திருப்பூர்: தகுதி இருந்தும் பட்டியலில் பெயர் நீக்கம், குளறுபடி தொடர்வதால் வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைக்க தேர்தல் ஆணையம் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உரிய தகுதி இருந்தும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்ட விஷயம், தற்போது பலரின் மனக்குமுறலாக மாறி வருகிறது. இது தொடர்பாக திருப்பூர் காதர்பேட்டையை சேர்ந்தவர்கள் கூறும்போது, “கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தேர்தலில் வாக்களித்தும், தற்போதைய மக்களவை தேர்தலில் எங்களுடைய பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.
நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் முக்கிய தேர்தல்களில் கூட வாக்காளர் பட்டியலில் கடும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால் எங்கள் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அதுவும் தேர்தல் நாளில் வாக்குப்பதிவு மையத்துக்கு சென்றபிறகுதான், எங்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இது, மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது” என்றார்.
அரசியல் கட்சியினர் கூறும்போது, ‘‘தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. ஆனால், தொழிலாளர் நகரங்களில் பலரும் பல்வேறு தொழில் தேவைக்காக, ஒரே இடத்தில் இருக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டே இருப்பார்கள். இதனால் அவர்களுக்கான வாக்குகள் எங்குள்ளது என்பதை கண்டறிவது தொடங்கி நீக்கம் வரை பெரும் குழப்பம் நிகழ்ந்துள்ளது.
திருப்பூர் போன்ற தொழில் நகரத்தில் முறையாக கணக்கெடுத்தால், ஒரு வார்டுக்கு 50 முதல் 100 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பார்கள். சிறப்பு சுருக்க முறை 1 மற்றும் சிறப்பு சுருக்க முறை 2 ஆகிய முறை திருத்தங்கள் செய்யும் போது, கடந்த காலங்களில் நீக்கல் பட்டியல் பின் இணைப்பாக இருக்கும். ஆனால், இந்த முறை அப்படி செய்யவில்லை. இதனால் பலரும் வாக்குச் சாவடிக்கு சென்று தெரிந்து கொள்ளும் நிலை தான் ஏற்பட்டது’’ என்றனர்.
திராவிட இயக்கங்களின் மூத்த தலைவர் திருப்பூர் சு.துரைசாமி கூறும்போது, “1946-ம் ஆண்டு இந்தியா சுதந்திரத்துக்கு முன்பு சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தலில் தொழிலாளர்களுக்கென்று தனித் தொகுதி இருந்தது. அப்போது கோவை தொடங்கி கேரளத்தின் கள்ளிக்கோட்டை வரை இருந்த பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பி.ராம மூர்த்தி போட்டியிட்டார். வங்கத்தில் ஜோதிபாசு உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
இப்படி பல தேர்தல்களை பார்த்துள்ளேன். ஒவ்வொரு முறையும் 100 சதவீதம் வாக்களிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் படும். ஆனால், தொடர்ந்து வாக்குப் பதிவு என்பது எதிர்பார்த்த அளவுக்கு இருப்பதில்லை என்பது தான் கள யதார்த்தம். நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் நிறைவடைந்துள்ளது. இதில் சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் வாக்காளர் பட்டியல் குளறுபடி மற்றும் வாக்குப்பதிவு சரிந்துள்ளது. தேர்தல் ஆணையம் இன்றைக்கு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
இருப்பினும், இன்றைக்கு பொருளாதார ரீதியாக வேலை கிடைக்கும் இடத்தில் வாழ வேண்டிய தேவை ஒவ்வொருவருக்கும் உள்ளது. இதனால் வேலை செய்யும் இடங்களில் அவரவர் வாக்களிக்க உரிய ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் 3 மாதங்களுக்கு முன்பே செய்ய வேண்டும். அதாவது எங்கு வாக்களிக்க விரும்புகிறீர்கள் என்பதை விருப்பமாக பெறலாம். அதேபோல், இன்றைக்கு தேர்தல் காலங்களில் செலவு செய்து ஊருக்கு சென்று பலரும் வாக்களிக்க தயங்குகிறார்கள்.
ஒரு குடும்பத்தில் 4 பேர் சென்று வந்தால் கூட, ரூ.2 ஆயிரத்துக்கு மேல் செலவாகும். இதனால் பலரும் வேலை செய்யும் இடத்திலேயே வாக்களிக்காமல் தங்குகிறார்கள். இது போன்ற பொருளாதார ரீதியிலான காரணங்கள் வாக்குப்பதிவு சதவீதம் உயராமல் இருக்க முக்கியக் காரணம். எனவே, இதுபோன்ற சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். அதேபோல் பெயர் நீக்கம் மற்றும் சேர்க்கையில் முழுமையான நடவடிக்கையை கையாள வேண்டும்.
இதனால் இரண்டு முறை பதிவாவது தடுக்கப்படும். வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்தால் பெரும்பாலான குழப்பங்கள் தீரும். ஆதார் எண்ணை இணைக்கும்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இடம் பெறுவதை நிச்சயம் தவிர்க்கலாம். இதை செய்ய தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். இது போன்ற குளறுபடிகளை தடுக்கும் போதுதான், எதிர்காலத்தில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க முடியும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago