கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் ஓய்வு: டிரோன் கேமரா, பலூன் பறக்க தடை

By ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் ஓய்வு எடுக்க வருகை தந்துள்ளதை அடுத்து டிரோன் கேமரா, பலூன் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஓய்வெடுப்பதற்காக குடும்பத்தினருடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் (ஏப்.29) வந்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், கொடைக்கானலில் குடும்பத்தினருடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இன்று (ஏப்.29) காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் தனது மனைவி துர்கா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், மருமகள் கிருத்திகா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் புறப்பட்டு மதுரை வந்தார். அங்கிருந்து கார் மூலம் பிற்பகல் 1 மணிக்கு கொடைக்கானலுக்கு வந்தார். கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

கட்சியினருக்கு அனுமதியில்லை: கடந்த 2021-ல் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்ததும் குடும்பத்தினருடன் கொடைக்கானலில் 4 நாட்கள் தங்கியிருந்த முதல்வர், மன்னவனூரில் உள்ள மத்திய அரசின் செம்மறி ஆடுகள் உரோம மற்றும் முயல் ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்டார். தொடர்ந்து, மன்னவனூரில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, ஏரியை பார்வையிட்டார்.

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் குடும்பத்தினர் ஓய்வுக்காக வந்திருப்பதால் கட்சியினரும் யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. கொடைக்கானலில் வழிநெடுகிலும் சாலையோரம் முதல்வரை வரவேற்க நின்றிருந்த தொண்டர்கள், பொதுமக்களுக்கு காரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கையசைத்தபடி சென்றார்.

போக்குவரத்து தடை: முதல்வர் வருகையை முன்னிட்டு, கொடைக்கானலில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் வரும்போது வத்தலக்குண்டு - கொடைக்கானல் செல்லும் மலையடிவாரம் மற்றும் கொடைக்கானல் நகர் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதேபோல், பழநி வழியாக கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள் உட்பட இதர வாகனங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை செல்ல தடை விதிக்கப்பட்டது. அனைத்து வாகனங்களும் அய்யம்பாளையம் பிரிவு, சித்தரேவு, பெரும்பாறை, தாண்டிக்குடி மார்க்கமாக செல்ல அறிவுறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பல கி.மீ. தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது.

டிரோன், பலூனுக்கு தடை: முதல்வர் வருகையையொட்டி மே 4-ம் தேதி வரை கொடைக்கானல் பகுதிகளில் டிரோன் கேமராக்கள், பலூன் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த கெடுபிடிகளும் விதிக்கவில்லை. அதனால் வழக்கம் போல் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர். மே 3-ம் தேதி மீண்டும் சென்னை திரும்புவார் என திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE