திருச்சி: மலைக்கோட்டை மாநகர் என்று அழைக்கப்படும் திருச்சி மக்களவைத் தொகுதியில் திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ, அதிமுக சார்பில் ப.கருப்பையா, பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் ப.செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜேஷ் உட்பட மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தமிழகத்தின் மத்திய பகுதியாக விளங்கும் திருச்சியிலிருந்தே திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆகியோர் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகின்றனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 தினங்கள் இருந்தாலும், பிரச்சாரத்துக்கு இரு தினங்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.
தீவிர பிரச்சாரத்தில் ‘தீப்பெட்டி’ - மதிமுக வேட்பாளர் துரை வைகோ தேர்தல் அரசியலுக்கு புதியவர், சின்னம் புதியது என்றாலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கூட்டணி கட்சியினருடன் இணைந்து தேர்தல் வியூகங்களை வகுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு ஆதரவாக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எஸ்.ரகுபதி ஆகியோர் வேட்பாளருடன் சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மநீம தலைவர் கமல்ஹாசன், தி.க தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
» சென்னையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
» மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: கன்னியாகுமரி, கோவைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்கம், மாநகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சிறப்புத் திட்டம், திருச்சியில் முன்மாதிரி ரயில் நிலையம், மெட்ரோ ரயில் திட்டம் போன்றவற்றை நிறைவேற்றுவதாக வாக்குறுதிகளை அளித்துள்ளார். இவர் நேற்று ஸ்ரீரங்கம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இலக்கை நோக்கி ‘இரட்டை இலை’ - அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ப.கருப்பையா புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், மு.பரஞ்ஜோதி, வளர்மதி, முன்னாள் எம்.பி. ப.குமார், மாநில அமைப்புச் செயலாளர்கள் டி.ரத்தினவேலு, ஆர்.மனோகரன், மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி இருமுறை திருச்சியில் பிரச்சாரம் செய்துள்ளார். இதேபோல, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மற்றும் நடிகைகள் கவுதமி, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் இவருக்கு ஆதரவு திரட்டியுள்ளனர்.
கந்தர்வக்கோட்டையில் முந்திரி தொழிற்சாலை, காவிரி – குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுதல், பூக்களிலிருந்து வாசனை திரவியத் தொழிற்சாலை அமைத்து தருதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார். இவர் நேற்று பெரியகடை வீதி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மல்லுக்கட்டும் ‘மைக்’ - நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் ராஜேஷ் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டப்போராட்டம் நடத்தியவர். இவருக்கு ஆதரவாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்வாகி சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் தொகுதியின் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், இளைஞர்களின் வாக்குகள் தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் களத்தில் இறங்கியுள்ள ராஜேஷ், நேற்று புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பெண்கள் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேசிய வாழை ஆராய்ச்சி மையம் மூலம் புதிய சாகுபடி தொழில்நுட்பங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்தல் போன்ற வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
கூட்டணி பலத்தில் ‘குக்கர்’ - அமமுக சார்பில் போட்டியிடும் ப.செந்தில்நாதன் மாநகராட்சி கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் அமமுக பெற்ற ஏறத்தாழ 1 லட்சம் வாக்குகள் அளித்த நம்பிக்கையில், கூட்டணி பலத்துடன் தற்போது களத்தில் இறங்கியுள்ளார்.
திருச்சி, புதுக்கோட்டையில் மென்பொருள் பூங்கா அமைத்துதருவதாகவும், பெல் நிறுவனத்தை நம்பியுள்ள சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு கூடுதல் பணி வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
இவருக்கு ஆதரவாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் இவர், நேற்று புதுக்கோட்டை வடக்கு ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago