20 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் தும்பலஅள்ளி அணை: எண்ணேகொல்புதூர் கால்வாய் திட்டத்திற்கு ஏங்கும் விவசாயிகள்

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி மாவட்டத்தில் சுமார் 20 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் ஓர் அணையால் விவசாயிகளாக இருந்த பலரும் தொழிலாளிகளான நிலையை மாற்ற நடவடிக்கை தேவை என கோரிக்கை எழுந்துள்ளது.

காரிமங்கலம் வட்டம் தும்பலஅள்ளியில் பொதுப்பணித் துறை சார்பில் அணை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அணை சுமார் 20 ஆண்டுகளாக தொடர்ந்து வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது. பஞ்சப்பள்ளி, ஜெர்த்தலாவ் போன்ற மலைகளில் இருந்து கனமழை காலங்களில் தும்பல அள்ளி அணை நீராதாரம் பெற்று வந்தது. பின்னர் நீராதாரம் வழங்கும் பகுதிகளில் தடுப்பணைகள் உருவாக்கப்பட்ட நிலையில் தும்பல அள்ளி அணைக்கு தண்ணீர் கிடைக்காமல் போனது. எனவே, தென்பெண்ணை ஆற்றில் இருந்து தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து சுற்று வட்டார பகுதி விளைநிலங்களை செழிப்பாக்க வேண்டுமென தொடர்ந்து விவசாயிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகேசன் கூறியது:

தும்பலஅள்ளி அணையின் மூலம் பாலக்கோடு, தருமபுரி, அரூர் சட்டப்பேரவை தொகுதிகளின் பெரும்பகுதி விவசாய நிலங்களை செழிப்பாக்க முடியும். நேரடி பாசனம், ஏரிகளுக்கு நீர் வழங்கி பாசனம் செய்தல் மற்றும் நிலத்தடி நீராதாரமாக இருந்து பாசனம் வழங்குதல் ஆகியவற்றின் மூலம் 15 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலம் பாசனம் பெறும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் தென்பெண்ணை ஆற்றில் கெலவரப்பள்ளி அணை உள்ளது. இங்கிருந்து கிருஷ்ணகிரி அடுத்துள்ள கேஆர்பி அணைக்கு தண்ணீர் செல்லும் வழியில் எண்ணேகொல்புதூர் பகுதியில் இருந்து புதிய கால்வாய் அமைத்து தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் விவசாயிகள் தரப்பு கோரிக்கை.

கனமழை காலங்களில் தென் பெண்ணையாற்று நீரில் குறிப்பிட்ட பகுதி கடலுக்கு சென்று வீணாகிறது. இவ்வாறான உபரி நீரை, புதிய கால்வாய் அமைத்து தும்பல அள்ளி அணைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்று தான் போராடி வருகிறோம். இவ்வாறு தும்பல அள்ளி அணை நிறைக்கப்படும்போது, சுமார் 50-க்கும் மேற்பட்ட ஏரிகளையும் தண்ணீரால் நிறைக்க வேண்டும். இந்த நடவடிக்கை விவசாயிகள் மட்டுமன்றி, விவசாய தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கும் வாழ்வளிக்கும்.

2011-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜெயலலிதா இதை தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அறிவித்தார். இருப்பினும், தும்பல அள்ளி அணைக்கு தண்ணீர் வழங்கும் திட்டம் பேச்சளவிலேயே இருந்து வருகிறது. எனவே, நிலமிருந்தும் பலர் வாழ்வாதாரத்திற்காக மாற்றுத்தொழிலுக்கும், வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கும் சென்று கூலி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, 20 ஆண்டுகளாக அணை வறண்டதால் இப்பகுதியைச் சேர்ந்த ஒரு தலைமுறை, விவசாயம் குறித்த அறிவு, அனுபவம் எதுவுமே இல்லாமல் வளர்ந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியின் நில வளத்தையும், விவசாயிகளின் ஆர்வத்தையும் கருத்தில் கொண்டு தருமபுரி மாவட்டத்திற்கான திட்டப்பணிகளில் தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் வழங்கும் திட்டத்தை உடனே தொடங்கி செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.

விவசாயிகள் மட்டுமன்றி பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தமிழ் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட அமைப்புகளும் தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மனு அளித்தல், போராட்டங்கள் ஆகியவற்றை நடத்தி வருவது குறிப்பிடத் தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்