மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் 5-ம் நாளான நேற்று அதிகாலை கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என விண்ணதிர கோஷம் எழுப்பி, சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று மதுரை சித்திரை திருவிழா. இதையொட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 12-ம் தேதியும், அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கடந்த 19-ம் தேதியும் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கடந்த 21-ம் தேதியும், தேரோட்டம் 22-ம் தேதியும் விமரிசையாக நடைபெற்றன.
இதற்கிடையே, மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்வுக்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடத்தில் கண்டாங்கி பட்டுஉடுத்தி நேரிக்கம்புடன் தங்கப் பல்லக்கில் மதுரைக்கு கடந்த 21-ம் தேதி புறப்பாடானார்.
» இணைய இணைப்பின்றி போட்டோ, வீடியோவை பகிரும் அம்சம்: வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகம்
» CSK vs LSG | ஸ்டாய்னிஸ் அபார ஆட்டம்: சேப்பாக்கத்தில் சென்னையை வீழ்த்திய லக்னோ
மூன்றுமாவடியில் எதிர்சேவை: கடந்த 22-ம் தேதி மதுரை மாநகர எல்லையான மூன்றுமாவடியில் எதிர்சேவை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகரை வரவேற்றனர். பின்னர், புதூர் மாரியம்மன் கோயில், ரிசர்வ் லைன் மாரியம்மன் கோயில் வழியாக அவுட்போஸ்ட், தல்லாகுளம் அம்பலக்காரர் மண்டகப்படி உட்பட நூற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார்.
இரவு 8 மணிக்கு மேல் தல்லாகுளம் பிரசன்னவெங்கடாசலபதி கோயிலில் தங்கினார். இரவு 11.30 மணிக்குமேல் திருமஞ்சனமாகி, தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலையை சூடி அருள்பாலித்தார்.
இந்நிலையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் உற்சவம், சித்ரா பவுர்ணமி நாளான நேற்று நடைபெற்றது.
முன்னதாக, நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் எழுந்தருளி, பின்னர் தங்கக் குதிரை வாகனத்தில் ஆயிரம்பொன் சப்பரத்தில் அதிகாலை 3.30 மணி அளவில் கள்ளழகர் அருள்பாலித்தார். தொடர்ந்து, பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி, வைகை ஆறு நோக்கி புறப்பட்டார்.
பூமாலைகள், வெட்டிவேர் மாலை: இதற்கிடையே, வைகை ஆற்றில் கள்ளழகரை வரவேற்கும் வகையில் எழுத்தாணிக்கார தெரு வீரராகவப் பெருமாள், வெள்ளிக் குதிரையில் அதிகாலை 5 மணி அளவில் வைகை ஆற்றில் உள்ள சந்திப்பு மண்டபத்துக்கு வந்தடைந்தார்.
வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்காக ஆழ்வார்புரம் வைகை கரைக்கு தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் அதிகாலை 5.51 மணிக்கு வந்தார். அங்கு கள்ளழகர் கோயில் சார்பில் அவருக்கு பூமாலைகள், வெட்டிவேர் மாலைகள் சாற்றப்பட்டன.
பின்னர், வீரராகவப் பெருமாள் வரவேற்க, பக்தர்கள் மனம் குளிர கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் காலை 6.02 மணிக்கு எழுந்தருளினார். அங்கு லட்சக்கணக்கில் திரண்டிருந்த பக்தர்கள், ‘‘கோவிந்தா, கோவிந்தா, அழகர்மலையானே’’ என பக்திப் பெருக்குடன் கோஷமிட்டனர்.
ஏராளமானோர் சர்க்கரை தீபம் ஏற்றி வழிபட்டனர். கருப்பசாமி வேடமணிந்த ஏராளமான பக்தர்கள், கள்ளழகர் மீது தோல்பை துருத்தி மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து அவரை குளிர்வித்தனர்.
பின்னர், மண்டகப்படியை 3 முறை வலம்வந்து பக்தர்களுக்கு கள்ளழகர் அருள்பாலித்தார். அங்கு வையாழி ஆகி, பின்னர் சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளி வீரராகவப் பெருமாளுக்கு முதல் மரியாதையாக மாலை சாற்றப்பட்டது.
பின்னர், அறநிலையத் துறை மண்டகப்படியில் கள்ளழகர் எழுந்தருளினார். இந்த விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா, முன்னாள் அமைச்சர் ஆர்,பி.உதயகுமார், நடிகர் சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வைகை ஆற்றில் இருந்து கள்ளழகர் காலை 7.35 மணி அளவில் புறப்பட்டு, ஆழ்வார்புரம் வழியாக ராமராயர் மண்டபம் சென்றார். அங்கும் கள்ளழகர் மீது பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். பின்னர், அண்ணா நகர் வழியாக பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர், வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் இரவு எழுந்தருள்கிறார்.
மண்டூக முனிவருக்கு மோட்சம்: இன்று (ஏப்.24) வண்டியூர் வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கிறார் கள்ளழகர். இன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்வு நடைபெறுகிறது.
வரும் 25-ம் தேதி பூப்பல்லக்கு நடைபெறும். 26-ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் கள்ளழகர், 27-ம் தேதி அழகர்மலை திரும்புகிறார். 28-ம் தேதி உற்சவ சாற்றுமுறையுடன் திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், கோயில் துணை ஆணையர் லெ.கலைவாணன், அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.
செழிப்பை தரும் பச்சைப் பட்டு: மக்கள் மகிழ்ச்சி - ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று கள்ளழகர் பச்சை, சிவப்பு, வெள்ளை, மஞ்சள் ஆகிய நிறங்களில் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்குவது வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அழகர் உடையின் நிறத்துக்கு ஏற்ப அந்த ஆண்டு அமையும் என்பது ஐதீகம். அதன்படி, அழகர் பச்சை பட்டு உடுத்தி இருந்தால், அந்த ஆண்டில் இயற்கை வளம் செழிப்பாகவும், விளைச்சல் சிறப்பாகவும் இருக்கும்.
மஞ்சள் பட்டு உடுத்தி வந்தால், அந்த ஆண்டில் நிறைய மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறும். வெண்பட்டு என்றால், நாட்டில் வன்முறைகள், கலவரங்கள் குறைந்து நடுத்தரமான நிலை காணப்படும். சிவப்பு பட்டு உடுத்தி வந்தால், நாட்டில் விளைச்சல் குறைந்து, மக்களிடம் அமைதியின்மை காணப்படும் என்பது நம்பிக்கை.
இதனால், வைகை ஆற்றில் இறங்க வரும் அழகர் என்ன நிறத்தில் பட்டு உடுத்துவார் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். இந்த நிலையில், அழகர் தற்போது பச்சைப் பட்டு உடுத்தி வைகையில் இறங்கியதால், இந்த ஆண்டு இயற்கை வளம், விளைச்சல் சிறப்பாக இருக்கும் என்று மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
48 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago