நிலை தான் நீடிக்கிறது.
இவற்றில் 57 ஆண்டுகள் திமுகவும், அதிமுகவும் தான் தமிழகத்தை மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்தக் கட்சிகள் நினைத்திருந்தால், இந்த மாவட்டங்களில் தொழிற்சாலைகளைத் தொடங்கி அவற்றை பொருளாதார அடிப்படையில் முன்னேற்றியிருக்கலாம்; அந்த மாவட்டங்களின் தனிநபர் வருமானத்தை பெருக்கியிருக்கலாம். ஆனால், இரு கட்சிகளும் அதைச் செய்யவில்லை.
பொருளாதாரத்தில் கடைசி இடத்தில் உள்ள வட மாவட்டங்களும், காவிரி பாசன மாவட்டங்களும் முன்னேறாமல் தமிழ்நாடு முன்னேற வாய்ப்பு இல்லை. இதை ஆய்வறிக்கையில் முனைவர் அரங்கராஜனும், முனைவர் கே.ஆர்.சண்முகமும் குறிப்பிட்டிருக்கின்றனர். மாநில உற்பத்தி மதிப்பின் அடிப்படையில் இப்போது மராட்டியத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழ்நாடு, 2024&25ஆம் ஆண்டில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் ஆபத்து உள்ளது.
தமிழகத்தின் விரைவான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய இம்மாவட்டங்களின் தனிநபர் வருவாயை பெருக்குவதற்கு இம்மாவட்டங்களில் தொழிற்சாலைகளை அதிக அளவில் தொடங்க வேண்டும் என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வட மாவட்டங்களும், காவிரி பாசன மாவட்டங்களும் முன்னேறாமல் தமிழ்நாடு முன்னேறாது என்ற உண்மையை உணர்ந்து அந்த மாவட்டங்களின் முன்னேற்றத்திற்கான சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்; வேளாண்மைக்கு பாதிப்பு ஏற்படாமல் தொழிற்திட்டங்களைத் தொடங்க வேண்டும்.
இந்த மாவட்டங்களுக்கு சிறப்பு சலுகைகளை பெறுவதற்கு வசதியாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 371(கே) என்ற புதிய பிரிவைச் சேர்க்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago