கோடை வெயில், அக்னி நட்சத்திரம், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் என்ற வார்த்தைகளைக் கேட்டு பழகிப்போன நம்மை தற்போது வெப்ப அலை, பருவமழை மாற்றம், மஞ்சள் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் என்றெல்லாம் வானிலை ஆய்வாளர்கள் பயமுறுத்தி வருகின்றனர். அதை ஒருபக்கம் சமாளித்து வந்தாலும், தமிழகத்தின் பல இடங்களில் குடிநீர் பிரச்சினை தற்போது தலைதூக்கத் தொடங்கி விட்டது. இதுகுறித்த நிலைமையை தமிழகம் முழுவதும் ஆராய்ந்த போது கிடைத்த தவல்களின் தொகுப்பு....
சென்னை மண்டலம்: பெருநகர சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன. சென்னையில் தற்போது தினமும் ஆயிரம் முதல் 1,072 மில்லியன் லிட்டர் வரை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, வீராணம் ஆகிய ஏரிகள் உள்ளன.
சென்னைக்கு தினமும் ஆயிரம் மில்லியன் கனஅடி (1 டிஎம்சி) குடிநீர் தேவை. ஏரிகளில் தற்போது 6 ஆயிரம் மில்லியன் கனஅடிக்கு அதிகமாகவே நீர் இருப்பு உள்ளது. அதனால் அடுத்த 6 மாதங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு வரவே வராது. மேலும், மீஞ்சூரில் 100 மில்லியன் லிட்டர், நெம்மேலியில் 110 மில்லியன் லிட்டர், நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட 3 கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் நாள்தோறும் 360 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க முடியும்.
இதுதவிர, 440 லாரிகள் மூலம் 917 தெரு நடைகள், 8,753 குடிநீர் தொட்டிகளுக்கு இலவசமாக குடிநீர் வழங்கப்படுகிறது. தினமும் சராசரியாக 2,100 லாரி நடைகள் விலையில்லாமல் விநியோகிக்கப்படுகிறது என சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடக்கு மண்டலம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையின் உயரம் 44.28 அடி. இதில் 26.08 அடிக்கு நீர் உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 81 கனஅடி, நீர் திறப்பு விநாடிக்கு 100 கனஅடி. இந்த தண்ணீர் 11 தடுப்பணைகளை கடந்து, கிருஷ்ணகிரி அணைக்கு வரும். ஆனால் கடந்த 32 நாட்களுக்கு மேலாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து ‘ஜீரோ' நிலையில் உள்ளது.
அணையின் உயரமான 52 அடியில் 38.55 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு ஊற்றுக்கால்வாய்கள் வழியாக ஆற்றில் 12 கனஅடி திறக்கப்படுகிறது. கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணை தண்ணீர் விவசாய தேவைக்காக மட்டுமே திறந்து விடப்படுகிறது. தற்போது இருமத்தூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 2 நீர்உறிஞ்சு கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் கீழ் பகுதியில் வேலூர் மாவட்ட கூட்டு குடிநீர் திட்டம், சேலம் மாநகராட்சி, ஆத்தூர், மேட்டூர், காடையாம்பட்டி, நங்கவள்ளி, காவிரிபுரம் உள்ளிட்ட 11 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நீர்வளத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 39 கன அடியாக உள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,400 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது, அணையின் நீர்மட்டம் 52.90 அடியாகவும், நீர் இருப்பு 19.68 டிஎம்சியாகவும் உள்ளது. மேட்டூர் அணையின் கீழ் பகுதியில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தினசரி 1.5 டிஎம்சி தண்ணீர் தேவை. மீன் வளத்தை பாதுகாக்க 9.06 டிஎம்சி தண்ணீர் இருப்பு வைத்து கொள்ள வேண்டும். தற்போதுள்ள நீரை வைத்து, 3 வாரத்துக்கு மட்டுமே தண்ணீர் வழங்க முடியும்’’ என்றனர்.
மத்திய மண்டலம்: திருச்சி மாநகராட்சியில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அமைக்கப்பட்டுள்ள 11 நீரேற்று நிலையங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் மணப்பாறை, துறையூர், லால்குடி, வையம்பட்டி, துவரங்குறிச்சி உள்ளிட்ட ஊரகப் பகுதிகளில் சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. புதுக்கோட்டை நகராட்சியில் இரு வாரங்களுக்கு ஒரு முறையே காவிரி குடிநீர் வழங்கப்படுகிறது.
கடற்கரையோர கிராமங்களில் காவிரி குடிநீர் வசதி இல்லாததால் தனியாரிடம் விலை கொடுத்தே குடிநீரை மக்கள் வாங்குகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து நான்கில் ஒரு பங்கு அளவுக்கே குடிநீர் வழங்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓரளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் உள்ளதால் இதுவரை குடிநீர் விநியோகத்தில் பெரிய அளவுக்கான பாதிப்புகள் ஏற்படவில்லை.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பாக உள்ளதால், குடிநீரை மக்கள் விலைக்கு வாங்கிதான் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. கரூர் மாவட்டத்தில் கடவூர், தோகைமலை போன்ற வறட்சியான பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு தற்போது தலைதூக்கத் தொடங்கியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் சில இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் முழு அளவுக்கு நீரேற்றம் செய்ய இயலவில்லை.
மேற்கு மண்டலம்: கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 49.50 அடி என்றாலும், தற்போது 12 அடியாக நீர்மட்டம் உள்ளது. மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 55 அடியாக இருந்தது. இதில் 1 முதல் 40 அடி வரை சேறும் சகதியுமாக உள்ளது. 15 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருந்ததால் 2-வது கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர் எடுப்பது நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து அப்பர் பவானியிலிருந்து பின்புறம் மதகு வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டு முக்காலி, அத்திக்கடவு வழியாக பில்லூர் அணைக்கு தண்ணீர் வந்ததால், நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் உயரம் 60 அடியை நெருங்கியது. தற்போது 2-வது வால்வு வழியாக தண்ணீர் எடுக்கப்படுகிறது.
அணைகளில் நீர் இல்லாததால் கோவையில் மாநகர், புறநகரங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. உக்கடம், ரேஸ் கோர்ஸ் உள்ளிட்ட சில பகுதிகளில் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆவாரம்பாளையம், பீளமேடு, கணபதி, காந்திமாநகர், ஹோப்காலேஜ், பாப்பநாயக்கன்பாளையம் என மீதமுள்ள பெரும்பாலான இடங்களில் 15 முதல் 18 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
திருப்பூர் மாநகருக்குள் 8 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீரானது குறைந்தது 10 நாட்களுக்கு ஒருமுறையே விநியோகிக்கப்படுகிறது. உதகையின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. வனப்பகுதிகளும் வறண்டு காணப் படுகிறது. உதகை நகருக்கு குடிநீர் விநியோகிக்கும் பார்சன்ஸ் வேலி அணையில் 5 அடி ஆழத்துக்கு வண்டல் மண் படிந்துள்ளது.
உதகை நகருக்கு தினசரி குடிநீர் சீராக விநியோகம் செய்ய தேவையான நீர் இருப்பு உள்ளது என நகராட்சி ஆணையர் ஏகராஜ் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் 32.8 டிஎம்சி நீரைத் தேக்கி வைக்க முடியும். பவானிசாகர் அணை மூலம் 2.5 லட்சம் ஏக்கர் நிலம் நேரடி பாசனம் பெறுகின்றன.
அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலம் 15 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, இம் மாவட்டத்தில் 6 வட்டங்கள் திருப்பூர் மாவட்டத்தில் 4 வட்டங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர, பவானிசாகர் அணையில் இருந்து கூடுதுறை வரை ஆற்றின் கரையோரத்தில் உள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்கு பவானிசாகர் அணையின் நீர் குடிநீர் ஆதாரமாக உள்ளன.
நீர்வளத் துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ‘‘அணை விதிகளின்படி, குறைந்தபட்சம் 1.8 டிஎம்சி நீரைஇருப்பு வைக்க வேண்டும். அணையில் இருந்து தற்போது குடிநீருக்கு மட்டும் நீர் திறக்கப்படுகிறது. எனவே, கோடையில் குடிநீர் தேவையை சமாளிக்க முடியும்’’ என்றனர்.
தெற்கு மண்டலம்: மதுரை மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகள் குடிநீர் தேவைக்கும், விவசாயத்துக்கும் வைகை அணை, பெரியாறு அணையை நம்பியே உள்ளன. தற்போது பெரியாறு அணை நீர் மட்டம் 115.50 அடியாகவும், வைகை அணை நீர் மட்டம் 57.02 அடியாகவும் குறைந்து விட்டதால் மதுரை மாவட்டத்துக்கு போதுமான குடிநீர், தொடர்ந்து பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மாநகராட்சி, மற்ற நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம பஞ்சாயத்துகள் விநியோகிக்கும் குடிநீர் போதுமானதாக இல்லாததால் மக்கள், குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை காலத்தை சமாளிக்கும் அளவுக்கு நீர்நிலைகளில் தண்ணீர் உள்ளது. மாநகராட்சியின் நீர்ஆதாரமான ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் தற்போது 11.4 அடியாக நீர்மட்டம் உள்ளது. (மொத்தம் 23.5 அடி). அதனால் தற்போது வரை தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 30 வார்டுகளுக்கு தினமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள வார்டுகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படுகிறது.
தற்போது இருக்கும் நீர்ஆதாரத்தை கொண்டு மூன்று மாதங்கள் வரை தங்குதடையின்றி குடிநீர் வழங்கலாம் என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள். விருதுநகர் நகராட்சிக்கு சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் அணையிலிருந்து தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர், புதிய மற்றும் பழைய தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டங்களின் மூலம் தலா 25 லட்சம் லிட்டர் தண்ணீர் என ஒரு நாளைக்கு 80 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு வாரத்துக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்படுகிறது.
இன்னும் ஒரு மாதத்துக்கு குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது. உள்ளூர் குடிநீர் திட்டங்களால் போதிய குடிநீர் விநியோகம் செய்ய முடியாததால் சிவகங்கை மாவட்டத்தில் விடுபட்ட பகுதிகளுக்காக புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ரூ.1,752.73 கோடியில் கடந்த 2021 பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. இப்பணி இன்னும் முடிவடையவில்லை. தற்போது கோடையில் உள்ளூர் குடிநீர் திட்டங்களால் முழுமையாக தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.
இதனால் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தேனி மாவட்டத்தில் கோடை வெயில் மற்றும் மழை யின்மை காரணமாக முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 115.10 அடியாக குறைந்துள்ளது. வைகை அணையைப் பொறுத்தவரை தற்போது 57.02 அடியாக (மொத்த உயரம் 71) உள்ளது. நீர்வரத்து பூஜ்ய நிலையில் உள்ளது. வைகை அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
அணையில் போதுமான நீர் அணையில் உள்ளதாகவும், தேவைக்கேற்ப அவ்வப்போது நீர் திறக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரே மிகப்பெரிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. முக்கொம்பிலிருந்து காவிரி நீர் கொண்டுவரப்பட்டு பெரும்பாலான பகுதிக்கு விநியோகிக்கப்படுகிறது.
ஓராண்டாகவே 50 சதவீத நிர்வரத்து குறைந்துவிட்டது. இதனால் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளது. ராமநாதபுரத்தில் 2 நாட்களுக்கு ஒருமுறையும், பல கிராமங்களில் வாரம் ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, மாவட்டங்களுக்கான குடிநீர் ஆதாரமாக விளங்கும் பாபநாசம் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. 143 அடி கொண்ட இந்த அணை நீர்மட்டம் 57 அடியாக உள்ளது. இதுபோல் 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 88.70 அடியாக உள்ளது.
குடிநீர், பாசன தேவைக்காக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து 450 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது வரை பெரிய அளவுக்கு குடிநீர் பிரச்சினை தலைதூக்கவில்லை. அதேநேரம் குடிநீர் பற்றாக்குறை மற்றும் குடிநீர் விநியோக குறைபாடுகள் உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் வடகிழக்குப் பருவமழை நன்றாக பெய்ததால், பெரும்பாலான நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு போதுமான அளவில் உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 5 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், புதூர் சுற்றுவட்டாரத்தின் சில பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இம் மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய 5 அணைகளின் மொத்த நீர் கொள்ளளவு 966 மில்லியன் கனஅடி மட்டுமே. அணைகள் அனைத்தும் முழுமையாக நிரம்பினாலும் 196 மில்லியன் கனஅடி நீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. குண்டாறு அணை வறண்டுவிட்ட நிலையில் மற்ற அணைகளிலும் குறைவாகவே நீர் இருப்பு உள்ளது. பல இடங்களில் குடிநீர் பற்றாக்குறை தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர் ஆதார கட்டுப்பாட்டில் உள்ள 2,040 குளங்கள் வற்றும் நிலையில் உள்ளன. அதேநேரம் மாவட்டம் முழுவதும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யப்படுகிறது. மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் கடலோர கூட்டுக் குடிநீர் திட்ட பைப் லைன்கள் மூலம் வீடுகளுக்கு ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்படுகிறது.
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். நாகர்கோவிலின் நீர் ஆதாரமான 25 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட முக்கடல் அணையின் நீர்மட்டம் தற்போது 3 அடியாக குறைந்துள்ளது. ஆனாலும் இதற்கு மாற்றாக புத்தன் அணை திட்டம் இன்னும் நடைமுறைக்கு வராத நிலையில், வெள்ளோட்ட அடிப்படையில் வாரம் ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
அத்துடன் பேச்சிப்பாறை அணையில் 43 அடி தண்ணீர் இருப்பதால் தட்டுப்பாட்டை கருதி அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகிக்கவும், தேங்காய்பட்டணம் வரை உள்ள கடலோர பகுதிகளிலும் நிலத்தடி நீர் உப்புநீராக மாறாமல் இருக்க அவ்வப்போது அணைகளில் இருந்து தண்ணீர் ஆற்றில் திறந்துவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது தமிழகத்தில் கோடை மழை கைகொடுத்தால்தான் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைகளை ஓரளவு சமாளிக்க முடியும் என்ற நிலை நிலவுகிறது.
செய்தி தொகுப்பு: எஸ்.கல்யாணசுந்தரம், டி.செல்வகுமார், எஸ்.கோவிந்தராஜ், டி.ஜி.ரகுபதி, என்.கணேஷ் ராஜ். | படங்கள்: எஸ்.சத்தியசீலன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ர.செல்வமுத்துகுமார், எஸ்.கே.ரமேஷ். இ.மணிகண்டன்
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago