கும்பகோணம்: சித்திரை திருவிழாவையொட்டி, கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிலையில், பக்தர்கள் தேரை ‘சாரங்கா சாரங்கா’ என முழக்கமிட்டபடி வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர் சக்கரம் 10 அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.
கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் நடைபெற்றது. கும்பகோணம் சாரங்கபாணி கோயில் 108 திவ்விய தேசங்களில் 3-வதாகவும், 7 ஆழ்வார்களால் போற்றி பாடப் பெற்றதும், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் எனும் தமிழ்ப் பாடல் தொகுப்பு அறியப்பட்டதுமான பழமையான கோயிலாகும்.
ஆண்டுதோறும் தை மாதத்தில் நடைபெறும் தைத்தேரோட்டம், சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரைத் தேரோட்டம் இந்தக் கோயிலில் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். தமிழகத்திலேயே 3-வது பெரிய தேரான இந்த தேரோட்ட விழா கடந்த ஏப்.15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா நடைபெற்று வருகிறது.
பிரதான நிகழ்வான தேரோட்டம் இன்று (ஏப்.23) அதிகாலை நடைபெற்றது. முன்னதாக சிறப்பலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி உடனாய சாரங்கபாணி சுவாமி தேரில் காட்சியளித்தனர். கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், தேரின் வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தார்.
அவருடன் அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர்கள் உமாதேவி, சூரியநாராயணன், மேயர் க.சரவணன், துணை மேயர் சு.ப.தமிழழகன்,தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களின் கூட்டமைப்புக் குழுத்தலைவர் ஆர்.கே.பாஸ்கர் மற்றும் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாரங்கா சாரங்கா என முழக்கமிட்டபடி தேரின் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.
தொடர்ந்து, 10 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. ஏப்.24-ம் தேதி ஸப்தாவர்ணம், 81 கலச ஸ்நபன திருமஞ்சனம், ஏப்.25 முதல் மே 1-ம் தேதி வரை உற்சவர் ஆராவமுதன், சக்கரத்தாழ்வார், சக்கரவர்த்தி திருமகன் ஆகியோர் பல்வேறு மண்டபங்களுக்கு எழுந்தருளல், மே 2-ம் தேதி இரவு 8 மணிக்கு மணித்தட்டிகளால் அலங்கரிக்கப்பட்ட 3 புஷ்ப பல்லக்குகளில் சாரங்கபாணி, சக்கரபாணி, சக்கர வர்த்தி திருமகன் வீதியுலா ஆகியவை நடைபெற உள்ளன.
கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்திவாசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாரும், தீயணைப்பு படை வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சுகாதாரத்துறை சார்பில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் தேருக்கு முன்னும் பின்னும் சென்றது. இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலர் ச.சிவசங்கரி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சாரங்கபாணி கோயில் தெற்கு வீதியில் தேர் காலை 10 மணி அளவில் சென்று கொண்டிருந்த போது. அந்த சாலைக்குள் இருந்த குடிநீர் தொட்டி பகுதி திடீரென சாலை 10 அடி ஆழத்தில் உள்வாங்கியது. அதில் தேரின் முன்புறத்தில் இடது புற சக்கரம் சிக்கியது. இதனால் தேர் தெற்கு புறமாக சாய்வதற்கு வாய்ப்புள்ளதால், ராட்சத இயந்திரம் மூலம் அந்த சக்கரத்தை தூக்கிப் பிடித்துள்ளனர்.
இதற்கிடையில், 100-க்கும் மேற்பட்ட தேரோட்டும் கொத்தனார்கள், ஜாக்கி போன்ற இயந்திரங்களால் சக்கரத்தை தூக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் போதிய திறன் இல்லாததால், ராட்சத ஜாக்கி கொண்டு வரப்பட்டு, அந்தப் பள்ளத்தில் கருங்கல் ஜல்லிகளை நிரப்பி, சக்கரத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தகலையறிந்து, அங்கு வந்த துணை மேயர் சு.ப.தமிழழகன், ஆணையர் ஆர்.லட்சுமணன், உதவி செயற் பொறியாளர் ஐய்யப்பன் ஆகியோர் பார்வையிட்டு, சக்கரத்தை மீட்டும் பணிக்கான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். தேரோட்டும் வீதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என கடந்த 21-ம் தேதி இந்து தமிழ் திசை நாளிதழில் செய்தி பிரசுரமானது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago