அமோனியா வாயுக் கசிவு விவகாரத்தில் தனியார் தொழிற்சாலை மேலாளர் உட்பட 5 ஊழியர்கள் கைது @ கோவை

By செய்திப்பிரிவு

கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே, சிக்காரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சென்னி வீராம்பாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான உருளைக் கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் பயன்படுத்தப்பட்டுவந்த அமோனியா வாயுக் குழாயின் வால்வு நேற்று முன்தினம் அதிகாலை வெடித்தது.

தொடர்ந்து வாயுக்கசிவு பரவியதால், சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு கண் எரிச்சல், குமட்டல் உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்பட்டன. இதையடுத்து, 300-க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து வருவாய்த்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், காரமடை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மக்கள் போராட்டம் காரணமாக இந்த தொழிற்சாலை நேற்று முன்தினம் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது.

அஜாக்கிரதையாக செயல்பட்டதாக தொழிற்சாலையின் உரிமையாளர், ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காரமடை போலீஸில் கிராம நிர்வாக அலுவலர் தன சீலன் புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து தொழிற்சாலையின் உரிமையாளருடைய உறவினர் ஜாபர் அலி, மேலாளரான வீர பாண்டியைச் சேர்ந்த பால கிருஷ்ணன் ( 59 ), கோவைப்புதூரைச் சேர்ந்த டெக்னீசியன் குரு சாமி ( 62 ), ஊழியர்களான காரமடையைச் சேர்ந்த சாம் ராஜ் ( 42 ), சம்பத் குமார் ( 38 ) ஆகிய 5 பேரையும் நேற்று கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE