சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் 4-வது லேன் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவின் காவலாளி மற்றும் பாரமரிப்பாளராக பணியில் இருப்பவர் ரகு. இவர் தனது மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுரக்ஷாவுடன் பூங்காவில் உள்ள ஒரு சிறு அறையில் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் (5-ம் தேதி) ரகு தனது சொந்த ஊரான விழுப்புரத்துக்குச் சென்றுவிட்டார். இதனால் பூங்காவில் சோனியா, மகள் சுரக்ஷா மட்டும் இருந்துள்ளனர்.
இதனிடையே நேற்று முன்தினம் மாலை பூங்கா அருகே வசிக்கும் புகழேந்தி என்பவரின் வீட்டில் இருந்து வெளியேறிய அவரது 2 வளர்ப்பு நாய்கள் பூங்காவுக்குள் நுழைந்துள்ளன. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சுரக்ஷா மீது இந்த நாய்கள் திடீரென வெறிபிடித்ததுபோல் பாய்ந்து கடிக்கத் தொடங்கின. குழந்தையின் கை, கால் என உடல் முழுவதும் சரமாரியாக கடித்து குதறியதில் ரத்தம் சிந்தி சிறுமி அலறி துடித்தார்.
நாய்களின் இந்த தாக்குதலில் நிலை குலைந்த சிறுமி பயம், அதிர்ச்சி மற்றும் வலியால் கதறி துடித்தார். குழந்தையின் அழுகுரல் கேட்டு, காப்பாற்ற ஓடிவந்த தாய் சோனியாவையும் நாய்கள் விட்டுவைக்கவில்லை. அவரை விரட்டி விரட்டிக் கடித்தன. இருவரின் அலறல் சத்தம் கேட்டு பதட்டம் அடைந்த அந்த பகுதி மக்கள், விரைந்து சென்று நாயை நீண்ட போராட்டத்துக்கு பிறகு விரட்டி விட்டனர்.
» பிளஸ் 2 தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து
» கன்னியாகுமரி லெமூர் கடற்கரையில் கடல் சீற்றத்தில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் உயிரிழப்பு
பலத்த காயமடைந்த சிறுமியைபொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பினர். தற்போது ஆயிரம் விளக்கில் உள்ள தனியார்மருத்துவமனையில் அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆயிரம் விளக்கு போலீஸார் நாய்களின் உரிமையாளர் புகழேந்தியை விசாரித்தனர். பின்னர் அவர் மீதும், அவருடைய மனைவி தனலட்சுமி மற்றும் மகன் மருத்துவர் வெங்கடேஸ்வரன் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறும்போது, புகழேந்தியின் வீட்டு மெயின் கதவு திறந்து இருந்ததால், வீட்டில் இருந்து இரவு 7.30 மணியளவில் வெளியேறிய அவரது வளர்ப்பு நாய்கள் அருகில் இருந்த பூங்காவுக்குள் நுழைந்து, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடித்துள்ளது தெரியவந்ததுள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கலாம்: போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வீட்டுக்கு வருவோரையோ வெளியிலோ யாரை கடித்தாலும் நாயின் உரிமையாளரே பொறுப்பு. அவர் மீதே வழக்குப் பதிவு செய்யப்படும். 6 மாதம் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது’ என்றனர்.
வெளிநாட்டு நாய்களை வளர்க்க ஆர்வம் காட்டும் மக்கள்: செல்லப்பிராணி ஆர்வலர் ஒருவர் கூறும்போது, “பராமரிப்பு செலவு அதிகமாக இருந்தாலும் வெளிநாட்டு நாய்களை வளர்க்கத் தான் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் 100-ல் 25 பேர் மட்டுமே உரிய உரிமங்களுடன் நாயை வாங்கிச் செல்கின்றனர். உரிமம் பெறுவது கட்டாயமாகும்” என்றார்.
பலவீனமான விதிகளால் தொடரும் அவலம்: செல்லப் பிராணிகளால் ஏற்படும் பல்வேறு இன்னல்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க முடியாதவாறு அதன் வழிகாட்டு விதிகள் பலவீனமாக இருப்பதாக விலங்குகள் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:
செல்லப் பிராணிகள் பராமரிப்பு விதிகளை மீறுவோருக்கு பொது சுகாதார சட்ட விதிகளின்படி, ரூ.1000-க்கும் குறைவாக அபராதம் மட்டுமே வசூலிக்க முடியும்.
விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ், விலங்கு இனவிருத்தி கட்டுப்பாடு விதிகள், 2023-ஐ மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. அதில் கூட செல்லப் பிராணிகளை வெளியில் அழைத்து செல்லும்போது கழுத்தில் கயிற்றுடன் தான் அழைத்து செல்ல வேண்டும். செல்லுமிடத்தில் மலம் கழித்து விட்டால் அதை உரிமையாளர் அகற்ற வேண்டும் என யோசனையாக மட்டுமே கூறப்பட்டுள்ளது.
இந்த விதிகளை மீறினால் உரிமையாளர் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பான அம்சங்கள் ஏதும் இடம்பெறவில்லை. இதனாலேயே பிராணிகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.
நாய்களை பிடித்து செல்ல போலீஸ் பரிந்துரை: சிகிச்சை முடியும் வரை சிறுமிக்கான சிகிச்சை செலவை கொடுப்பதாக நாயின் உரிமையாளர் புகழேந்தி போலீஸாரிடம் உறுதி அளித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க சிறுமியை கடித்த நாய்களை பிடித்து செல்லும்படி மாநகராட்சிக்கு ஆயிரம் விளக்கு போலீஸார் பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் நாயை ஒரு வாரத்துக்குள் அப்புறப்படுத்தும்படி நோட்டீஸ் ஒட்டினர்.
ராட்வைலரை வீட்டில் வைத்து வளர்க்க முடியாது: சென்னையில் குழந்தை சுரக் ஷாவை கடித்து குதறிய நாய்கள் ஜெர்மனியைச் சேர்ந்த ராட்வைலர் எனும் வகையைச் சேர்ந்தது. இவைகளை வீட்டில் வைத்து வளர்ப்பது கடினமாகும். முறையாக பயிற்சி கொடுத்தால் மட்டுமே ராட்வைலர் நாயை பழக்கப்படுத்த முடியும். ராட்வைலரை பொறுத்தவரை அது ஒருவரை மட்டுமே உரிமையாளராக தேர்ந்தெடுக்கும். அதன்பின் அவரால் கொடுக்கப்படும் கட்டளையின்படி மட்டுமே அது செயல்படும். அடித்தாலோ அல்லது மிரட்டினாலோ ராட்வைலரை கட்டுப்படுத்த முடியாது என விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago