நிர்மலாதேவிக்கு எதிரான புகாரை காமராஜர் பல்கலை.க்கு அனுப்பி வைக்காதது ஏன்? - கல்லூரி நிர்வாகம் விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக மாணவிகள் அளித்த புகாரை 6 ஆண்டுகளாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்காதது ஏன்? என்பது குறித்து கல்லூரி நிர்வாகம் விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கடந்த 2018-ம் ஆண்டு அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியையான நிர்மலாதேவியை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கை பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் கணேசன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மாணவிகள் எழுத்துப்பூர்வ புகார்: அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பாலன் ஹரிதாஸ், எஸ்.பார்த்தசாரதி ஆகியோர், ‘‘பாதிக்கப்பட்ட மாணவிகள் முதலில் கல்லூரி முதல்வரிடம்தான் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில்தான் கல்லூரி முதல்வர் போலீஸில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில்தான் போலீஸாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கின் தீர்ப்பு ஏப்.26 அன்று கீழமை நீதிமன்றத்தில் வரவுள்ளது.

ஆனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் யாரும் நிர்மலாதேவிக்கு எதிராக புகார் அளி்க்கவில்லை என பல்கலைக்கழகம் தரப்பில் கூறப்படுகிறது. மாணவிகள் அளித்த புகாரை கல்லூரி முதல்வர் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்காதது ஏன்? எனத் தெரியவில்லை’’ என வாதிட்டனர்.

விசாரணை தள்ளிவைப்பு: அதையடுத்து நீதிபதிகள், ‘‘குற்றம்சாட்டப்பட்டுள்ள நிர்மலாதேவிக்கு எதிராக கல்லூரி மாணவிகள் அளித்த புகாரை 6 ஆண்டுகளாக பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்காதது ஏன்? என்பது குறித்து கல்லூரி நிர்வாகம் விளக்கமளிக்க வேண்டும்’’ எனக் கூறி விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE