சென்னை: தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19-ம் தேதி மாலை வாக்குப்பதிவு நடந்து முடியும் வரைபொதுக்கூட்டம், ஊர்வலம், ஊடகங்கள், சமூக வலைதளங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சி என எந்த வகையிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வரும் ஏப்ரல் 19-ம் தேதிவாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி, கடந்த 2 வாரங்களுக்கு மேலாக அனல்பறக்க நடந்துவந்த பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.
இதுதொடர்பாக வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளில் பொதுத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிஇடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி காலை 7 மணி முதல்மாலை 6 மணி வரை நடைபெறும். இதையொட்டி, ஏப்ரல் 17-ம் தேதி (இன்று) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி விதிமுறைகள் அமலில் இருக்கும்.
அந்த காலகட்டத்தில் தேர்தல் தொடர்பான எந்த ஒரு பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, அதில் பங்கேற்கவோ கூடாது.
திரைப்படம், தொலைக்காட்சி, பண்பலை (எஃப்எம்) வானொலி, வாட்ஸ்அப், முகநூல், எக்ஸ் போன்ற சாதனங்கள் வாயிலாக எந்த ஒரு தேர்தல் விவகாரத்தையும் மக்களின் பார்வைக்கு வைக்க கூடாது. குறுஞ்செய்தி, இணையம் உள்ளிட்ட மின்னணு வடிவிலான அனைத்து தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.
பொதுமக்களில் எந்த ஒரு நபரையும் ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சி, திரையரங்க செயல்பாடு, கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்துவது, ஏற்பாடு செய்வதன் மூலம் எந்த ஒரு தேர்தல் விவகாரத்தையும் யாரும் பிரச்சாரம் செய்ய கூடாது.
மேற்கண்ட 3 விதிமுறைகள் எந்த விதத்தில் மீறப்பட்டாலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
ஏப்ரல் 17-ம் தேதி (இன்று) மாலை6 மணிக்கு மேல், தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சி பணியாளர்கள் உட்பட தொகுதி வாக்காளர்கள் இல்லாத அனைவரும் அத்தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும்.
வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்ட வாகன அனுமதிகள் இன்று மாலை 6 மணி முதல் செல்லாது.
வாக்குப்பதிவு நாளில் ஒவ்வொரு வேட்பாளரும் அந்த தொகுதி முழுவதும் அவரது சொந்த பயன்பாட்டுக்கான ஒரு வாகனம், தேர்தல் முகவரின் பயன்பாட்டுக்காக தொகுதிக்கு ஒருவாகனம் மற்றும் மக்களவை தொகுதியில் அடங்கியுள்ள ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்காக தேர்தல் முகவர், அவரது பணியாளர்கள் அல்லது கட்சி பயன்பாட்டுக்காக ஒரு வாகனம் ஆகியவை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும்.
வாக்காளரை அழைத்து வரவும், வாக்குச்சாவடியில் இருந்து திரும்ப அழைத்து செல்லவும் வேட்பாளர் அல்லது அவரது முகவரின் வாகனத்தை வாடகைக்கு எடுக்கவோ, வாங்கவோ, பயன்படுத்தவோ எந்த ஒரு வேட்பாளரும் அனுமதிக்க கூடாது.அவ்வாறு செய்வது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தண்டனைக்குரிய முறைகேடான செயல் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து 10,000 போலீஸார் வருகை: தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஆந்திரா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் போலீஸார் தமிழகத்துக்கு வந்தடைந்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (19-ம் தேதி) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அமைதியான முறையில் தேர்தலை நடத்தும் வகையில் 190 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகத்துக்கு ஏற்கெனவே வரவழைக்கப்பட்டு மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுடன் தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழக போலீஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் போலீஸார் நேற்று தமிழகம் வந்தடைந்தனர். அவர்கள் தேவைக்கு ஏற்ப பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதுதவிர ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், ஊர்க்காவல் படையினர் உட்பட மேலும் பல பிரிவினரும் வாக்குப்பதிவு அன்று பணியாற்ற உள்ளனர்.
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மதுரையில் 511, தென்சென்னையில் 456, தேனியில் 381 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
181 வாக்குச் சாவடிகள் மிக பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுடன் கூடுதலாக போலீஸாரும் பணியமர்த்தப்பட உள்ளனர்
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago