தமிழகத்தில் கடந்த தேர்தலைவிட 2.72% வாக்குப்பதிவு குறைந்தது: 4 தொகுதிகளில் மட்டும் அதிகம்

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலை ஒப்புநோக்கும்போது இந்த தேர்தலில், ஒட்டுமொத்தமாக 2.72 சதவீதம் வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளன. தொகுதிவாரியாக 4 தொகுதிகளில் அதிகமாகவும், மீதமுள்ள 35 தொகுதிகளில் கடந்த தேர்தலைவிடஇந்த தேர்தலில் குறைவான வாக்குகளும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களவை தேர்தலின் முதல் கட்டத்தில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தில் பதிவான வாக்குகள் தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வந்து நேற்று பகலில் இறுதி வாக்குப்பதிவு நிலவரத்தை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் இறுதியாக 69.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இது கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலை காட்டிலும் (72.44) 2.72 சதவீதம் குறைவாகும்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலிலும், தருமபுரி தொகுதியே அதிகபட்சமாக 81.20 சதவீத வாக்குப்பதிவுடன் முதலிடத்தில் உள்ளது. 2-ம் இடத்தில் கள்ளக்குறிச்சி (79.21), 3-ம் இடத்தில் நாமக்கல் (78.21), 4-ம் இடத்தில் சேலம் (78.16), 5-ம் இடத்தில் பெரம்பலூர் (77.43) ஆகிய தொகுதிகள் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில், 2-ம் இடத்தில் நாமக்கல் (80.22), 3-ம் இடத்தில் கரூர் (79.55), 4-ம் இடத்தில் பெரம்பலூர் (79.26), 5-ம் இடத்தில் ஆரணி (79.01) ஆகிய தொகுதிகள் இருந்தன. இதில், 2019-ல் 2-ம் இடத்தில் இருந்த நாமக்கல், இம்முறை 3-ம் இடம் பிடித்துள்ளது.

குறைவான வாக்குப்பதிவை பொறுத்தவரை, இம்முறை மத்திய சென்னை 53.96 சதவீதத்துடன் கடைசியில் உள்ளது. அதற்கு முந்தைய இடங்களை தென் சென்னை (54.17), வட சென்னை (60.11) ஸ்ரீபெரும்புதூர் (60.25), மதுரை (62.04) ஆகிய தொகுதிகள் பிடித்துள்ளன.

கடந்த 2019 தேர்தலில் கடைசி இடத்தை தென் சென்னை (57.07) தொகுதியும், அடுத்த இடங்களை மத்திய சென்னை (58.98), ஸ்ரீபெரும்புதூர் (62.44), கோவை (63.86), வடசென்னை (64.26) பங்கிட்டுக் கொண்டன. இரு தேர்தல்களின்போதும் சென்னையில் உள்ள 3 தொகுதிகள், ஸ்ரீ பெரும்புதூரில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உயர்வும், குறைவும்: கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலுடன் தொகுதி வாரியாக ஒப்பிடும்போது, இந்த தேர்தலில் 4 தொகுதிகளில் மட்டுமே வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த தேர்தலில் வேலூரில் 2.07 சதவீதம், கோவையில் 1.03 சதவீதம், கள்ளக்குறிச்சியில் 0.40 சதவீதம், சேலத்தில் 0.45 சதவீதமும் வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளன. மற்ற 35 தொகுதிகளிலும் வாக்கு சதவீதம் குறைந்தே உள்ளது.

அதிகபட்சமாக தேனியில் 5.43, சிவகங்கையில் 5.26, மத்திய சென்னையில் 5.02, நாகப்பட்டினத்தில் 4.99, அரக்கோணம், கன்னியாகுமரியில் 4.46 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளன. மேலும், 5 சதவீதத்துக்கு மேல் 3 தொகுதிகளிலும், 4- 5 சதவீதம் வரை மேல் 8 தொகுதிகளிலும், 3-4 சதவீதம் வரை 9 தொகுதிகளிலும், 2-3 சதவீதம் வரை 8 தொகுதிகளிலும்,1- 2 சதவீதம் வரை 4 தொகுதிகளிலும் 1 சதவீதத்துக்குள் 3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

மேலும், கடந்த தேர்தல் மற்றும் இந்த தேர்தலில் அதிக வித்தியாசமின்றி ஒரு சதவீதத்துக்கும் குறைவாக மாற்றம் உள்ள தொகுதிகளை பொறுத்தவரை, கள்ளக்குறிச்சி (0.40), சேலம் (0.25) தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. அதேபோல், கரூர் (0.85), பொள்ளாச்சி (0.74), ராமநாதபுரம் (0.21) தொகுதிகளில் குறைவாக பதிவாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE