பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: மதுரையில் கோலாகலம்

By செய்திப்பிரிவு

மதுரை: ‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கம் விண்ணை முட்ட பக்தர்கள் புடைசூழ தங்கக் குதிரை வாகனத்தில், பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். செவ்வாய்க்கிழமை (ஏப்.23) அதிகாலை 6 மணி அளவில் மதுரை - ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர். இந்த நிகழ்வின்போது லட்சோப லட்சம் மக்கள் கள்ளழகரை தரிசித்து வழிபட்டனர்.

அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.19-ம் தேதி தொடங்கியது. 3-ம் நாளான 21-ம் தேதி மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்க சுந்தரராஜ பெருமாள், கண்டாங்கி பட்டு உடுத்தி நேரிக்கம்புடன் தங்கப் பல்லக்கில் கள்ளழகர் வேடத்தில் மதுரைக்கு பதினெட்டாம்படி கருப்பணசாமியிடம் உத்தரவு பெற்று புறப்பட்டார்.

விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை சித்திரா பவுர்ணமி நாளில் ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர். முன்னதாக, வழிநெடுகிலும் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினார் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் ஆடிப்பாடி அழகரை வழிபட்டனர். வரும் 27-ம் தேதி அன்று கள்ளழகர் அழகர்கோவிலுக்கு திரும்புகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE