கட்டுமானப் பணிக்கு மிக முக்கியமான மூலப்பொருளான மண லில் கலப்படம் நடப்பதாக பரவ லாக புகார் கூறப்படுகிறது. மணலின் தரத்தைப் பரிசோதிக்க முறையான வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
தமிழகத்தில் கட்டுமானப் பணிகள் ஆண்டு முழுவதும் நடந்தாலும், கோடைக்காலத்தில் முழுவீச்சில் நடைபெறும். காரணம், கோடையில் ஆறுகள் வறண்டு கிடக்கும் என்பதால் தேவையான அளவு மணல் அள்ள முடியும். கிராமங்களில் விவசாயப் பணிகளும் அவ்வளவாக இருக்காது என்பதால், கட்டுமான வேலைக்கு தொழிலாளர்களும் கிடைப்பார்கள். ஆனால், தேவையைவிட மணல் சப்ளை குறைவாக இருப்பதால், கலப்பட மணல் விற்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
சில்லறை விற்பனைக் கடைகளில் தூத்துக்குடி மணல், மலேசியா மணல், பிற இடங்களின் ஆற்று மணல் என்று பலவாறாகக் கூறி விற்கின்றனர். சென்னையில் உள்ள கடை ஒன்றில் ஒரு வாடிக்கையாளர் மணல் வாங்கச் சென்றபோது, மணல் விலை குறைந்திருப்பதாகக் கூறி, குருணை போன்ற மணலைக் கொடுத்துள்ளனர். அவர் சந்தேகம் அடைந்து கேட்டதற்கு, ‘தூத்துக்குடி மணல், நல்ல மணல்தான்’ என்று சொல்லி கொடுத்துள்ளனர். அவர்கள் கொடுத்த ரசீதில் கடை பெயர், முகவரி, தொலைபேசி எண், டின் நம்பர் எதுவுமே இல்லை. இதுபோல பல கடைகளில் நடப்பதாகக் கூறப்படுகிறது.
ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்போர், குறிப்பாக இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) உறுப்பினர்கள் ஆகியோர் கட்டுமானப் பணி நடக்கும் இடத்திலேயே மணலின் தரத்தை சோதித்துப் பார்த்து உறுதிசெய்து கொள்கின்றனர். பொதுமக்களுக்கு அதுபோன்ற வசதியோ, வழிகாட்டுதலோ இல்லை. இதனால் வீடு மராமத்துப் பணிக்கோ, சிறிய அளவிலான கட்டுமானங்களுக்கோ உள்ளூர் கடைகளில் மணல் வாங்கும் போது அதன் தரத்தைத் தெரிந்து கொள்ள முடிவதில்லை.
இதுகுறித்து கிரெடாய் சென்னை பிரிவு தலைவர் சுரேஷ்கிருஷ்ணா கூறியதாவது:
தமிழகம் முழுவதும் சிறியதும், பெரியதுமாக ஆயிரம் கட்டுமானத் திட்டங்களுக்கான பணிகள் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் நடக்கின்றன. இப்பணிகளுக்கு நாள்தோறும் சராசரியாக 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் லாரி லோடு மணல் தேவைப்படுகிறது. லாரிகளில், 2 யூனிட் லாரி, 4 யூனிட் லாரி, 6 யூனிட் லாரி, 10 யூனிட் லாரிகள் உள்ளன. (ஒரு யூனிட் = 100 கனஅடி)
மக்களை ஏமாற்றி விற்பனை
ஏஜென்ஸிகள் அரசிடம் இருந்து மணலை வாங்கி விற்கின்றன. ரியல் எஸ்டேட் தொழில் செய்வோரில் பலரும் ஏஜென்ஸிகளிடமே வாங்குகின்றனர். அந்த மணலின் தரத்தை கட்டுமானப் பணி நடக்கும் இடத்திலேயே பரிசோதிக்கிறோம். தரம் குறைவாக இருந்தால் பணம் தரமாட்டோம். அதன்பிறகு, அவர்களிடம் மணல் வாங்கவும் மாட்டோம். இதனால், ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் கலப்பட மணலை விற்கமாட்டார்கள். பொதுமக்களிடம் விற்கும் மணலைப் பரிசோதிக்க அரசு அமைப்போ, தனியார் அமைப்போ இல்லாததால், அவர்களிடம் ஏமாற்றி விற்றுவிடுகின் றனர் என்றார்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மணலை அரசுதான் விற்கிறது. அதனால் கலப்படத்துக்கு வாய்ப்பு இல்லை. ஆனால், அரசிடம் இருந்து மணல் வாங்கிச் செல்லும் ஏஜென்ஸிகள் மறுவிற்பனையின்போது கலப்படம் செய்தால் எதுவும் செய்ய முடியாது. எனவே, பொதுமக்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். கடைகளில் கட்டாயம் ரசீதுடன்தான் மணல் வாங்க வேண்டும். அந்த மணலில் கலப்படம் இருந்தால் ரசீதைக் கொண்டு சம்பந்தப்பட்ட கடை மீது நடவடிக்கை எடுக்கலாம். மணல் வாங்கியதற்கான ஆதாரம் இருந்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த மணல், தரம் குறைந்தது என்பதால் திருப்பி அனுப்பப்பட்டது. எனவே, மலேசிய மணல் என்று வியாபாரிகள் விற்பனை செய்தால், மக்கள் அதை வாங்கி ஏமாற வேண்டாம்.
மணல் தரத்தில் மக்களுக்கு சந்தேகம் இருந்தால், சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித் துறை வளாகத்தில் உள்ள மணல் பரிசோதனை, ஆய்வு மையத்தில்(Soil Mechanic and Research Lab) பரிசோதித்து தரத்தை உறுதிசெய்து கொள்ளலாம். கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டால், ஆதாரங்களுடன் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கலாம்.
ரசாயன முறையில் மணலின் தரத்தைப் பரிசோதிக்க, செலவும், சில நாட்கள் அவகாசமும் ஆகும். சுயமாகவும் பரிசோதிக்கலாம். கண்ணாடி டம்ளரில் தண்ணீரை ஊற்றி மணலைப் போட வேண்டும். கடற்கரை மணலாக இருந்தால் தண்ணீரில் உப்பு கரையும். அந்தத் தண்ணீரை சுவைத்துப் பார்த்து, உப்பாக இருந்தால், கடற்கரை மணல் என்று கண்டுபிடிக்கலாம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
கட்டுமானப் பணிகளில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் மணலின் தரத்தை பரிசோதிக்க, மாநிலம் முழுவதும் போதிய வசதி வாய்ப்புகளை அரசு ஏற்படுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago