பகல் நேரத்தில் நேரடி வெயிலில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டாம்: நிறுவனங்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.பொது மக்களுக்கும், மருத்துவமனைகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்களை பொது சுகாதாரத் துறை வழங்கி வருகிறது.

ஆனாலும், கட்டுமானம் சார்ந்த பணியாளர்களும், தெருக்களில் வியாபாரம் செய்பவர்களும் நேரடி வெயிலில்இருக்கும் சூழல் உள்ளது. இதனால், பலர் உடல் உச்ச வெப்பநிலை (ஹீட் ஸ்ட்ரோக்) பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதியாவதும், சிலர் உயிரிழப்பதும் நிகழ்கிறது.

இதைத் தடுக்க, தொழில் நிறுவனங்களும், கட்டிட உரிமையாளர்களும் தொழிலாளர் நலன் கருதி சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் பல மாவட்டங்களில் 102 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. அந்த தட்பவெப்ப நிலையில் நேரடியாக பணியாற்றும்போது உடலில்உடனடியாக நீர்ச்சத்து இழப்பு ஏற்படும்.

அதை அலட்சியப்படுத்தினால் ஒரு கட்டத்தில் உடல் உறுப்புகளின் இயக்கம் தடைபடும். அத்தகைய நிலை ஏற்படும்போது மருத்துவ சிகிச்சைகள் விரைந்து கிடைக்காவிடில் உயிரிழப்பு நேரிடலாம்.

எனவே, கட்டுமானப் பணியாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், வியாபாரிகள் என நேரடி வெயிலில் பணியாற்றக் கூடியவர்கள் அனைவரது பணி நேரத்தைமாற்றியமைக்க தொழில் நிறுவனங்களும், உரிமையாளர்களும் முன்வர வேண்டும்.

அதிகாலையிலிருந்து காலை வரையிலும், அதன்பின்னர் மாலையிலிருந்து இரவு வரையிலும் பணியாற்றலாம். நீர்ச்சத்து இழப்பு ஏற்படாத வகையில் ஓஆர்எஸ் கரைசல், குடிநீர் வசதிகளை ஊழியர்களுக்கு செய்து தர வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE