வாக்கு பதிவு சதவீதத்தில் முரண்: கட்சி தலைவர்கள் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: வாக்குப்பதிவு சதவீதத்தில் அதிக முரண்பாடு இருப்பதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடைபெறும் மக்களவைத் தேர்தலின் இரண்டு கட்டம் முடிவடைந்த நிலையில், வாக்குப்பதிவு நாளன்று வெளியான புள்ளிவிவரத்தை (60 சதவீதம்) ஒப்பிடும்போது நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட இறுதிகட்ட புள்ளிவிவரத்தில் (66 சதவீதம்) சுமார் 6 சதவீதம் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வாக்குப்பதிவு சதவீதம் அதிகளவு முரண்பட்டிருப்பதாக கண்டனம் தெரிவித்து அரசியல் தலைவர்கள் கூறியதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: வாக்குப்பதிவு சதவீதம் முரண்பட்டிருப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்துள்ளோம்.

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்: மாற்றி மாற்றி வாக்குப் பதிவு சதவீதத்தை சொல்வது தேர்தல் ஆணையத்தின் குளறுபடிதான். மாற்றி மாற்றி கூறினால் அது குழப்பத்தை ஏற்படுத்தும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: வாக்குப்பதிவு சதவீதத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தபோதும், அதற்கான சரியான பதிலை தேர்தல் ஆணையம் கொடுக்கவில்லை. பிரதமர் மோடியின் ரப்பர் ஸ்டாம்பாக தேர்தல் ஆணையம் இருக்கிறது.

விசிக தலைவர் திருமாவளவன்: வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் தொடர்ந்து குளறுபடி செய்து வருகிறது. வாக்குப்பதிவு சதவீதம் தொடர்பான சந்தேகங்களை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE