வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைப்பு: ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை தொல்லியல் துறை நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பிக்கும் வரை, நிறுத்தி வைப்பதாக தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள வள்ளலார் தெய்வ நிலையத்தின் சத்திய ஞான சபை முன்பு இருக்கும் 70 ஏக்கர் பரப்பில் உள்ள பெருவெளியில் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க ஒப்புதல் அளித்து, தமிழக அரசு 2023-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி அரசாணை வெளியிட்டது. பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், தொல்லியல் நிபுணர்களைக் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், வழக்கை கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், “106 ஏக்கர் பெருவெளி நிலம் வள்ளலாருக்கு சொந்தமானது. 150 ஆண்டு புராதன பகுதியான இங்கு எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது. புராதன சின்ன ஆணையத்தின் ஒப்புதலை அரசு பெறவில்லை. அந்த பகுதியில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள பக்தர்கள் விரும்பவில்லை. தற்போது அப்பகுதியை ஆய்வு செய்யும் மாநில தொல்லியல் துறை அதிகாரிகள் மீது நம்பிக்கையில்லை. எனவே, மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “வள்ளலார் சர்வதேச மையம், பிரதான கோயிலுக்கு அருகில் அமையவில்லை. 99.90 கோடி ரூபாய் அரசு செலவில், 500 பேர் அமரும் வகையிலான தியான மண்டபம், தர்மசாலை புதுப்பிப்பு, டிஜிட்டல் நூலகம், கழிவறை, சாலை வசதி, பக்தர்கள் தங்குமிடம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த சொத்து கோயிலுக்குச் சொந்தமானதாகவே இருக்கும்.

மேலும், பெருவெளி பகுதியான 71 ஏக்கரில் மூன்று ஏக்கர் பரப்பில் மட்டுமே கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறது. தொல்லியல் துறை ஆய்வில் சில தொன்மையான படிமங்கள் கிடைத்ததால் அந்த பகுதியில் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் தொல்லியல் துறை நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. தொன்மையான கட்டுமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அது பாதுகாக்கப்படும். பெருவெளியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தான் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறது. வழக்கு தொடர்ந்தவர் பாஜகவைச் சேர்ந்தவர். அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்திருக்கிறார்”, என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நிபுணர் குழு அறிக்கை அளிக்க மூன்று, நான்கு வாரங்கள் வரை ஆகலாம். அதுவரை கட்டுமானப் பணிகளை ஏன் நிறுத்தி வைக்கக் கூடாது? என கேள்வி எழுப்பினர். பணிகளை நிறுத்தி வைக்க அறிவுறுத்துவதாக தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை மே 10-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்