மதுரை: அதிகரித்து வரும் பயண தேவைகளை கருத்தில் கொண்டு பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அமைக்கப்படுகிறது. இப்பாலத்தின் கட்டுமான பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் கூறியதாவது: “ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாம்பன் ரயில் பாலம் 110 ஆண்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. குறிப்பிட்ட கால இடை வெளியில் வர்ண பூச்சு செய்தும் கடல் உப்பு காற்று காரணமாக கப்பல்களுக்கு வழி விடுவதற்காக திறக்கப்படும் பாலத்தின் கர்டர் பகுதிகள் துருப்பிடிக்க ஆரம்பித்தது.
சில இடங்களில் துரு காரணமாக இரும்பு பட்டைகளின் கனம் குறைய ஆரம்பித்தது. பாலத்தின் அபாய நிலையால் ரயில்கள் 2 கிலோ மீட்டர் பாலப்பகுதியில் 10 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டன. பராமரிப்பிற்கென ரயில் போக்குவரத்தை அடிக்கடி நிறுத்தவேண்டிய சூழலும் ஏற்பட்டது. தொழில் நுட்ப வல்லுநர்கள் இப்பாலத்தை தொடர்ந்து பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும் என, கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், நவீன வசதிகளுடன் ரூ. 550 கோடியில் புதிய பாலம் கட்ட ரயில்வே வாரியம் முடிவு செய்தது. புதிய பாலம் கடலில் 2.8 கி.,மீ. நீளத்துக்கு நடுவில் பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில் கட்டப்படுகிறது. நடுவிலுள்ள 72.5 மீட்டர் லிஃப்டிங் கிர்டர் செங்குத்தாக மின் இயந்திரவியல் சக்தி மூலம் திறந்து கப்பல்களுக்கு வழிவிடும். பழைய பாலம் இருபுறமும் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் மனித ஆற்றல் மூலம் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய பாலம் செங்குத்தாக திறக்கப்படும் இந்தியாவின் முதல் பாலமாக அமைகிறது. பெரிய கப்பல்கள் சென்று வரும் விதமாக நடுவிலுள்ள லிப்டிங் கிர்டர் 17 மீட்டர் உயரத்துக்கு மேலே செல்லும். இது அருகிலுள்ள சாலை பாலத்துக்கு இணையான உயரம் ஆகும்.
கடல் பகுதியை பாது காக்கும் வகையில் லக்னோ ரயில் ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிர்ணய அமைப்பின் ஆலோசனையின்பேரில், பாலத்தின் கர்டர்களை வடிவமைக்கும் பணி பாம்பனில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சத்திரக்குடி ரயில் நிலையத்தில் நடந்தது. அங்கிருந்து வடிவமைத்துக் கொண்டு வரப்பட்ட கிர்டர்கள் மற்றும் லிப்டிங் ஸ்பேன் ஆகியவை பாலத்தில் பொருத்தப்படுகின்றன.
கடலில் 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 கான்கிரீட் தூண்கள் ஆகியவை ஏற்கெனவே நிர்மாணிக்கப்பட்டு விட்டன. எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு இரட்டை ரயில் பாதை அமைக்கும் வகையில் அடித்தளமும், தூண்களும் அகலமாக அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் தற்போதைய தேவையை கருத்தில் கொண்டு ஒரு ரயில் பாதை மட்டுமே அமைக்கப்படுகிறது. மண்டபம் பகுதியில் இருந்து கப்பலுக்காக திறக்கும் பகுதி வரை 76 கிர்டர்கள் பாலத்தில் ஏற்கெனவே, பொருத்தப்பட்டு விட்டன. நடுவில் உள்ள திறக்கும் பகுதி பாம்பன் பகுதியில் இருந்து மெது, மெதுவாக நகர்த்தப்பட்டு நிலையை அடைந்துவிட்டது. இதை பொருத்தும் பணியும் நடைபெறுகிறது.
இதனிடையே திறக்கும் பகுதியை நகர்த்துவதற்காக நிறுத்தப்பட்டிருந்த மீதமுள்ள 23 கிர்டர்கள் அமைக்கும் பணி பாம்பன் பகுதியில் இருந்து துவங்கிவிட்டது. 428 மீட்டர் நீளமுள்ள திறக்கும் பகுதியில் 200 மீட்டர் இது வரை பொருத்தப்பட்டுவிட்டது. மீதமுள்ள 228 மீட்டர் பகுதியை பொருத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. பாலத்தில் 1.5 கி.மீ. நீளத்துக்கு மின் மயமாக்கல் பணிகளும் நிறைவு பெற்றன.
அதில் சரக்கு ரயில் சோதனை ஓட்டமும் நிறைவுற்ற நிலையில், மீதமுள்ள 0.6 கி.மீ. ரயில் பாதை மின்மயமாக்கல் பணி, கிர்டர்கள் பொருத்தும் பணி முடிவடைந்தவுடன் துவங்குகிறது. செங்குத்தாக திறக்கும் லிப்டிங் பகுதியை இயக்க தேவையான மின் இயந்திரவியல் கருவிகள் சோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. பணிகள் நிறைவடைந்து புதிய பாம்பன் பாலம் இவ்வாண்டு இறுதிக்கு பிறகு பயன்பாட்டுக்கு வரும்.
புதிய பாம்பன் பாலம் பயன்பாட்டுக்கு வந்தவுடன் ரயில் போக்குவரத்து ,புதிய ரயில்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ரயில்களும் உரிய வேகத்தில் குறித்த காலத்தில் சென்று வர முடியும். புதிய பாலத்தை பெரிய கப்பல்கள் எளிதாக கடந்து சென்று தொழில் பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடைய வாய்ப்பாக அமையும். நவீன தொழில் நுட்பத்துடன் கட்டப்படும் இப்பாலம் எந்தவித பழுதும் இன்றி நீண்ட காலம் சேவையாற்ற வாய்ப்புள்ளது.
பாலத்தின் வாயிலாக வட்டார தொழில் பொருளாதார வளர்ச்சி அடைய வாய்ப்பு இருக்கிறது. இது போன்ற பெரிய கட்டமைப்புகளை உருவாக்கும் இந்திய ரயில்வேயின் முயற்சி ரயில் போக்குவரத்தை நவீனப்படுத்தவும் ரயில் போக்குவரத்தின் மூலம் பல்வேறு பகுதிகளை இணைக்கவும் உதவும் என்பதில் ஐயமில்லை. புதிய பாம்பன் பாலத்தை ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனமான ரயில் விகாஸ் நிகம் லிமிடட் நிர்மாணித்து வருகிறது, என்று கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago