சிறுவாணி அணையில் நீர்க்கசிவுகளை சரி செய்ய திட்ட அறிக்கை தயாரித்தது கேரளா அரசு

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கோவையின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணையின் நீர்க்கசிவுகளை சரி செய்ய கேரளா அரசு திட்ட அறிக்கை தயாரித்துள்ளது.

கோவையின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணை, கேரள மாநிலம் பாலக்காட்டில், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. சிறுவாணி அணையில் 49.50 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க முடியும். ஆனால், அணை பாதுகாப்புகாரணங்களால், 45 அடி வரை மட்டுமே கேரளா அரசால் நீர் தேக்கி வைக்கப்படுகிறது. சிறுவாணி அணையிலிருந்து பெறப்படும் நீர், சாடிவயல் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்டு, கோவை மாநகராட்சியின் 30 வார்டுகளுக்கும், வழியோரம் உள்ள 22-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

கடந்த சில பருவ காலங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாததால், சிறுவாணி அணை நிரம்பவில்லை. எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லாதது, கோடை வெப்பம் உள்ளிட்ட காரணங்களால் சிறுவாணி அணையில் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. சிறுவாணி அணையிலிருந்து தற்போது சராசரியாக 30.40 எம்.எல்.டி மட்டுமே நீர் எடுக்கப்படுகிறது. அணையில் நீர்மட்டம் குறைந்து வரும் இச்சூழலில், சிறுவாணி அணையை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சியினர்,சமூக செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது,‘‘சிறுவாணி அணையின் பராமரிப்பு தற்போது கேரளா அரசு வசம் உள்ளது. அணையில் தற்போது நீர்மட்டம் குறைந்து வரும் சூழலில்,நீர்த்தேக்க அளவை அதிகரிக்க தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அணையின் பல்வேறு இடங்களில் நீர்க்கசிவுகள் உள்ளன. இவற்றை சரி செய்யவும் வலியுறுத்த வேண்டும்’’ என்றனர்.

இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘சிறுவாணி அணையில் நேற்றைய நிலவரப்படி 10.30 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. தற்போது 4-வால்வு மூலம் (கடைசி வால்வு) தண்ணீர் எடுக்கப்படுகிறது. சிறுவாணி அணையில் சேறு, சகதிகள் குறித்து ஆய்வு செய்த கேரள குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், சேறு, சகதிகள் ‘மினிமம்’ அளவில் தான் உள்ளது.

எனவே, தூர்வார தற்போது அவசியமில்லை என்று கேரளா அரசிடம் தெரிவித்துள்ளனர். அதனால் தற்போது தூர்வார வாய்ப்புகள் இல்லை. அதேபோல், சிறுவாணி அணையின் மதகு சுவர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமான நீர்க்கசிவுகள் உள்ளன. இவற்றை சிமென்ட்வைத்து இன்ஜெக்ட் செய்து அடைப்பது தொடர்பாக கேரளா அதிகாரிகள், கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் சென்று ஆய்வு செய்தனர்.

அதன் இறுதியில் நீர்க் கசிவுகளை சரி செய்வது தொடர்பான திட்ட அறிக்கை தயாரித்து கேரளா அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். அரசு ஒப்புதல் அளித்த பின்னர், அதன் மதிப்பு உள்ளிட்ட விவரங்களை நம்மிடம் கேரளா அதிகாரிகள் தெரிவிப்பர். அதன் பின்னர், தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கி நீர்க்கசிவு சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். அதேபோல், சிறுவாணி அணை ‘டெத் ஸ்டோரேஜ்’ நிலையை இன்னும் எட்டவில்லை. அவ்வாறு எட்டினால் தூர்வாருவது குறித்து வலியுறுத்தலாம். ஆனால், தற்போது அந்நிலையை எட்டுவதற்கு வாய்ப்பு இல்லை’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE