சென்னை மாநகராட்சியில் 20 நாளில் ரூ.190 கோடி சொத்து வரி வசூல்: ஏப்.30-க்குள் செலுத்தி 5% தள்ளுபடி பெறலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சியில் இம்மாதம் 20-ம் தேதி வரை ரூ.190 கோடி சொத்துவரி வசூலாகியுள்ளது. ஏப்.30-ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தி 5 சதவீதம் தள்ளுபடி பெறலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி வருவாயில் சொத்து வரி முதன்மையானது. சென்னையில் உள்ள 13 லட்சத்து 59 ஆயிரம் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து, அரையாண்டுக்கு ரூ.850 கோடி என, ஆண்டுக்கு ரூ.1,700 கோடிவரி வருவாய் கிடைக்கும்.

மாநகராட்சியில் உள்ள சொத்து உரிமையாளர்கள், ஏப்ரல் 30-ம் தேதிக்குள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி மற்றும் அக்டோபர் 30-ம் தேதிக்குள் 2-வது அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்த வேண்டும். இந்த காலகட்டத்துக்குள் செலுத்தினால் மாநகராட்சி சார்பில் சொத்து வரியில் 5 சதவீதம், அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும். அதன் பிறகு செலுத்தப்படும் சொத்துவரிக்கு 1 சதவீதம் தனிவட்டி விதிக்கப்படும்.

ரூ.227 கோடி அதிகம்: கடந்த 2023-24 நிதியாண்டில் மாநகராட்சியில் இலக்கை தாண்டி ரூ.1,800 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டது. இது, அதற்கு முந்தைய நிதியாண்டைவிட ரூ.227 கோடி அதிகமாகும். நிலுவை வரியை வசூலிக்கும் விதமாக, நீண்டகாலமாக சொத்துவரி செலுத்தாதோர் பட்டியல், மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/propertytax_revision என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி வசூலிக்கும் பணிகளை, தேர்தல் பணிகளுக்கு நடுவே மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்.1 முதல் 20-ம் தேதி வரை ரூ.190 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

2 லட்சத்து 31 ஆயிரம் பேர் வரியை செலுத்தி 5 சதவீத தள்ளுபடியை பெற்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, சென்னையில் 3லட்சத்து 70 ஆயிரம் பேர் சொத்துவரி நிலுவை இல்லாத சொத்து உரிமையாளர்களாக உள்ளனர். பொதுமக்கள் 5 சதவீத தள்ளுபடியை பெற 30-ம் தேதிக்குள் சொத்துவரிசெலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE