“பாஜகவும் அதிமுகவும் தேர்தலுக்குப் பிறகு கைகோக்கும்” - முதல்வர் ஸ்டாலின் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: “ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளைக் கண்டு நம் கவனம் துளியும் சிதறிவிடக் கூடாது. அவற்றைக் கடந்த காலங்களிலும் நாம் பொருட்படுத்தியது இல்லை. கருத்துக் கணிப்புகளை எல்லாம் விஞ்சுகிற, நாடே தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கிற வெற்றியாக நம் வெற்றி இருக்க வேண்டும்” என்று திமுகவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக திமுகவினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்திய நாட்டின் இரண்டாவது விடுதலைப் போர் என்று அழைக்கப்படுகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஜனநாயகத்தையும், மக்களாட்சி மாண்புகளையும் மதிக்கின்ற, கூட்டாட்சித் தத்துவத்தைப் போற்றி இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கின்ற ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க 'இண்டியா' கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பத்தாண்டு கால இருள் சூழ்ந்த ஆட்சியை அகற்றி, புதிய இந்தியாவுக்கான விடியலுக்கு அச்சாரம் இடும் நாள்தான் ஏப்ரல் 19.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு, தமிழர்களின் வளர்ச்சிக்கு மோடி அரசு தீட்டிய ஒரேயொரு சிறப்புத் திட்டத்தையாவது கூறுங்கள் என்று கடந்த ஒரு மாத காலமாகப் பரப்புரைக் கூட்டங்களில் மத்திய அரசை நோக்கிக் கேள்வி எழுப்பி வந்தேன். தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பைசா கூட தராமல் தமிழகத்தை வஞ்சிப்பது நியாயமா என்றும் கேட்டு வந்தேன். ஆனால், அதற்கு எந்த நேர்மையான பதிலையும் பிரதமர் மோடியோ, அவரது அமைச்சரவை சகாக்களோ கூறவில்லை.

தமிழகத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் மோடியும், பாஜகவும் எதிரிகள் என்பது இதில் இருந்தே உறுதியாகிவிட்டது. தமிழகத்தில் அமைய இருந்த மாபெரும் முதலீட்டை, மிரட்டி குஜராத்துக்கு மடை மாற்றியவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் முன்னேறுவதை அனுமதிக்கவே மாட்டார்கள். தமிழகத்தின் வளமான எதிர்காலத்துக்கும், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது.

இவர்கள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கத்தில் அடிமை பழனிசாமியின் கட்சியானது பாஜக போட்டுத் தந்த திட்டப்படி கள்ளக் கூட்டணி அமைத்து தனியாக நிற்கிறது. தமிழகத்தை வஞ்சித்த பாஜக, பாழ்படுத்திய அதிமுக ஆகிய இரண்டு கூட்டணியையும் புறக்கணிக்குமாறு தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பது போல நாடகமாகிக் கொண்டிருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு கைகோத்து விடுவார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியை விமர்சிக்காதது மட்டுமல்ல, தேர்தலுக்குப் பிறகு பாஜகவுக்குத் தேவையென்றால் நேரடியாக ஆதரிப்பார்கள். 2019-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைத்தது திமுக. அன்று முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தொடர் வெற்றிகளைக் குவித்த சிறப்பும் பெருமையும் திமுக கூட்டணிக்கு உண்டு.

திமுக தலைமையிலான 'இண்டியா' கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நண்பர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் நம் அணியில் இணைந்துள்ளது. இவை தவிர பல்வேறு கட்சிகள், அமைப்புகள், சமுதாய இயக்கங்கள் நமது அணிக்கு ஆதரவைத் தெரிவித்து உள்ளன. இந்தத் தொண்டர்களின் சலிக்காத உழைப்பைத் தமிழகம் முழுவதும் நான் பார்த்தேன். அவர்களது முகங்களில் தெரிந்த நம்பிக்கை, என்னை மேலும் மேலும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக நான் வெளியிட்ட அறிக்கையில், ''புதுவை உள்ளிட்ட தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் யார் வேட்பாளர், எந்தச் சின்னம் என்பதை மறந்து விட்டு , 'வேட்பாளர் மு.க.ஸ்டாலின்' என்பதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும். அனைத்துத் தொகுதியிலும் நானே போட்டியிடுகிறேன் என்பதை உள்ளத்தில் தாங்கி அனைத்து உடன்பிறப்புகளும் பணியாற்ற வேண்டும்" என்று உரிமையோடு நான் கேட்டுக் கொண்டேன். அந்தச் சொல்லுக்கு கட்டுப்பட்டு திமுகவின் அனைத்து உடன்பிறப்புகளும் தேர்தல் பணியாற்றி வரும் காட்சியை நான் பார்த்தேன். 'இவர்களைத் தொண்டர்களாகப் பெற என்ன தவம் செய்துவிட்டேன்' என்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன்.

இதே ஆர்வமும் சுறுசுறுப்பும் தேர்தல் முடியும் வரை இருந்தாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களை வாக்குச்சாவடிக்கு வர விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல், வாக்குப் பெட்டிகள் உரிய பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது வரையிலும் கண்துஞ்சாது கண்காணிக்க வேண்டும் என்று திமுக உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன். உங்களது உழைப்பின் பயன்தான் இந்தியாவையும் தமிழகத்தையும் காக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். தமிழகத்தில் தனக்கு பிடித்த ஊர்ப் பெயர்களில் ஒன்று 'எப்போதும் வென்றான்' என்று மறைந்த முதல்வர் கருணாநிதி அடிக்கடி குறிப்பிடுவார். திமுகவும் எப்போதும், எல்லாத் தேர்தல்களிலும் வென்றான் என்பதை மெய்ப்பிக்கும் தேர்தல் இது.

ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளைக் கண்டு நம் கவனம் துளியும் சிதறிவிடக்கூடாது. அவற்றைக் கடந்த காலங்களிலும் நாம் பொருட்படுத்தியது இல்லை. கடைசி வாக்கு பதிவாகி, வெற்றிக் கனி நம் கைகளில் வந்து சேரும் வரை, கண் துஞ்சாது, பசி நோக்காது, கருமமே கண்ணாயினர் என நாம் கவனத்தோடும் உற்சாகம் குன்றாமலும் உழைத்திட வேண்டுகிறேன். கருத்துக்கணிப்புகளை எல்லாம் விஞ்சுகிற, நாடே தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கிற வெற்றியாக நம் வெற்றி இருக்க வேண்டும்.

தேர்தல் விதிகளை முறையாகப் பின்பற்றி, வாக்காளப் பெருமக்கள் ஒவ்வொரையும் மீண்டும் தேடிச் சென்று சந்தித்து, அவர்களிடம் மோடி ஆட்சியில் நாடு எதிர்கொண்டுள்ள ஆபத்துகளை விளக்கிச் சொல்லி, திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்ற மகத்தான மக்கள் நலத்திட்டங்களையும் சாதனைகளையும் எடுத்துரைத்து, நம் அணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். இரண்டு முறை இருண்ட காலத்தைக் காட்டிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இண்டியா கூட்டணியின் வெற்றியில்தான் இந்திய நாட்டின் சிறப்பான எதிர்காலமும் தமிழகத்தின் முன்னேற்றமும் இருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையும், அதை வழிமொழிந்தும் வலு சேர்த்தும் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையும் திட்டங்களாக மாற வேண்டும்.

தமிழகத்தின் வாக்காளப் பெருமக்களுக்கு பணிவான வேண்டுகோளை கரம் கூப்பி முன்வைக்கிறேன். இந்தியா என்றென்றும் மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும் சகோதரத்துவமும் கொண்ட நாடாகத் திகழ, தமிழகத்தின் தனித்தன்மையை நிலைநாட்டுவதற்கு நம் முன் உள்ள ஒரே வாய்ப்பும் ஆயுதமும் உங்கள் வாக்குதான். உங்கள் பொன்னான வாக்குகள், இந்தியாவைக் காக்கட்டும், சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை மீட்கட்டும். தமிழகத்தின் தனித்தன்மையை உறுதி செய்யட்டும்.

தமிழகத்தின் மக்கள் நலத் திட்டங்கள் தொய்வின்றித் தொடர, எங்கும் எதிலும் தமிழகம் முன்னோடி என்ற பெருமை நிலைத்திட, தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற அரசு டெல்லியில் அமைந்தாக வேண்டும். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு, மத்தியில் ஆட்சி மாற்றமே ஒன்றே தீர்வு. தமிழகத்தின் பகைவர்களை, தமிழகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எதிரிகளை வீழ்த்துவோம். ஜனநாயகத்தைக் காக்கும் போர்க்களத்தில், நீதியின் பக்கம் நின்று, இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வரலாறு காணாத வெற்றியைத் தமிழக மக்கள் தேடித் தர வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்