இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடந்தது. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் அமைதியான முறையில் நடந்த மக்களவைத் தேர்தலில், இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகின.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெரிய அளவிலான அசாம்பவித சம்பவங்களின்றி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சில இடங்களில் தாமதாக தொடங்கப்பட்டது; சில இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது போன்ற சில சலசலப்புகள் மட்டுமே ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
“கடந்த 2019 தேர்தலில் 7 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 69 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அத்துடன் இதை ஒப்பிடுகையில் இந்த வாக்கு சராசரி நன்றாகவே இருக்கிறது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த காரணத்தால், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேரத்தில் அதிகமானோர் வாக்களிக்க வந்துள்ளனர். 6 மணிக்குள் வந்த பலரும் ஆர்வத்துடன் டோக்கன் பெற்றுக்கொண்டு வாக்களிக்க காத்திருந்தனர். சனிக்கிழமை பகல் 12 மணிக்கு துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகும்” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.
மேலும், “தேர்தல் ஆணையத்தில் இருந்து ஓர் அறிவுறுத்தல் வந்துள்ளது. அடுத்த கட்டமாக கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மட்டுமே பாதுகாப்பு படையினர் சோதனை தொடரும். மற்ற இடங்களில் பாதுகாப்பு படையினரை திரும்ப பெற உள்ளோம்” என்று தெரிவித்தார். | விரிவாக வாசிக்க > தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு: சத்யபிரத சாஹு தகவல்
» “சிறையில் நான் சாப்பிட்டதை அரசியல் ஆக்குகிறது அமலாக்கத் துறை” - கேஜ்ரிவால் குற்றச்சாட்டு
» இண்டியா கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 272-ஐ தாண்டும்: சச்சின் பைலட்
எந்தெந்த தொகுதிகளில் அதிக வாக்குப்பதிவு?: தமிழகத்தைப் பொறுத்தவரையில், இரவு 7 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 75.64 சதவீத வாக்குகளும், தருமபுரியில் 75.44 சதவீத வாக்குகளும் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவீத வாக்குகளும், தென் சென்னையில் 67.82 சதவீத வாக்குகளும் பதிவாகின. 33 மக்களவைத் தொகுதிகளில் 70 சதவீத வாக்குப்பதிவை கடந்தது கவனிக்கத்தக்கது. தொகுதி வாரியான வாக்குப்பதிவு - இரவு 7 மணி நிலவரம்:
நாடு முழுவதும் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு: முதல்கட்ட மக்களவைத் தேர்தலையொட்டி, நாடு முழுவதும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 39, ராஜஸ்தானில் 12, உத்தரப் பிரதேசத்தில் 8 மத்தியப் பிரதேசத்தில் 6, உத்தராகண்ட்டில் 5 தொகுதிகள் உள்ளிட்ட இந்த 102 தொகுதிகளில் ஏறத்தாழ 60.03 சதவீத வாக்குகள் பதிவாகின.
சேலத்தில் 2 வாக்களர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு: சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் தனியார் பள்ளிக்கு மனைவியோடு வாக்களிக்க வந்த பழனிசாமி என்பவர் வரிசையில் நிற்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது
இதேபோல, சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கெங்கவள்ளியில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், “சேலத்தில் வாக்களிக்கச் சென்ற இரண்டு வாக்காளர்கள் மயங்கி விழுந்து உயரிழந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பந்தல், வாக்காளர்கள் அமர்ந்து செல்வதற்கான இருக்கைக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.
ஜனநாயக கடமையாற்றிய தலைவர்கள்!: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட கிண்டி - வேளச்சேரி சாலையில் உள்ள அட்வெண்ட் கிறிஸ்தவ நடுநிலைப் பள்ளியில் தனது மனைவியுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது. இதில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி” என்று தமிழில் பேசினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர், திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப, “நீங்கள் நினைப்பது போல இந்தியாவுக்கு வெற்றிதான்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவரது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் மக்களுடன் வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
கரூர் மக்களவைத் தொகுதி க.பரமத்தி ஒன்றியம் ஊத்துப்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்” ஆவேசமாக தெரிவித்தார்.
இதேபோல், தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது தொகுதிகளில் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றினர். | பார்க்க > வரிசையில் காத்திருந்து வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள் - புகைப்படத் தொகுப்பு
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப் பிரபலங்கள்!: நடிகர்கள் விஜய், அஜித், விக்ரம், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி, வடிவேலு, த்ரிஷா, ஆண்டிரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினார். | பார்க்க > அஜித், விஜய் முதல் த்ரிஷா, ஆண்ட்ரியா வரை - திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு ஆல்பம்
தமிழகத்தின் 18 வயது நிரம்பிய முதல் முறை வாக்காளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றினார். பலரும் செல்ஃபி எடுத்து தங்கள் சமூக வலைதளங்களில் பெருமிதத்துடன் பதிவிட்டனர். | பார்க்க > முதல் முறை வாக்காளர்கள் உற்சாகம் @ தமிழகம் | புகைப்படத் தொகுப்பு
இதேபோல், மூத்த குடிமக்களும் மிகுந்த அக்கறையுடன் வாக்குச்சாவடி வந்து ஜனநாயகக் கடமையாற்றினர். அவர்கள் சிரமமின்றி வாக்களிப்பதற்கு உரிய வசதிகளை தேர்தல் ஆணையம் செய்து கொடுத்தது. | பார்க்க > வாக்களிப்பில் மூத்தக் குடிமக்கள் காட்டிய அக்கறையும் ஆர்வமும்! - புகைப்படத் தொகுப்பு
தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்!: தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள், ஓசூரின் கருக்கனஹள்ளி கிராமம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகேயுள்ள சித்தூரணி என சில கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டன.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு, குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம், அடிப்படை வசதிகள் செய்து தராதது உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்வைத்து இந்தத் தேர்தல் புறக்கணிப்பில் சில கிராம மக்கள் ஈடுபட்டனர். இவற்றில் சில கிராமங்களில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, மாலையில் வாக்களித்தனர்.
மேற்கு வங்கம், மணிப்பூரில் வன்முறை: மேற்கு வங்கத்தின் 42 மக்களவைத் தொகுதிகளில் வெள்ளிக்கிழமை கூச் பெஹார், அலிபுர்துவார், ஜல்பைகுரி என 3 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்ததுமே, பல வாக்குச்சாவடிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக ஆதரவாளர்கள் இடையே மோதல்கள் வெடித்தன. இந்தத் தாக்குதலில் நாட்டு வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டதாகவும், கல் வீச்சு நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வாக்குப்பதிவின்போது, இரண்டு வாக்குச்சாவடிகளில் மர்ம நபர்கள் பல முறை துப்பாக்கியால் சுட்டதால் பதற்றம் ஏற்பட்டது. எனினும், யாருக்கும் பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
“உங்கள் வாக்குகள் பாதுகாப்பாக இருக்கும்” - தலைமை தேர்தல் ஆணையர்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “தொழில்நுட்பம், நிர்வாகம் மற்றும் செயல்முறைகள் சார்ந்து பல்வேறு நடைமுறைகள் இணைந்து இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நூறு சதவீதம் பாதுகாப்பானவை. எல்லா தரப்பு மக்களையும் ஜனநாயக திருவிழாவில் இணைந்து கொள்ள நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். வாக்களிப்பது உங்களின் உரிமை, உங்களின் கடமை, உங்களின் பொறுப்பு, அது உங்களின் பெருமை” என்று தெரிவித்தார்.
புதுச்சேரியில் பசுமைச் சூழலுடன் ஈர்த்த 2 வாக்குச்சாவடிகள்!: வாக்குப்பதிவை அதிகரிக்க, புதுச்சேரியில் இரண்டு பசுமை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டதுடன், வாக்காளர்களுக்கு கூழ், மோர், பதநீர் வழங்கப்பட்டது கவனம் ஈர்த்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago