150+ முறை ரயில் தண்டவாளத்தை கடந்த காட்டு யானைகள்: அலர்ட் கொடுத்த AI கண்காணிப்பு அமைப்பு @ கோவை

By செய்திப்பிரிவு

கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை இருப்புப்பாதைகளில் யானைகள் கடக்கும் போது, ரயில் மோதி விபத்து ஏற்பட்டு யானைகள் இறப்பதை தடுக்க அதிநவீன செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் கண்காணிப்பு அமைப்பினை கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது. இதன் பிறகு சுமார் 150-க்கும் மேற்பட்ட முறை ரயில் தண்டவாளத்தை காட்டு யானைகளை கடந்து சென்றது குறித்த அலர்ட் கொடுத்துள்ளது ஏஐ கண்காணிப்பு அமைப்பு.

இதன் மூலம் ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. யானைகள் தடத்தை கடப்பது குறித்த தகவலை வனத்துறை மற்றும் ரயில்வே தரப்பில் இந்த ஏஐ கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த தகவலை பெற்ற வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து காட்டு யானைகளை விரட்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மறுபக்கம் சம்பந்தப்பட்ட ரயிலின் ஓட்டுநர், ரயிலின் வேகத்தை குறைத்தும் இயக்கி வருகின்றனர். இந்த கண்காணிப்பு அமைப்பு சிறப்பாக செயல்படுவதாக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார். செவ்வாய் அன்று இந்த அமைப்பு குறித்து மதுக்கரை பகுதியில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஏஐ அமைப்பு எப்படி இயங்குகிறது? - மதுக்கரை சரகத்தில் யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது ஏற்படும் விபத்துகள் கோவை கோட்டத்தில் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. மதுக்கரை சரகத்தில் சோழக்கரை பீட் மற்றும் போலம்பட்டி பிளாக் - 1 பாதுகாக்கப்பட்ட காடுகள் வழியாக இரண்டு ரயில் பாதைகள் செல்கின்றன.

கேரள வனப்பகுதியுடன் வாளையார் ஆற்றங்கரையில் எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்த வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. எதிர்பாராதவிதமாக, 2008 முதல் ரயில்கள் மோதிய விபத்துகளில் இளம் கன்றுகள் மற்றும் இளம் யானைகள் உள்பட இதுவரை 11 யானைகள் இறந்துள்ளன.

இரவு, பகல் மற்றும் அதிகாலையில் ரயில்வே வன ஊழியர்கள் மற்றும் காவலர்களை ஈடுபடுத்தி முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், ரயில்வே மற்றும் வனத்துறை இணைந்து சுரங்கப்பாதைகள் மற்றும் பிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், இதுபோன்ற சம்பவங்கள் குறையவில்லை.

இதற்கு பயனுள்ள தீர்வு காண, வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தன்னாட்சி கண்காணிப்பு முறையில் 24 மணி நேரமும் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து யானை வழித்தடங்களில் அறிமுகப்படுத்தி விபத்துக்களை முற்றிலும் தவிர்க்க அரசு முடிவு செய்தது.

கள ஆய்வுக்குப் பிறகு, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக மிகவும் பாதிக்கப்படக்கூடிய 7 கி.மீ. நீளமுள்ள ரயில் இருப்புப் பாதை கண்டறியப்பட்டு செயற்கை நுண்ணறிவு அமைப்பை நிறுவ அரசால் 7.24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பில், அனல் மற்றும் சாதாரண கேமராக்கள் பொருத்தப்பட்ட 12 உயரமான கோபுரங்கள், போலம்பட்டி வட்டம்-1 வனப்பகுதியில் முக்கிய இடங்களில் 500 மீ இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் யானைகள் கடக்கும் முக்கிய பகுதிகளை உள்ளடக்கி, ரயில் பாதைகளின் இருபுறமும் 150 மீ தூரத்துக்கு முன்கூட்டியே விலங்குகளின் நடமாட்டத்தை, செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் அறிய முடியும்.

உணரப்பட்ட சென்சார், தானாகவே வனத்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்படுகிறது. இது களத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை நிகழ்நேர அடிப்படையில் செயலாக்குகிறது. வனத்துறையின் களப்பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர், ஷிப்ட் முறையில் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிகின்றனர்.விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து, ரயில் லோகோ பைலட்களுக்கு அழைப்புகள், குறுஞ்செய்தி மற்றும் எச்சரிக்கைகள் மூலம் தகவல்கள் உடனடியாக தெரிவிக்கின்றனர்.

இது தவிர, இரண்டு தடங்களிலும் ஏதேனும் விலங்கு இருந்தால் லோகோ பைலட்கள் முன்கூட்டியே பார்த்து செயல்பட டிஜிட்டல் டிஸ்ப்ளே எச்சரிக்கைகள், ரயில் தடங்களில் வைக்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் விபத்துகளைத் தடுக்க வனத்துறையும், ரயில்வே அதிகாரிகளும் இணைந்து செயல்படுகின்றனர்.

இந்த செயற்கை நுண்ணறிவு உருவாக்கப்பட்ட தரவுகள் விபத்துக்களை தடுப்பது மட்டுமின்றி, யானைகள் நடமாட்டம், யானைகளின் நடத்தை, தனிப்பட்ட யானைகளின் விவரக்குறிப்பு மற்றும் எதிர்கால முடிவுகளை எடுப்பதற்கு தேவையான தகவல்களை அளிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்