அமைச்சர் ஆய்வு செய்து 16 மாதங்கள் கடந்தும் பயனற்று கிடக்கும் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு @ விழுப்புரம்

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: விழுப்புரம் மகாராஜபுரம் அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் முற்றிலுமாக சேதமடைந்து பாழாகி வருகிறது.

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில், அரசு வீட்டுவசதி வாரியம் கட்டுப்பாட்டின் கீழ் அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பு வீடுகள் கட்டப் பட்டுள்ளன. இங்கு அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு என தனித்தனியாக ஏ, பி, சி, டி பிரிவுகளின் கீழ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வீடுகள் கட்டப்பட்டன. இந்த வீடுகள் அனைத்தும் ஒவ்வொரு பிளாக்கிற்கும் 6 வீடுகள் என 192 குடியிருப்புகள் கட்டப்பட்டன.

இங்குள்ள வீடுகள் சேதமடைந்து, பராமரிப்பு பணிகள் குறைந்ததால் படிப்படியாக வெளியேறினர். இதனால் பல வீடுகள் காலியாக உள்ளன. இதையடுத்து கட்டிடங்கள் முற்றிலுமாக சிதிலமடைந்து மக்கள் வசிப்பதற்கு தகுதியற்ற நிலைக்குமாறியது. குடியிருந்த அரசு ஊழியர்கள் அனைவரும் முற்றிலும் வெளியேறி விட்டனர். இவற்றை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகளை கட்டுவதற்கான கோப்புகள் அரசுக்கு அனுப்பப் பட்டு, நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, மகாராஜபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர், “தமிழகத்தின் 60 இடங்களில் வாடகை குடியிருப்புகள் இதைவிட மோசமான நிலையில் உள்ளன. தற்போது 60 இடங்களிலும் கட்டிடங்களை முழுமையாக இடிப்பதற்கு உத்தரவு கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் பணிகள் தொடங்கப் பட்டுள்ளது.

மேலும் உடனடியாக வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர், தற்போது கட்டப்பட உள்ள குடியிருப்புகளை 100 சதவீதம் முழுமையான தரத்துடனும், நீண்ட காலத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு கட்ட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. ஒரே கட்டமாக 60 இடங்களிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது. தற்போதுள்ள கட்டிடங்கள் அனைத்தும் 1999-ம் ஆண்டு கட்டப்பட்டது.

குறுகிய காலத்திற்குள்ளாகவே பழுதடைந்துள்ளதால் புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடங்கள் சுமார் 50ஆண்டுகளுக்கு மேல் உறுதியாக இருக்க வேண்டும் என கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார். அமைச்சர் முத்துசாமி குறிப்பிட்டு சுமார் 16 மாதங்கள் கடந்த நிலையில், இன்னமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அதே நிலைதான் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE