வழக்குகளில் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்காவிட்டால் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் தீர்வு காண சட்டத்தில் இடமுண்டு: உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்ஜிவ் கண்ணா தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட நீதிபதி எந்த உத்தரவும் பிறப்பிக்காவிட்டால், சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக அந்த வழக்கை மீண்டும் விசாரித்து தீர்வு காண சட்டத்தில் இடமுண்டு என உச்ச நீதிமன்ற நீதிபதியும், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு செயற்குழு தலைவருமான சஞ்ஜிவ் கண்ணா தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள மாவட்டசட்டப்பணிகள் ஆணைக்குழுக்களின் செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கம் மற்றும் மத்தியஸ்த சட்டம் -2023 குறித்த ஒருநாள் சிறப்பு பயிற்சியரங்கம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

உச்ச நீதிமன்ற நீதிபதியும், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயற்குழு தலைவருமான சஞ்ஜிவ் கண்ணா இக்கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசியதாவது: கடந்த 2005-ம்ஆண்டு மத்தியஸ்தம் என்ற நடைமுறையே ஒத்துவராது என வழக்கறிஞர்கள் போர்க்கொடி தூக்கி எதிர்ப்புதெரிவித்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. இதில் 48 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறோம். மத்தியஸ்தத்துக்கு பிறப்பிடமே சென்னை உயர் நீதிமன்றம்தான். இதற்கு பல்வேறு திறமைகள் தேவைப்படுகிறது. உளவியலுடன் கூடிய போதுமான சட்ட அறிவு இருக்க வேண்டும். பல்வேறு பிரச்சினைகளுக்கு பாரபட்சம் இல்லாத சிறந்த தீர்வாக மத்தியஸ்தம் இருக்கிறது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

தற்போதைய நிலையில் மாவட்டநீதிமன்றங்களில் 2.37 கோடி வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் 20.67 லட்சம் வழக்குகளும், உச்ச நீதிமன்றத்தில் 52 ஆயிரத்து 660 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் முடிவுக்கு வர எத்தனை நாட்களாகும் எனக்கூறுவதற்கு எந்த புள்ளிவிவரமும் நம்மிடம் இல்லை. ஆனால் மத்தியஸ்தம் மூலமாக இவற்றை விரைவாக முடிவுக்கு கொண்டுவர முடியும்.

இந்த நிலுவை வழக்குகளில் மாவட்ட நீதிபதி 25 ஆயிரத்து 129 வழக்குகளையும், உயர் நீதிமன்ற நீதிபதி 2 ஆயிரத்து 636 வழக்குகளையும், உச்ச நீதிமன்ற நீதிபதி 1,538 வழக்குகளையும் தொய்வின்றி விசாரித்தால் மட்டுமே நிலுவை எண்ணிக்கை குறையும் என்றால் அது சாத்தியமற்றது.

இதற்கு மாற்றாக லோக்-அதாலத் சிறந்த தீர்வை தந்து கொண்டிருக்கிறது. லோக்-அதாலத் மூலமாக கடந்தாண்டு மட்டும் லட்சக்கணக்கான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. லோக்-அதாலத் பற்றிய விழிப்புணர்வு பட்டி, தொட்டியெங்கும் சென்றடைந்துள்ளது. லோக்-அதாலத் மூலமாக பிரச்சினைக்கு உடனடி தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்துள்ளது.

சுமார் 35 லட்சம் வழக்குகளில் 10 முதல் 11 லட்சம் வழக்குகள் மத்தியஸ்தம் மூலமாக தீர்வு காணப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமாகவும் மத்தியஸ்தம் செய்யும்திட்டம் விரைவில் கொண்டு வரப்படவுள்ளது.

குழந்தை திருமணங்கள் கொடுங்குற்றம். அதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. அதேபோலவழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என சம்பந்தப்பட்ட நீதிபதி எந்த உத்தரவும் பிறப்பிக்காவிட்டால், சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக அந்த வழக்கை மீண்டும் விசாரித்து இழப்பீடு வழங்க சட்டத்தில் இடமுண்டு. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வுகளுக்கு தலைமை வகித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா பேசும்போது, ‘‘தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலமாக கைதிகளுக்கான சட்ட உதவி உட்பட 19 திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். கடந்தாண்டு ஜனவரி முதல்கடந்த பிப்ரவரி வரை இலவச சட்ட உதவி கோரி 51 ஆயிரத்து 824 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், 48 ஆயிரத்து 352 விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. லோக் அதாலத் மூலமாக 3.53 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2 ஆயிரத்து 652 கோடி இழப்பீடு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதல் மத்தியஸ்த மையம் சென்னையில்தான் அமைக்கப்பட்டது. அந்த முதல் மைய அறையை நினைவு சின்னமாக பாதுகாத்து வருகிறோம். தமிழகத்தில் ஏற்கெனவே 32 சமரச தீர்வு மத்தியஸ்த மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் புதிதாக 17 மையங்கள் தொடங்கப்படவுள்ளன. அதேபோல வழக்கறிஞர்களுக்கு 'மத்தியஸ்தம் சட்டம் - 2023' பற்றி அதிகம் தெரிந்திருக்க வேண்டும் என்றார்.

மாலையில் நடந்த நிறைவு விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் பங்கேற்று பேசினார். முன்னதாக இக்கருத்தரங்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் வரவேற்க, நீதிபதிடி.கிருஷ்ணகுமார் நன்றி தெரிவித்தார். நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர்,என்.சதீஷ்குமார், ஜி.கே.இளந்திரையன், டி.பரத சக்ரவர்த்தி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராம் பஞ்சு உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.

இக்கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் ஏற்பாடுகளை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எம்.ஜோதிராமன், மாநில சமரச தீர்வுமைய இயக்குநர் கே.பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர்கள் ஏ.நசீர்அகமது, ஜி.டி.அம்பிகா, உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் கே.சுதா உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்