வாக்குப்பதிவு அறிவிப்பில் குழப்பம் ஏன்? - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: வாக்குப்பதிவு நிலவரம் குறித்த அறிவிப்புகளில் நடந்த குழப்பம், தாமதம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு விளக்கம் அளித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் பெயர்கள் ஏன் நீக்கப்படுகின்றன என்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.

தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்குப்பதிவு நிலவரம் தொடர்பான விவரங்கள் வெளியானதில் குழப்பமும், இறுதி நிலவரம் வெளியாவதில் தாமதமும் ஏற்பட்டது. இதற்கான காரணங்கள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று கூறியதாவது:

வாக்குப்பதிவு மேலாண்மை தொடர்பாக கடந்த 2019 தேர்தலில் இருந்தே ஒரு செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடிக்கு அலுவலர்கள் சென்றுவிட்டனரா, எத்தனை பேர் சென்றுள்ளனர் என்ற விவரங்கள் அதில் பதிவாகும். இந்த விவரம், வாக்குப்பதிவு விவரம் ஆகியவை, கடித வாயிலாக நமக்கு வராது. செயலி வருவதற்கு முன்பு விவரங்கள் தொலைபேசி மூலம் பெறப்பட்டன.

அப்போதும்கூட பணி காரணமாக அனைத்து விவரங்களையும் வாக்குப்பதிவு அலுவலர்களிடம் இருந்து பெறஇயலாது. அனைவரும் தொலைபேசியை எடுத்து பேசவும் மாட்டார்கள். தற்போது செயலியிலும் அதே நிலைதான் உள்ளது.

ஒவ்வொரு வாக்குச்சாவடி தலைமை அலுவலரும் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது என்ற விவரத்தை வேட்பாளரிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். அதேநேரம், செயலியில் பதிவு செய்வது கட்டாயம் அல்ல.

அந்த தரவுகளை சேகரிக்கும் சட்டப்பேரவை தொகுதிக்கான உதவி தேர்தல் அலுவலர்கள், இரவு 11.59 மணிக்குள் கிடைக்கும் தரவுகளை கணினியில் பதிவு செய்வார்கள். அதுவரை வந்த தகவலைதான் இரவு 12 மணிக்கு அளித்தேன். அதிலும் தூத்துக்குடி வாக்குப்பதிவு விவரம் முழுமையாக தரவில்லை.

இந்த செயலியில் இருந்து தரவுகளை மட்டுமே சேகரிக்க முடியும். தேர்தல் நடத்தும் அலுவலரால் ஒப்புகை அளிக்கப்பட்ட விவரத்தை பெற முடியாது. எப்போதும் தேர்தல் நடத்தும் அலுவலரின் ஒப்புகை அளிக்கப்பட்ட விவரம்தான் சரியானது. அதனால்தான், தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தரவுகளில் ‘பொறுப்பு துறப்பு’ என்பது இடம்பெற்றுள்ளது.

வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் காலை 11 மணிக்கு வாக்குப்பதிவு விவரங்களை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர் சரிபார்ப்பார்கள். ஏதேனும் மாற்றம் இருந்தால், ‘17சி’, ‘17ஏ’ படிவங்கள் சரிபார்க்கப்படும். பிறகு, ‘17ஏ’ படிவத்தில் உள்ள தரவுகள்தான் கணினியில் இறுதியாக பதிவு செய்யப்படும்.

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது இரவு 7 மணிக்கு69 சதவீதம் என வாக்குப்பதிவு நிலவரம் அளிக்கப்பட்டது. மறுநாள் 72 சதவீதமாக உயர்ந்தது. இம்முறை அதற்கு மாறாக, சதவீதம் குறைந்துள்ளது. அதிகமாக வாக்குப்பதிவு நடந்ததாக சிலர் தரவு அளித்தது, குறைவான வாக்குப்பதிவு நடந்ததால் தரவு தகவல் அளிக்காமல் விட்டது, 2 மணி நேரத்துக்கு ஒருமுறை தகவல்களை அளிக்க வேண்டிய சூழல் ஆகிய காரணங்களால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது.

தவிர, தற்போது கணினி பயன்பாட்டில் ‘என்கோர் சிஸ்டம்’ கொண்டு வந்துள்ளதால், இரவு 11.59 மணி வரைமட்டுமே உதவி தேர்தல் அலுவலரால் தரவுகளை பதிவேற்ற முடியும். அதன்பிறகு, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று மறுநாள் காலையில்தான் பதிவு செய்ய முடியும்.

தமிழகத்தில் இதுவரை எந்த தொகுதியிலும், எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடத்துமாறு பார்வையாளர்கள், தேர்தல் அலுவலர் யாரும் ஆணையத்திடம் தெரிவிக்கவில்லை.

பட்டியலில் பெயர் நீக்கம்: வாக்காளரின் பெயர் ஏன் நீக்கப்பட்டுள்ளது என்று ஒவ்வொருவரது விவரங்களையும் தனித்தனியாக ஆய்வு செய்தால்தான் தெரியும்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது, முதலில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் தங்கள் பெயர் இருக்கிறதா என்பதை பொதுமக்கள் பார்க்க வேண்டும். பெயர் இல்லாவிட்டால், வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது கட்சி பிரதிநிதிகளிடம் தெரிவிக்க வேண்டும். விடுபட்டவர்கள் பெயர் சேர்க்க கடந்த மார்ச் 27-ம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இறுதி பட்டியல் வெளியான பிறகும்,திருத்தப் பணிகளின்போதும் பெயர் சேர்க்க முடியும் எனும்போது, அந்தவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு வரவேண்டும்.

வீட்டில் வாக்காளர் இல்லாதது (ஆப்சென்ட்), வேறு இடத்துக்கு மாறியது (ஷிஃப்டிங்), உயிரிழப்பு (டெத்) என்ற 3 அடிப்படையில் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படலாம்.திருத்தப் பணியின்போது வீடு வீடாகசென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர் சரிபார்ப்பார்.

அப்போது, ‘சம்பந்தப்பட்ட வாக்காளர் இந்த முகவரியில் இல்லை’ என்று அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கும் பட்சத்தில், தொடர்ச்சியாக பல தேர்தல்களில் வாக்களிக்காதவர்களின் பெயர்கள் நீக்கப்படக்கூடும்.

அந்த சூழலில், அவரது பெயரை நீக்க யாராவது ‘படிவம் 7’ தந்தால், ‘உங்கள் பெயரை நீக்கலாமா?’ என்று கேட்டு, வாக்காளர் பட்டியலில் உள்ளமுகவரிக்கு பதிவுத் தபால் அனுப்பப்படும். அந்த முகவரியில் இல்லாத அவர், அதற்கு பதில் அளிக்காத நிலையில், பெயர் நீக்கப்படும். ஆதார் மற்றும் தொலைபேசி எண் முழுமையாக வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்படும் பட்சத்தில் இந்த பிரச்சினை வராது.

சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த 20 வாக்காளர்களின் பெயர்கள், மத்திய பிரதேச வாக்காளர் பட்டியலில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களது வாக்காளர் அட்டை விவரங்களை பெற்று இதுகுறித்து ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE