“மோடி, அமித் ஷாவின் தமிழக ‘நகர்வு’க்கு வடமாநில இழப்பே காரணம்” - முதல்வர் ஸ்டாலின் நேர்காணல்

By செய்திப்பிரிவு

சென்னை: "பாரதிய ஜனதா கட்சிக்கு வழக்கமாகக் கைகொடுத்து வந்த வடமாநிலங்களில் தற்போது மோடி அரசு கடும் எதிர்ப்பை சந்திக்கிறது. அதனால் தென்மாநிலங்களில் வெற்றி பெறமுடியுமா என மோடியும் அமித் ஷாவும் பாஜக தலைவர்களும் முயற்சி செய்கிறார்கள்." என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ‘தி இந்து’ நாளிதழக்கு அவர் அளித்த நேர்காணலில்...

இதுவரை எத்தனையோ தேர்தல்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்திருக்கிறீர்கள். கடந்தத் தேர்தல்களில் இருந்து இத்தேர்தலை வேறுபடுத்திக் காட்டுவது எது? இத்தேர்தலில் திமுகவுக்குச் சாதகமாக செயல்படும் அம்சங்கள் எவை?

யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட, யார் ஆட்சி தொடர்ந்து விடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது. குஜராத் மாடல், வளர்ச்சியின் நாயகன் என்ற முகமுடிகளுடன் இதுவரை மோடி தேர்தல் களத்தில் நின்றார். இந்த முகத்திரை அனைத்தும் கிழிக்கப்பட்டு இன்று ஊழல் மோடியாகக் காட்சி அளிக்கிறார். தனது சுயநல அரசியலுக்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் மோடி நாசப்படுத்தி விட்டார் என்பதை மக்கள் உணர்ந்து கோபப்படுகிறார்கள். மோடியை அதிகமாக விமர்சிக்கத் தேவையில்லை. அவரது ஆட்சி காலத்தில் அனைத்து வேதனைகளையும் அனுபவித்த மக்கள், அவர்களாக உணர்ந்துள்ளார்கள். இதுதான் திமுகவுக்கு மிகச் சாதகமாக இருக்கிறது.

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்ற ஜனநாயகத் தேர்தல் முறையே இருக்குமா என்பது சந்தேகம். இதுவரை இந்தக் குற்றச்சாட்டு மோடியால் மறுக்கப்படவில்லை. இந்தியா சர்வாதிகார நாடாக மாற்றப்படும் என்ற அச்சம் இந்த தேர்தலில் தான் முதல் முறையாக நாட்டு மக்களுக்கு வந்துள்ளது.

பிரதமர் ஆவதற்கு முன்னால் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாதது ஒரு பக்கம், தமிழ்நாட்டை வஞ்சித்தது மறு பக்கம். எனவே தான் இவரை மீண்டும் வர விட்டுவிடக் கூடாது என்பது களத்தில் தெளிவாகவே தெரிகிறது.

கடந்த தேர்தல்களைக் காட்டிலும் இத்தேர்தலில் பாஜக அதிக வாக்குகளைப் பெற்று முக்கிய சக்தியாகத் தமிழக அரசியலில் உருவெடுக்கும் என்ற கருத்து நிலவுகிறது. அது குறித்து உங்கள் கருத்து என்ன? பலமுறை பிரதமர் மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் தமிழகத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதனால் அக்கட்சிக்குப் பலமா?

பாரதிய ஜனதா கட்சிக்கு வழக்கமாகக் கைகொடுத்து வந்த வடமாநிலங்களில் தற்போது மோடி அரசு கடும் எதிர்ப்பை சந்திக்கிறது. அதனால் தென்மாநிலங்களில் வெற்றி பெறமுடியுமா என மோடியும் அமித் ஷாவும் பாஜக தலைவர்களும் முயற்சி செய்கிறார்கள். தென்மாநிலங்களில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பாஜக என்பது மக்களின் மனஉணர்வுக்கு நேரெதிரான கொள்கையைக் கொண்ட கட்சியாக உள்ளது. அதனால்தான் மோடியும் அவரது கட்சியினரும் நடத்திய ரோடு ஷோக்கள் படுதோல்வி அடைந்தன.

அதே நேரத்தில் இண்டியா கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களுக்கு பொதுமக்களின் வருகை பெருமளவில் உள்ளது. 2016க்குப் பிறகு அதிமுகவைப் பலவீனப்படுத்தி, தமிழ்நாட்டில் தன்னைப் பலப்படுத்திக்கொள்ளத் தொடர்ந்து முயற்சிக்கிறது பாஜக. அதற்காக ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்துகிறது. ஊடக வெளிச்சத்தில் கட்சி வளர்ந்ததாக ஒரு மாயை கட்டமைக்கப்படுகிறது. ஆனால் பாஜக தமிழ் மண்ணில் காலூன்ற முடியாது என்பதுதான் நிஜம்.

தமிழ்நாட்டுக்கு நல்லது செய்து 100 வாக்குகள் அதிகம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் துளிகூட தமிழக பாஜகவுக்கு இல்லை. மத்தியில் ஆட்சியில் இருப்பதால் அந்தக் கட்சிக்கு ஊடக வெளிச்சம் இலவசமாக கிடைக்கிறது. அவ்வளவு தான்.

பிரதமர் பலமுறை வந்திருக்கிறார். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரேயொரு முறைதான் வருகிறார். தமிழகத்தில் முழுக்க முழுக்கத் தேர்தல் பிரச்சாரத்தை திமுகவிடம் காங்கிரஸ் ஒப்படைத்து விட்டதா?

அப்படியானால் என்ன அர்த்தம்? மோடி பத்து தடவை வருவதும், ராகுல் ஒரு தடவை வருவதும் ஒன்று தான்! 'ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி' என்று சொல்வதற்கு இது தான் மிகப் பொருத்தமான உதாரணம்.

நாட்டில் நிலவிய எல்லா அரசியல் நடவடிக்கைகளிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவைத் தெரிவித்து வந்த அதிமுக, இத்தேர்தலில் அக்கட்சியுடன் கூட்டணி சேர மறுத்து விட்டதால், அக்கட்சிக்கு சாதகமான விளைவுகள் ஏற்படுமா?. பாஜகவுக்கு அடிமையாக அதிமுகவும் அதன் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் இருக்கிறார் என்ற குற்றச்சாற்றை அவர் பொய்யாக்கியிருக்கிறாரா?.

பாஜக தலைமையின் அனுமதியுடன் பழனிசாமி அரங்கேற்றும் ஓரங்க நாடகம் தான் தனி அணி என்பது ஆகும். பாஜகவுக்கு அடிமை மட்டுமல்ல, கொத்தடிமை தான் பழனிசாமி என்பது தான் உண்மை. கூட்டணியில் இருக்கும் போது வாய்மூடி இருப்பதை விடக் கொடுமையானது, கூட்டணியில் இல்லாத போதும் வாய்மூடிக் கிடப்பதாகும். மோடி, அமித்ஷாவுக்கு எதிராக பழனிசாமியால் கட்சியோ, அரசியலோ நடத்த முடியாது. அவரை நான்காண்டுகள் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார அனுமதித்தவர்கள் அவர்கள் இருவரும் தான். ரெய்டுகளுக்கு பயந்து பம்மிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. உலகத்திலேயே ஒரு கட்சித் தலைவரைப் போய் பார்த்துவிட்டு வந்து, அவர்களோடு கூட்டணி இல்லை என்று சொன்னவர் பழனிசாமியாகத் தான் இருக்கும். அப்படிச் சொல்லச் சொன்னார் அமித்ஷா.

அதிமுக கூட்டணியில் சேராததால் பல்முனைக் கூட்டணி உருவாகியுள்ளது. அதுதான் திமுகவுக்கு சாதகம். அதிமுகவும் பாஜகவும் சேர்ந்து களம் கண்டால் திமுக திணறியிருக்கும் என்ற கருத்து நிலவுகிறதே?

தேர்தலை கள நிலவரம் வைத்து கணிக்க வேண்டுமே தவிர, கற்பனைகளை வைத்து கணிக்கக் கூடாது. ரிசல்ட் வருவதற்கு முன்பே தோல்விக்கான காரணத்தை எதிரணியினர் கண்டுபிடித்து வைத்துள்ளார்களா?. 2019ம் ஆண்டு தேர்தல் களத்தில் நீங்கள் சொல்பவர்கள் அனைவரும் ஒன்றாகத் தானே இருந்தார்கள்?. 2021 சட்டமன்றத் தேர்தலிலும் ஒன்றாகத் தானே இருந்தார்கள்? தோல்வி தானே கிடைத்தது?.

பாஜக கூட்டணி பிரதமர் மோடியை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்கிறது. ஆனால் உங்கள் கூட்டணியில்அப்படி ஒரு முகம் இல்லை. இதனால் சாதகமா பாதகமா?. ஏனென்றால் பல்வேறு கூட்டணிக் கட்சிகளை அடக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணி தந்திரங்கள் முழுமையாக ஆட்சிக் காலத்தை முடிக்காமல் இடையில் கவிழ்ந்து போனதல்லவா?

'இண்டியா' கூட்டணி தான் கூட்டணியின் முகம் ஆகும். பாசிச பாஜகவை வீழ்த்துவோம் என்பது தான் எங்களது குணம் ஆகும். இவை இரண்டுக்கும் இந்திய நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எல்லா தேர்தல்களிலும் பிரதம வேட்பாளர்கள் முன்னிலைப்படுத்தப்படுவது இல்லை என்பதே இந்தியத் தேர்தல் வரலாறு ஆகும்.

கூட்டணி அரசுகள் குறித்து கேட்கிறீர்கள். நீங்கள் வசதியாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியைத் தவிர்த்துவிட்டீர்கள். 2004 தேர்தலின் முடிவுகள் வரும் வரை, இந்தியா ஒளிர்கிறது எனப் பிரச்சாரம் செய்த பாஜக தான் வெற்றி பெறும் என்று ஊடகங்கள்-பத்திரிகைகள் தங்கள் கணிப்புகளை வெளியிட்டன. ஆனால், தேர்தல் முடிவுகளில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையிலான, திமுக பங்கேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. யார் பிரதமர் என்று சொல்லாமலேயே கிடைத்த அந்த வெற்றியினைத் தொடர்ந்து மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமரானார். அடுத்த பத்தாண்டுகள் அவர் ஆட்சி செய்தார் என்பதுதான் வரலாறு. 2004ல் உருவான அந்த வரலாறு, 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் உருவாகும்.

இத்தேர்தலில் போட்டி என்பது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதை நீங்கள் வரவேற்றீர்கள். தமிழக அரசியலில் மூன்றாவது ஒருகட்சிக்கு இடம் இல்லையா?

ஜனநாயகத்தில் எல்லாக் கட்சிகளுக்கும் இடம் உண்டு. எத்தனையோ கட்சிகள் களத்தில் இருக்கிறது. நேரடிப் போட்டி யாருக்கு என்று கேட்டபோதுதான் திமுக - அதிமுக என்றேன். அதற்காக மற்ற கட்சிகளே இருக்கக் கூடாது எனச் சொல்லவில்லை.

கள நிலவரத்தைப் பார்க்கும் போது தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு ஆதரவான ஆச்சரியமான சில முடிவுகளை வெளிப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம் மக்களிடம் எடுபடுகிறதா? உங்கள் கருத்து என்ன ?

அதிமுகவுக்கு ஆச்சரியத்தைவிட அதிர்ச்சிதான் அதிகமாக இருக்கும். இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக்கொள்ளக்கூடிய அளவில் எடப்பாடி பழனிசாமியின் அதிமுக செயல்பட்டாலே அவர்கள் தங்கள் கட்சியை வளர்க்க நினைக்கிறார்களா, பாஜகவுக்கு விட்டுத் தரும் கள்ளக்கூட்டணியை நடத்துகிறார்களா என்பது தெளிவாகிவிடும்.

பழைய ஓய்வுதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று திமுக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் அரசு ஊழியர்களிடம் ஆசிரியர்களிடமும் அதிருப்தி நிலவுகிறது. போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஓய்வுக்கால சலுகைகள் வழங்கப்படவில்லை. இந்த ஊழியர்களின் நிலைபாடு தேர்தலில் திமுகவுக்கு எதிராக இருக்குமா?

அரசு ஊழியர்களின் நண்பன் என்றைக்கும் தி.மு.கழகம்தான். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி என அதிமுகவின் முதலமைச்சர்கள் அரசு ஊழியர்களுக்கு எதிராக எப்படி செயல்பட்டார்கள், அவர்களை எப்படியெல்லாம் சிறைப்படுத்தி, சித்திரவதை செய்தார்கள். ஒரே நள்ளிரவில் லட்சக்கணக்கானவர்களை டிஸ்மிஸ் செய்தார்கள் என்பதை எல்லாம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நன்கு அறிவார்கள்.

திருச்சி, கரூர் போன்ற தொகுதிகளில் திமுகவுக்கும் கூட்டணியினருக்கும் இடையே கருத்தொற்றுமை இல்லை என்று கூறப்படுகிறது. வேலூரில் உட்கட்சிப் பிரச்சினை வெளிப்பட்டுள்ளது. இது குறித்து…

அவரவர் உரிமைகளுக்கு மதிப்பளித்து, தற்போது எல்லா தொகுதிகளிலும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாற்பதும் நமதே, நாடும் நமதே என்பது நீங்கள் குறிப்பிட்ட தொகுதிகளையும் உள்ளடக்கிய மகத்தான வெற்றிதான். அனைத்துத் தொகுதிகளிலும் நிற்பது நான் தான் என்பதை மனதில் வைத்து பணியாற்ற நான் கழக உடன்பிறப்புகளுக்கு உத்தரவிட்டேன். அவர்களும் அப்படித்தான் செயல்பட்டு வருகிறார்கள்.

பாஜகவின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தீர்களா?

வாரண்டிகள் இல்லாத கேரண்டிகளைக் கொடுப்பது மோடியின் வழக்கம். பழைய வாக்குறுதிகளையே கட் அண்ட் பேஸ்ட் முறையில் மீண்டும் சொல்லி இருக்கிறார்கள். அவர் தான் ஆட்சிக்கு வரப்போவது இல்லை. எந்தக் கேரண்டியைக் கொடுத்தால் என்ன என்று மக்களும் அலட்சியப்படுத்தி விட்டார்கள். பாஜக தேர்தல் அறிக்கையை மக்கள் மதிக்கவே இல்லை.

'இந்தியா' என்ற சொல்லையே நீக்கிவிட்டு அறிக்கையை தயாரித்துள்ளார்கள். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள், பாஜகவை நீக்கிவிடுவார்கள்.

பாஜக 400, 370 என்கிறார்களே?

இப்போது அவர்களே அப்படிச் சொல்வது இல்லை. தெற்கைப் போலவே வடக்கிலும் பாஜக மிகக்கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருவதை செய்திகள் மூலமாக அறிகிறோம். பாஜக பெல்ட் என்று சொல்லப்படும் மாநிலங்கள் அனைத்திலும் நடைபெறும் உள் மாநிலப் பிரச்சினைகள், அந்த பெல்ட்டை அறுத்துவிட்டது. இது தேர்தல் முடிவுகளில் தெரியும்.

யார் பிரதமராக வருவார் என நினைக்கிறீர்கள்?

மக்களை மதிக்கும், மாநிலங்களை மதிக்கும், ஜனநாயகத்தை மதிக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கும் புதிய பிரதமர் உட்காருவார்.

மோடி மீது உங்களுக்கு ஏன் இத்தனை கோபம்?

தனிப்பட்ட நரேந்திர மோடி மீது எனக்கு கோபம் இல்லை என்றாலும், அவர் தவறான தத்துவங்களின் பிரதிநிதியாக இருக்கிறார். பிரதமராக இருக்கும் அவரது எண்ணங்கள், இந்திய அரசியலமைப்புக்கும் - ஏழை எளிய பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிரானவையாக உள்ளன. ஒற்றை ஆட்சி மன்னராட்சி நாடாக மாற்றி, மாநிலங்களை அழிப்பவராக இருக்கிறார். அதனால் அவரை எதிர்க்க வேண்டியதாக இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்புவரை அவரோடு அரசு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளேன். இயல்பாக பேசி இருக்கிறார். எனவே, அவர் மீது தார்மீக கொள்கை கோபங்கள் தான் நிறைய உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE