பராமரிப்பு குறித்த விமர்சனங்கள் எதிரொலி: தமிழகத்தில் அரசு பேருந்துகள் உடனடியாக ஆய்வு

By செய்திப்பிரிவு

சென்னை: அனைத்து அரசு பேருந்துகளையும் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என கோட்ட மேலாண்இயக்குநர்களுக்கு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட 8 கோட்டங்களின் கீழ் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன. இதில், சொகுசு பேருந்து, தாழ்தள சொகுசு பேருந்து, குளிர்சாதன பேருந்து, படுக்கை வசதி உள்ள பேருந்து உட்பட 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கத்தில் உள்ளன.

மேலும், மின்சார பேருந்துஉட்பட பல்வேறு பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக போக்குவரத்து துறை எடுத்து வருகிறது.

இந்நிலையில், அண்மையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கே.கே.நகருக்குச் சென்ற அரசு நகரப் பேருந்து,ஒரு வளைவில் திரும்பியபோது, நடத்துநர் முருகேசன்(54) பேருந்தில் இருந்து இருக்கையுடன் சேர்ந்து வெளியே விழுந்துகாயமடைந்தார். இந்த விவகாரத்தில் பணிமனை மேலாளர் உள்ளிட்ட 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கு முன்னதாக விருதுநகர் மாவட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்து படிக்கட்டு உடைந்துவிழுந்த சம்பவமும் நிகழ்ந்திருந்தது. இதைத் தொடர்ந்து, அரசு பேருந்துகள் பராமரிப்பு மோசமாக இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, போக்குவரத்து துறைச் செயலர் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

48 மணி நேரத்தில்.. இதில், தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக ஆய்வு செய்யவும், முறையாகப் பராமரிக்கவும் அவர்உத்தரவிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக அனைத்து பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பேருந்துகளில் உள்ள பழுதுகளைச் சரி செய்ய வேண்டும், இதுதொடர்பான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE