சென்னை: தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
நாட்டின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்.19) நடைபெறுகிறது. இதில், தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இது மட்டுமின்றி, ராஜஸ்தான் - 12, உத்தர பிரதேசம் - 8, மத்திய பிரதேசம் - 6, அசாம், மகாராஷ்டிரா, உத்தராகண்ட் - தலா 5, பிஹார் - 4, மேற்கு வங்கம் - 3, அருணாசல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா - தலா 2, சத்தீஸ்கர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அந்தமான் நிகோபார், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள் - தலா 1 தொகுதி எனநாடு முழுவதும் மொத்தம் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு மற்றும் திரிபுரா மாநிலம் ராம்நகர் ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் நாளை நடக்க உள்ளது.
தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் உட்பட 102 தொகுதிகளிலும் மொத்தம் 1,625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் திமுக, அதிமுக,பாஜக தலைமையிலான கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே நான்குமுனை போட்டி நிலவுகிறது.
கடந்த மார்ச் 31-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று முதல் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
கடந்த 17 நாட்களாக தமிழகத்தில் அனல்பறக்க நடந்த பிரச்சாரம், நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன்,தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் நேற்று மாலை தங்கள் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி, தொகுதி வாக்காளர்கள் அல்லாத அனைவரும் அங்கிருந்துவெளியேற அறிவுறுத்தப்பட்டனர். விடுதிகள், திருமண மண்டபங்களை சோதனை செய்த போலீஸார், அங்கு வெளி நபர்கள் இல்லை என்பதை உறுதி செய்தனர்.
தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்: நேற்று மாலை முதல் அனைத்து வகையான பிரச்சாரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் உள்ள 68,320 வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையங்களில் இன்று காலை 10 மணிக்கு, வாக்குச்சாவடி பணியில் ஈடுபட உள்ளதலைமை அலுவலர் மற்றும் இதர அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட உள்ளனர். பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட்இயந்திரம் உள்ளிட்டவையும் வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும்.
வாக்குப்பதிவு நாளை (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். இதையொட்டி, தமிழகத்துக்கு 190 கம்பெனி அதாவது 17 ஆயிரம் வீரர்கள் கொண்ட துணை ராணுவப் படையை தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அனுப்பியுள்ளது.
இதுதவிர, 1.20 லட்சத்துக்கும் அதிகமான காவல் துறை, தீயணைப்பு, சிறைத் துறையினர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து10 ஆயிரம் காவலர்கள், இவர்கள் தவிர ஊர்க்காவல் படையினர், முன்னாள்ராணுவத்தினர், ஓய்வுபெற்ற போலீஸார்என 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தமிழகத்தில் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சொந்த ஊரில் வாக்களிப்பதற்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் சிறப்பு பேருந்துகள், ரயில்களில் புறப்பட்டு சென்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago