சென்னை மண்டல நிலவரம்: 5 தொகுதிகளிலும் முந்துவது யார்? - ஒரு பார்வை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடக்கவிருக்கிறது. தற்போதைய தேர்தல் களச் சூழலைப் பொறுத்தவரையில், சென்னை மண்டலத்தில் எந்தக் கட்சி முன்னிலை வகிக்கிறது எனப் பார்க்கலாம்.

திருவள்ளூர்: முதல் மக்களவைத் தொகுதியாக இருக்கக் கூடிய திருவள்ளூர் மக்களவைத் தனித்தொகுதியில் போட்டியிடும் முக்கியமான வேட்பாளர்களாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார்; அதிமுக கூட்டணியில் இருக்கக் கூடிய தேமுதிக கட்சி சார்பாக கு.நல்லதம்பி களத்தில் இருக்கிறார். பாஜக சார்பாக பொன்.வி.பாலகணபதி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மு.ஜெகதீஷ் சந்தர் ஆகியோர் களத்தில் இருக்கின்றனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்குத் திருவள்ளூர் ஒதுக்கப்பட்ட நிலையில், அதில் சசிகாந்த் செந்தில் களமிறக்கப்பட்டிருக்கிறார். இவர் முன்னாள் ஐஏஸ் அதிகாரி. காங்கிரஸ் கட்சியின் ‘சென்ட்ரல் வார் ரூம்’ தலைவராகவும் செயலாற்றியுள்ளார். குறிப்பாக, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற செய்ததில் இவர் பணி மிக முக்கியமானது.

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிகவுக்கு இங்கு நல்ல வாக்கு வங்கி இருப்பதால், கணிசமான வாக்குகளை அவர்கள் பெறுவார்கள். அதேபோல், சென்னை புறநகர் பகுதியில் பாஜகவுக்கு உள்ள வாக்கு வங்கியும் பாமகவின் வாக்கு வங்கியும் பொன்.வி.பாலகணபதிக்கு கனிசமான வாக்குகளைப் பெற்று தரும் . இருப்பினும், தற்போது திருவள்ளூர் தொகுதியைப் பொறுத்தவரை சசிகாந்த் செந்தில் ரேஸில் முந்துகிறார்.

வட சென்னை: திமுக சார்பாக கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பாக ராயபுரம் மனோ, பாஜக சார்பாகப் பால் கனகராஜ் மற்றும் நாம் தமிழர்ன் கட்சி சார்பாக டாக்டர் அமுதினி ஆகியோர் களத்தில் முக்கியமான வேட்பாளராக இருக்கின்றனர். இதில், கடந்த முறை போட்டியிட்ட திமுக வேட்பாளரான கலாநிதி வீராசாமி மீண்டும் இங்கு போட்டியிடுகிறார்.

வடசென்னை திமுகவின் கோட்டையாகத்தான் இருந்திருக்கிறது. கடந்த முறை கலாநிதி வீராசாமி 5,90,986 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால், சிட்டிங் எம்பியாக இருக்கும் இவர் மீது அதிருப்தி நிலவுவதால், இம்முறை அதிக வாக்குகள் பெறுவது கடினம்தான். தவிர, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான தேமுதிகவுக்கு இங்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதும் கலாநிதி வீராசாமியின் வாக்குகளைக் குறைக்கலாம். இருப்பினும், அவர் தான் தற்போது ரேஸில் முன்னிலையில் இருக்கிறார். அதேபோல் , பாஜக சார்பாகப் போட்டியிடும் பால் கனகராஜும் இங்கு கணிசமான வாக்குகளைப் பெற வாய்ப்பு இருக்கிறது.

தென் சென்னை : தென்சென்னை மக்களவைத் தொகுதியில் முக்கியமான வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ’நட்சத்திர தொகுதி’ என்றே அழைக்கப்படுகிறது. இதில், திமுகவில் சிட்டிங் எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன், அதிமுகவில் ஜெயவர்தன், பாஜக சார்பாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் முனைவர் சு.தமிழ்ச்செல்வி ஆகியோர் களத்தில் முக்கியமான வேட்பாளராக உள்ளனர். இங்கு ’திமுக, அதிமுக, பாஜக’ இடையே ’டஃப் ஃபைட்’ நிலவுகிறது.

அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் களத்தில் மும்முரம் காட்டுகிறார். தமிழிசை ’உங்க தொகுதியை நம்பி அக்கா வந்திருக்கிறேன்’ என்ற பிரச்சாரமும் கவனத்தை ஈர்த்து வருகிறது. சிட்டிங் எம்பி தமிழச்சி மீது ஏகப்பட்ட அதிருப்தி நிலவுகிறது. அதை மக்கள் வெளிப்படையாகக் காட்டவும் செய்தனர். இருந்தபோதிலும் கட்சி அடிப்படையில் தொகுதியில் ஆதரவு நிலவுகிறது. எனவே, இங்கு யாருக்கு வெற்றி என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

மத்திய சென்னை: மத்திய சென்னையில் திமுக சார்பாக சிட்டிங் எம்பி தயாநிதி மாறன் மீண்டும் போடியிடுகிறார். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக கட்சி சார்பாக ப.பார்த்தசாரதி, பாஜக சார்பாக வினோஜ் பி. செல்வம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக முனைவர் இரா.கார்த்திகேயன் ஆகியோர் களத்தில் போட்டியில் உள்ளனர். இதில், திமுக, தேமுதிக மற்றும் பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.எனினும் ரேஸில் திமுக வேட்பாளர் முன்னிலையில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அக்கட்சிப் பொருளாளர் டி.ஆர்.பாலு மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக டாக்டர் பிரேம்குமார், பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக வேணுகோபால் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வெ.ரவிச்சந்திரன் களத்தில் போட்டியில் உள்ளனர். இங்கு மீண்டும் டிஆர்.பாலு வெல்லவே வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த முறை 7,93,281 வாக்குகள் பெற்று வெற்றியைப் பதிவு செய்தார். இம்முறை இப்படியான மாபெரும் வெற்றி கிடைக்குமா? மற்ற கட்சியினர் வாக்குகள் பிரிப்பார்களா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்