“வாக்கு வங்கி அரசியலுக்காக சர்ச்சை கருத்து” - மோடியின் சொத்து பேச்சு குறித்து இபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: “அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேச கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்” என்று பிரதமர் மோடியின் ராஜஸ்தான் பொதுக்கூட்ட பேச்சு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது.

அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி பேசியது என்ன?: ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்ன சொன்னார்... “நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை” என்றார். அப்படியானால் யாருடைய சொத்துகளை பறித்து யாரிடம் கொடுப்பீர்கள்?! சொத்துகள் ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்பதே அதன் பொருள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், ஊடுருவல்காரர்களுக்கே போக வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? நம் பெண்கள் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளி வைத்திருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் கணக்கிடும். தங்கம் ஒரு பெண்ணின் சுயமரியாதை. ஒரு பெண்ணின் தாலியின் மதிப்பு தங்கத்தின் விலையில் மட்டுமல்ல, அவர்களின் கனவுகளுடன் தொடர்புடையது. ஒரு பெண்ணின் தாலியை பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது" என்று பேசியிருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE