சென்னை: “இப்போது திமுகவினர் மகளிரை எப்படி மிரட்டுகின்றனர் தெரியுமா? திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால், மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரும் ரூபாய் நின்றுவிடும் என்று கூறி வருகின்றனர்” என்று திருவள்ளூரில் பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் , ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மருத்துவர் வெ.ரவிச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். கொரட்டூர் பேருந்து நிலையம் அருகே நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 2024 தேர்தலுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சி இருக்காது. அதிமுக இருக்காது என்று கூறுகிறார். அப்போது திமுக மட்டும் இருக்கும். அது ஏன் இருக்கிறது. அதுதான் கள்ளக் கூட்டணி.
தலைவாசல் வழியாக வருவதில்லை. கொல்லைப்புற வாசல் வழியாக வருவது. அதாவது அனைவரும் தூங்கியப் பிறகு, கதவைத் திறந்துவிட்டு விடுவது. இந்திய நலனுக்காகத் தொடங்கப்பட்ட கட்சிகள் மாநிலம் என்று வரும்போது மாநில நலனை பேசும். மாநில நலனுக்காகத் தொடங்கப்பட்டதாக கூறப்படும் மாநிலக் கட்சிகள் இந்திய நலனை பேசும். இரண்டும் ஒன்றுதான்.
கர்நாடக, கேரள தேர்தல்களில் அந்தந்த மாநில நலன்களைப் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் பேசும். ஆனால் மாநில நலன், மாநில உரிமை, மாநில தன்னாட்சி பேசும் திமுக, இந்தியாவைக் காப்பாற்ற ஸ்டாலின் அழைக்கிறேன் வாருங்கள் என்று அழைக்கிறார். இப்போது புரிகிறதா, இவர் தேசியத்துக்கு சென்றுவிடுவார், அவர்கள் திராவிடத்துக்கு வந்துவிடுவார்கள். எனவே, இந்தக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுதான்.
இவர்கள் அனைவரையும் துடைத்து வாரி தூர எறிவதுதான் தூய்மை இந்தியா. பசி, பஞ்சம், ஏழ்மை, வறுமை, ஊழல், லஞ்சம், வேலையின்மை என்ற சொல் இல்லாத, பெண்ணிய அடிமைத்தனம், பாலியல் வன்கொடுமை, இதெல்லாம் இல்லாத தேசமே தூய்மை இந்தியா. குப்பைகளைக் கொட்டி அள்ளுவது அல்ல. பிளாஸ்டிக்கை தடை செய்யாமல் தூய்மை இந்தியா கூறிவருவது மோசடி.
இந்தியா தூய்மையாகிவிட்டதா? பள்ளிக்கரனையை சென்று பாருங்கள், இயற்கையின் அருபெரும் கொடையை குப்பை மேடாக்கியவர்கள்தான் இந்த திமுகவும் அதிமுகவும். அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாக்களிப்பவர்கள் மட்கிப்போன குப்பைகளுக்குச் சமமானவர்கள். பள்ளிக்கரனை ஏரியை ஒருமுறை சென்று பார்த்துவிட்டு, திமுக அதிமுகவுக்கு வாக்களிப்பதா என்பதை முடிவு செய்யுங்கள்.
இப்போது திமுகவினர் மகளிரை எப்படி மிரட்டுகின்றனர் தெரியுமா? திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால், மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் நின்றுவிடும் என்று கூறுகின்றனர். அப்படி மிரட்டிவிட்டு அவர்கள் கையில் 300 ரூபாயைக் கொடுத்துவிட்டு செல்கின்றனர்.
ஒருபக்கம் பாஜகவினர் இப்போது, கச்சத்தீவை மீட்பதாக கூறுகிறார்கள். எப்படி மீட்க முடியும்? சீனாவுடன் போரிட்டால்தான் இனி கச்சத்தீவை மீட்க முடியும். இலங்கை சீனாவின் பிடியில் இருக்கும் இன்னொரு மாகாணம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நான் உங்களிடம் கத்துவதைப் போல இடுகாட்டில் கத்தியிருந்தால், 10 பிணங்கள்கூட எழுந்திருக்கும். ஆனால், என் இன மக்களை எழுப்ப நான் படும்பாடு இருக்கிறதே, கொஞ்ச நஞ்சமல்ல. இங்கு இருப்பவர்கள், தேர்தலில் நின்றார்கள், வென்றார்கள், நாடாளுமன்றம் சென்றார். எங்களுக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள்'', என்று அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago