கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை உயர்வு: பீன்ஸ் கிலோ 130 ரூபாய்

By செய்திப்பிரிவு

சென்னை: கடும் வெயில் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலை உயர்ந்துள்ளது. பீன்ஸ் கிலோ ரூ.130-க்கு விற்கப்படுகிறது.

கடந்த 3 வாரங்களாக தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திரா மற்றும் கர்நாடக மாவட்டங்களில் கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு, வெப்பத்தை பயிர்கள் தாங்க முடியாத நிலை போன்றவற்றால் விளைச்சல் குறைந்து, கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவு குறைந்து, அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி சந்தையில் மொத்த விற்பனையில், எப்போதுமே ரூ.10-க்குள் விற்கப்படும் முட்டைக்கோஸ் ரூ.18 ஆக உயர்ந்துள்ளது. ரூ.80-க்குள் இருந்த பீன்ஸ் தற்போது ரூ.130 ஆக உயர்ந்துள்ளது.

முருங்கைக்காய் விலை வீழ்ச்சி: முள்ளங்கி, நூக்கல் போன்ற காய்கறிகளின் விலையும் ரூ.10-லிருந்து ரூ.20 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் விலை உச்சத்திலிருந்து வந்த முருங்கைக்காய் தற்போது கிலோ ரூ.15-க்கு விற்கப்பட்டு வருகிறது.

மற்ற காய்கறிகளான அவரைக்காய் ரூ.40, பச்சை மிளகாய், கோவைக்காய் தலா ரூ.30, சாம்பார் வெங்காயம், பீட்ரூட் தலா ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.23, வெள்ளரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், கருணைக்கிழங்கு தலா ரூ.20, பெரிய வெங்காயம், தக்காளி தலா ரூ.15, கத்தரிக்காய் ரூ.10 என விற்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கோயம்பேடு சந்தை மொத்த வியாபாரிகள் கூறும்போது, கோடை காலம் முடியும் வரை காய்கறி விலை கொஞ்சம் உயர்ந்தே இருக்கும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE