செய்தித் தெறிப்புகள் @ மே 2: சேலம் வன்முறை பின்புலம் முதல் டெல்லி ஆளுநர் அதிரடி வரை

By செய்திப்பிரிவு

சேலத்தில் இரு தரப்பு மோதலில் வன்முறை - போலீஸ் குவிப்பு: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் கோயில் வழிபாடு நடத்துவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கல் வீசி கடைகளுக்கு தீ வைத்த சம்பவத்தை அடுத்து, மூன்று மாவட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் - தீவட்டிப்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். ஒரு தரப்பினர் மட்டுமே இந்த திருவிழாவை நடத்தி வந்தனர். இந்த ஆண்டு மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்களும் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் கோயிலுக்கு சாமி கும்பிட வருவோம், திருவிழாவை நாங்களும் எடுத்து நடத்துவோம் என்று கூறியுள்ளனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினர் இடையே வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த அமைதி பேச்சுவார்த்தையில் எந்த ஓர் உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால், மீண்டும் வட்டாட்சியர் தலைமையில் வியாழக்கிழமை இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இது மோதலாக மாறியது. இந்த மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதுடன், அப்பகுதியில் இருந்த கடைகள் மீதும் கற்களை வீசி தாக்கி, தீ வைத்தனர். இதில் பேக்கரி கடைகள், டீக்கடைகள், வணிக நிறுவனங்கள் என பத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு இரு தரப்பினரும் தீ வைத்தனர்.

வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும், மோதலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். கோயில் விழா நடத்துவதிலும், வழிபாடு உரிமையில் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியது. இதையடுத்து சேலம், தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போலீஸார் சம்பவ பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சூதாட்ட விளம்பரங்கள்: தமிழக அரசு எச்சரிக்கை: தமிழகத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம் அல்லது பிற வழிகளில் இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது தூண்டும் வகையில் எந்த ஒரு நபரும் மின்னணு தொடர்பு சாதனங்கள் உட்பட எந்தவொரு ஊடகத்திலும் விளம்பரமோ அறிவிப்போ செய்ய கூடாது. தடை செய்யப்பட்ட விளம்பரங்களை ஒளிபரப்பும் நபர்கள், பிரபலங்கள், விளம்பர நிறுவனங்கள், விளம்பர தயாரிப்பாளர்கள், சமூக ஊடகத் தளங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

மே 6 வரை வெப்ப அலை நீடிப்பு: மே 6-ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆவியூர் கல்குவாரி வெடி விபத்துக்கு காரணம் என்ன?: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஞாயிற்றுக்கிழமை காலை வெடிமருந்து கிடங்கு வெடித்ததில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த வெடி விபத்துக்கு டெட்டனேட்டர், நைட்ரஜன் வெடி மருந்து வேன்களை அருகருகே வைத்து வெடி மருந்துகளை இறக்கியதே காரணம் என்று போலீஸாரின் எப்ஐஆரில் சொல்லப்பட்டுள்ளது.

தஞ்சை விவசாயிகள் போராட்டம்: மேகேதாட்டில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கும் மத்திய அரசுக்கும் தமிழக அரசு துணைபோவதாக குற்றம்சாட்டி, காவிரி மேகேதாட்டு அணை எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸார் தடுப்பு வேலிகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால், அந்தப் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜகவை விமர்சித்து மோடிக்கு கார்கே கடிதம்: “வெயிலை விட உங்களது கொள்கைகள்தான் ஏழை மக்களை அதிகம் சுட்டெரித்துள்ளது. நம் மக்களைப் பாதிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், வரலாறு காணாத விலைவாசி உயர்வு பற்றி பேசுவதில் உங்களுக்கு ஆர்வம் இல்லை” என விமர்சித்து, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். மேலும், தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, “400 இடங்களைப் பெறுவோம்’ என்பது ஜோக் ஆகிவிட்டது. ‘300 பெறுவோம்’ என்பது பாஜகவுக்கு சாத்தியமில்லை. 200 கூட பாஜகவுக்கு சவால்தான்” என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.

‘எங்கள் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை’ - மத்திய அரசு: இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மாநில அரசின் முன் அனுமதியின்றி அதன் எல்லைக்குள் பல வழக்குகளின் விசாரணையை சிபிஐ முன்னெடுப்பதாக மேற்கு வங்க அரசு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: பாலியல் வீடியோ சர்ச்சையில் சிக்கிய கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. எனினும், இன்னும் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் தற்போது அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது, வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழு.

“ராகுலை பிரதமராக்க பாக். தலைவர்கள் விருப்பம்”- மோடி: “பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸின் இளவரசரை இந்தியாவின் பிரதமராக்க விரும்புகிறார்கள்” என்று ராகுல் காந்தி குறித்து பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் சவுதரி ஃபவத் ஹூசைன், ராகுல் காந்தியை பாராட்டி பேசிய சில நாட்களுக்கு பின்னர் பிரதமர் இந்த விமர்சனத்தை வைத்துள்ளார்.

டெல்லி மகளிர் ஆணைய 223 ஊழியர்கள் பணி நீக்கம்: டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்களை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார், அம்மாநில துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா. விதிகளை மீறி ஊழியர்கள் நியமிக்கப்பட்டதாக கூறி அவர் பணிநீக்கம் செய்துள்ளார். ஆம் ஆத்மி அரசுக்கும் டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கும் தொடர் மோதல் நிலவிவரும் வேளையில், ஆளுநரின் பணிநீக்கம் உத்தரவு வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“சீனா, இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகிவிட்டது”: “சீனா மற்றும் இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகியுள்ளது. அதனால்தான் அந்த நாடுகளால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியவில்லை" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரிஜ் பூஷணுக்கு பதிலாக மகனுக்கு சீட் வழங்கிய பாஜக: உத்தரப் பிரதேசத்தின் கைசரகஞ்ச் தொகுதியின் தற்போதைய எம்.பி.யான பிரிஜ் பூஷணுக்கு பதிலாக, இந்த முறை அவரது மகன் கரண் பூஷண் சிங்குக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது. மல்யுத்த வீராங்கணைகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு பிரிஜ் பூஷண் உள்ளான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உ.பி.யில் மேனகா காந்தி வேட்புமனு தாக்கல்: உத்தரப் பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்கான ஊர்வலத்தில் பாஜகவின் முக்கியத் தலைவர்கள் யாருமே கலந்துகொள்ளாமல் விலகி நின்றது தெரிய வந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE