தண்டவாளம், சிக்னல் மேம்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் தெற்கு ரயில்வே தீவிரம்

By செய்திப்பிரிவு

சென்னை: தெற்கு ரயில்வேயில் சிக்னல் மற்றும் ரயில் தண்டவாளம் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த ஆண்டில் ரயில் தடம் புரள்வது, சிக்னல் பிரச்சினை, இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதல், தீ விபத்து போன்ற விபத்துகள் நடைபெற்றன. குறிப்பாக, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநகர் பஜார் பகுதியில் கடந்தஆண்டு ஜூன் 2-ம் தேதி நடைபெற்ற கோர விபத்தில் சுமார் 280 பேர் உயிரிழந்தனர். 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தெற்கு ரயில்வேயில் கடந்த ஆண்டு அக்டோபரில் காலிமின்சார ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. கடந்த டிசம்பர் மாதம்செங்கல்பட்டு அருகே சரக்குரயிலின் 9 பெட்டிகள் தடம்புரண்டதில், ரயில் தண்டவாளம் சேதமடைந்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவங்களையடுத்து, ரயில்வே பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தெற்கு ரயில்வேயில் ரூ.500 கோடி மதிப்பில் சிக்னல் மேம்படுத்துதல் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் பாதுகாப்பு நடவடிக்கைகள்தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள் ளன. இதன் ஒரு பகுதியாக, ரயில்மோதலை தடுக்கும் ‘கவாச்’ தொழில்நுட்பத்தை நிறுவுவது, சிக்னல் மற்றும் தொலைதொடர்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

தெற்கு ரயில்வேயில் 2,216 கி.மீ. தொலைவுக்கு ‘கவாச்’ தொழில்நுட்பத்தை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, பல்வேறு பாதுகாப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: நடப்பு மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.12,173 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் தண்டவாளம் மேம்படுத்துதல் பணிக்கு 1,240 கோடியும்,சிக்னல் மற்றும் தொலைதொடர்பு துறை மேம்படுத்துதல் பணிக்குரூ.510 கோடியும் ஒதுக்கப்பட் டுள்ளது. இதன்மூலமாக, ரயில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மனித தவறுகளைத் தவிர்க்க,தண்டவாளங்களை அமைக்கும்இயந்திரங்களைப் பயன்படுத்துதல், வெல்டிங் பயன்பாட்டைக் குறைக்க நீண்ட தண்டவாளங்கள் அமைத்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் நடைபெறுகின்றன. தெற்கு ரயில்வேயில் 24 வழித்தடங்களில் ‘கவாச்’ தொழில்நுட்பத்தை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE