விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரி வெடிமருந்து கிடங்கில் விபத்து - 3 பேர் உயிரிழப்பு; உரிமையாளர் கைது

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் நேற்று காலை வெடிமருந்து கிடங்கு வெடித்ததில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

காரியாபட்டி அருகேயுள்ள கடம்பன்குளத்தில் ஆவியூரைச் சேர்ந்த சேது, ராஜபாளையத்தைச் சேர்ந்த ராம் ஆகியோருக்குச் சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது குவாரியில் உள்ள வெடிமருந்து கிடங்கில், வெடிபொருட்களை வேனிலிருந்து இறக்கி வைத்துக் கொண்டிருந்தனர். திடீரென வெடிபொருட்களில் உராய்வு ஏற்பட்டு, பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறின. சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு வெடி சப்தம் கேட்டது.

அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த டி.புதுப்பட்டி கந்தசாமி (47), கோவில்பட்டி துரை (25), குருசாமி (60) ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர். சுமார் ஒரு கி.மீ. வரை உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் சிதறிக் கிடந்தன. மேலும், வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கு முழுவதுமாக தரைமட்டமானது.

அதேபோல, வெடிபொருட்கள் கொண்டுவந்த வேன் மற்றும் அருகே நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வேன் ஆகியவை உருக்குலைந்தன.

தகவலறிந்து வந்த ஆவியூர் போலீஸார் மற்றும் மதுரையில் இருந்து வந்த வெடிகுண்டு தடுப்புபிரிவு நிபுணர்கள் அங்கு சோதனை மேற்கொண்டனர். விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோரும் விசாரணை நடத்தினர்.

எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா கூறும்போது, இந்த கிடங்கில் எவ்வளவு வெடி பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன, எவ்வாறு வெடி விபத்து நேரிட்டது என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

இதற்கிடையே, விபத்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி கடம்பன்குளம், ஆவியூர், உப்பிலிக்குண்டு கிராம மக்கள், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் மறியல் கைவிடப்பட்டது.

வெடி விபத்தால் கடம்பன்குளத்தில் உள்ள ஏராளமான வீடுகளில் மேற்கூரைகள் உடைந்து, சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளன. தங்களது வீடுகளை சீரமைத்துக் கொடுக்க வேண்டும், கல்குவாரி தொடர்ந்து இயங்க தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதற்கிடையே, குவாரி வெடிமருந்து கிடங்கு விபத்து தொடர்பாக ஆவியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, குவாரி உரிமையாளர் சேது என்பவரைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு உரிமையாளர் ஸ்ரீராமைத் தேடி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூகவலைதள பதிவில், "விருதுநகர் மாவட்டத்தில் நேரிட்ட வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

அவர்களது வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டதும், அரசின் நிவாரண உதவி வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE